’திருவின் குரல்’ விமர்சனம்

149

நடிகர்கள் : அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா, அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மஹேந்திரன்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : சிண்டோ பொடுதாஸ்
இயக்கம் : ஹரிஷ் பிரபு
தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ் – சுபாஸ்கரன்

அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், அருள்நிதி வாய் பேச முடியாத காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’திருவின் குரல்’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

வாய்பேசமுடியாத காது கேளாதவரான அருள்நிதி, தனது தந்தை பாராதிராஜாவுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கும் அவரது அத்தை மகள் ஆத்மிகாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், விபத்தில் சிக்கி பாரதிராஜா படுகாயம் அடைகிறார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு பணியாற்றுபவர்களால் அருள்நிதிக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிறகு அந்த பிரச்சனையால் அருள்நிதியின் குடும்பத்திற்கே ஆபத்து உருவாக, அந்த ஆபத்தில் இருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே படத்தின் மீதிக்கதை.

தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வரும் அருள்நிதி, இந்த படத்தில் நடிப்பின் உச்சத்தை தொட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். வசனம் பேசி நடிப்பதை விட, பேசாமல் நடிப்பது மிக சவாலானது. அந்த சவாலை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டு ஒட்டு மொத்த படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார் அருள்நிதி. உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையின் நிலையை பார்த்து பதறுவது, குடும்ப நபர்களுக்கு ஆபத்து வருவதை கண்டு கோபப்படுவது என்று ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் அசத்தியிருக்கும் அருள்நிதி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

அருள்நிதியின் அப்பாவாக நடித்திருக்கும் பாரதிராஜா, உடல்நிலை சரியில்லாத வேடத்தில் மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார். அவருடைய அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா, கதையோடு பயணிக்கும் வேடத்தில் நடித்து மனதில் நிற்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மஹேந்திரன் ஆகியோரது கொடூரமான நடிப்பு காட்சிகளின் கொடூரத்தை நம்மிடம் எளிதில் கடத்துகிறது.

ஒளிப்பதிவாளர் சிண்டோ பொடுதாஸ் படம் முழுவதும் பதற்றமான சூழல் இருக்கும்படி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். நாயகனின் உணர்வுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பவர் சண்டைக்காட்சிகளை மிக நுட்பமாக படமாக்கி ரசிக்க வைக்கிறார்.

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கு விதமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் சேர்த்திருக்கிறது.

வழக்கமான கதையாக இருந்தாலும், கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு மூலம் அதை மாறுபட்ட முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஹரிஷ் பிரபு, அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

திரைக்கதை மற்றும் காட்சிகள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது, ஆக்‌ஷன் காட்சிகளை குடும்ப சூழலோடு காட்சிப்படுத்தியிருப்பது போன்றவை படத்திற்கு பலம் சேர்த்தாலும், வில்லன்களின் தொடர் கொலைகள் மற்றும் தேவையில்லாத காட்சிகளின் நீளம் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அந்த குறையை தவிர்த்து விட்டு பார்த்தால் ‘திருவின் குரல்’ மக்கள் கொண்டாட தகுதியான படம்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.