நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெல்வாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், பப்லு பிரித்விராஜ், கல்ப லதா, கல்யாணி நட்ராஜன், ஆடுகளம் நரேன், மைம் கோபி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத்
இயக்கம் : சந்து மொண்டேட்டி
தயாரிப்பு : கீதா ஆர்ட்ஸ் – அல்லு அரவிந்த், பன்னி வாஸ்
நாகை சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியாகியிருக்கும் ‘தண்டேல்’ வென்றதா? அல்லது வீழ்ந்ததா?, விமர்சனத்தை பார்ப்போம்.
நாக சைதன்யா மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்பவர்களின் உயிர் உத்திரவாதம் இல்லை என்பதால், தன் காதலன் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை. அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிடும்படி சொல்கிறார். நாயகியின் பேச்சையும் மீறி நாக சைதன்யா மீன் பிடிக்க செல்கிறார். அப்போது அவரும், அவருடன் சென்ற மீனவர்களும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுவதால், பாகிஸ்தான் கடற்படை கைது செய்கிறது. மறுபக்கம் சாய் பல்லவிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாக சைதன்யா பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானரா? சாய் பல்லவியை திருமணம் செய்தாரா ? ஆகிய கேள்விகளுக்கான விடையை உண்மை சம்பவத்துடன், கற்பனையையும் சேர்த்து சொல்வது தான் ‘தண்டேல்’.
மீனவர் கதாபாத்திரத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கும் நாக சைதன்யா பல பரிணாமங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதலுக்காக உருகுவது, மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன் நிற்பது, பாகிஸ்தான் சிறையில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் அதிரடி காட்டுவது, என படம் முழுவதும் அவரது பணி நியாயம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
காதலுக்காக உருகினாலும், பேச்சை கேட்காமல் போன காதலனை கைவிட முடிவு செய்யும் சாய் பல்லவி, அதே காதலனை காப்பாற்றுவதற்காக போராடுவது, காதலன் இடத்தில் இருந்து மீனவ குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்ப்பது என்று நாயகனுக்கு இணையாக வலம் வந்து கவனம் ஈர்க்கிறார்.
பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ் போன்ற தெலுங்கு சினிமா முகங்களுடன், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ், மைம் கோபி ஆகிய தமிழ் சினிமா முகங்களும் இணைந்து கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், கடல் காட்சிகள் அனிமேஷன் என்பது அப்பட்டமாக தெரிவதோடு, நாயகனின் கடற்கரை கிராமம் மற்றும் அங்கிருப்பது கடலா? என்ற கேள்வியையு எழ வைக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு கார்த்திக் தீடா எழுதியிருக்கும் கதையில், உண்மையை விட கற்பனையை அதிகமாக சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி.
ஆந்திராவில் இருந்து குஜராத் வரை மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக்கொண்டு அந்நாட்டு கடற்படையிடம் சிறைபடுவது தான் திரைக்கதையின் முக்கியமாக இருந்தாலும், அதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லாமல், முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும், நாயகனை முன்னிலைப்படுத்தியும் சொல்லியிருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், மீனவர்களின் வாழ்க்கை, அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது, காதல் காட்சிகளை படமாக்கியது, கடலில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் கையாண்டு பலவீனத்தை பலமாக மாற்றி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ரேட்டிங் 3/5
Comments are closed.