சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இரு தினங்களுக்குமுன் தான் இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி, படம் பார்த்து முடித்ததுமே இயக்குனர் பாலுமகேந்திராவையும் சசிகுமாரையும் போனில் அழைத்து நீண்டநேரம் பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 28 வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். தனது ‘கம்பெனி புரடக்ஷன்’ சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குனர் சசிகுமார். ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா, இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ளது இந்தப்படம். இந்தப்படத்தை உலக திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக, இதன் வெளிநாட்டு உரிமையை யாருக்கும் விற்காமல் வைத்திருக்கிறார் சசிகுமார்.