பரபரப்புக்கு திரி கொளுத்திய ‘தகடு’ இசைவெளியீட்டு விழா..!

192

Thagudu Audio Launch (1)

இன்றைய சூழலில் சினிமாவை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக ஆளுக்கொரு யோசனைகளை கூறத்தான் செய்கிறார்கள்.. அதனை வெளிப்படுத்தும் மேடைகளாக அவ்வப்போது இசைவெளியீட்டு விழாக்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. இன்று நடைபெற்ற ‘தகடு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட திரையுலக வி.ஐ.பி.கள் அதுபோன்று ஒருவருக்கொருவர் கருத்துக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது சின்ன பட்ஜெட் படங்களை காப்பாற்றவேண்டும் என்றால் தமிழ்நாடு முழுதும் சிறிய அளவிலான தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்றார்.. அதுமட்டுமல்ல, எல்லாமே டோர் டெலிவரியாகிவிட்ட இந்த உலகத்தில் படங்களையும் வீடுதேடிச்சென்று மார்க்கெட்டிங் செய்யவேண்டும் என்றும் கூறினார்..

ஆனால் அடுத்து பேசிய தயாரிப்பளார் பட்டியல் சேகரோ, “செல்வமணி பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம்.. முதலில் டிவி சீரியல்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும்.. அவற்றில் இழையோடும் அதீத ஆபாசம், வன்முறையை கட்டுப்படுத்த சீரியல்களுக்கும் சென்சார் கொண்டுவரவேண்டும்.. அப்போதுதான் சீரியல்களின் ஆதிக்கம் குறைந்து மக்கள், குறிப்பாக பெண்களும் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று புதிய கோணத்தை காட்டினார்..

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் தேனப்பன் பேசும்போது, இன்றைய சூழலில் சேனல் நடத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தான்.. அதனால் இந்த சீரியல்களுக்கு சென்சார் சான்றிதழ் வேண்டும் என்கிற விஷயத்தில் அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை போல தெரிகிறது. அப்படி வந்தால் நன்றாக்கத்தான் இருக்கும்.. அதைவிட நாம் நல்ல படங்களாக கொடுத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த தகடு’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்தபோது, ஆவி, அமானுஷ்யம், வரலாற்று கதை, காடு இவற்றுடன் கல்லூரி இளைஞர் பட்டாளத்தை இணைத்து ஒரு திகில் படமாக உருவாக்கியுள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இந்தபாடத்தை தங்கதுரை என்பவர் இயக்கியுள்ளார்.

Comments are closed.