
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் தென்னிந்திய இசைவானின் துருவ நட்சத்திரம். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய சாதனையாளர். நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களுக்கு எல்லாவிதமான பாடல்களையும் பாடிய இசைச் சித்தர். இன்று தனது 69வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 50 ஆண்டுகள் கழிந்தும் கூட தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்து வருகிறார். நான்கு தலை முறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் யார் என்றால் அவர் எஸ்.பி.பி மட்டும் தான்.
எண்பதுகளில் இசைக்கடவுள் இளையராஜாவும், எஸ்.பி.பி.யும் இணைந்து உருவாக்கியப் பாடல்கள் பட்டிதொட்டிகளில் பட்டையை கிளப்பியது என்று சொன்னால் அது மிகையாகாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமான ரோஜாவில் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் தான் ஏ.ஆர்.ரகுமானை உச்சத்திற்கு இட்டுச் சென்ற காரணங்களில் ஒன்று என்பது உலகறிந்தது.
ரஜினி படங்களில் ஓப்பனிங் பாடலை பாடும் ஆஸ்தான பின்னணி பாடகர் பதவியும் எஸ்.பி.பிக்கு மட்டும்தான். தமிழ் சினிமாவின் அதிக பாடல்களை பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது சிறப்பு.. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பாடல்கள் பாடியிருக்கும் எஸ்.பி.பி. ஒரு சாதனை நாயகன்தான்.
ஏறக்குறைய இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். இதுவரை மொத்தம் ஆறு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் திரைப்படங்களில் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
வயதாக ஆக அவருடைய குரலில் இளமை மெருகேறிக் கொண்டே இருக்கிறதே தவிர இறங்கவில்லை. குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்க பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக்கூடியவர் எஸ்.பி.பி.
இன்று பிறந்தநாள் காணும் எஸ்.பி.பிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.