“சத்தமே இல்லாத இடத்துக்கு போகவேண்டும்” ; சவுன்ட் இஞ்சினியர் உதயகுமாரின் ஏக்கம்…!

200

udhayakumar
ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.

சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்துவிட்டு, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலிப்பதிவும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது.

இந்த பெருமைக்கு சொந்தக்காரர் ‘விசாரணை’யில் ஒலிப்பதிவுப் பொறியாளராகப் பணியாற்றியிருக்கும் டி.உதயகுமார் தான். ‘ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.

இவரது பணிதான் என்ன..? எடுக்கப்பட்ட படத்துக்கோ, காட்சிகளுக்கோ ஒலி சேர்ப்பது முக்கிய பணி. ஒலிப்பதிவில் பல வகைகள் உள்ளன. பாடல் ஒலிப்பதிவு, பின்னணி ஒலிப்பதிவு, டப்பிங் எனப்படும் வசனங்களுக்கான குரல் ஒலிப்பதிவு, , ஸ்பெஷல் எபெக்ட்ஸ் எனப்படும் சிறப்பு சத்தங்கள் , இறுதியாக பைனல் மிக்ஸிங் எனப்படும் ஒலிக்கலவை எல்லாவற்றையும் கலந்து இணைப்பது என ஒலிப்பதிவில் பல வகைகள் உண்டு. எல்லா அனுபவமும் இருந்தால்தான் இந்த வேலையைச் செய்ய முடியும் இந்த பைனல் மிக்ஸிங் பணியைத்தான் இவர் இப்போது மேற்கொண்டு வருகிறார்.

‘பொல்லாதவன்’ படம் முதல் ‘விசாரணை’ வரை இவர் பணியாற்றி இருக்கும் 300 படங்களிலும் 300 விதமான அனுபவங்கள் கிடைத்தன என்கிறார் உதயகுமார். “பாரதிராஜா சார் ஒலியில் வட்டார மொழி சரியாக வர வேண்டும் பிசிறு தட்டக் கூடாது என்பார். இது அவரது கோணம். பாக்யராஜ் சார் வசனம் சரியாக இருக்க வேண்டும் என்பார். இது அவரது அணுகுமுறை. பி.வாசு சார் ஒலி நேர்த்தியாக தெளிவாக இருக்க வேண்டும் என்பார். இப்படி இந்தக்கோணமும் பார்வையும் அணுகுமுறையும் அவரவர்க்கு மாறுபடும்” என்கிறார் உதயகுமார்..

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் அருகிலிருந்து பணியாற்றியபோது, ஆயிரம் படங்கள் என்கிற சாதனை படைத்த அவரே “ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொள்கிறேன்’ என்று சொன்னார். அப்படித்தான் நானும்… இன்னமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறார் உதயகுமார் தன்னடக்கமாக.

‘விசாரணை’ படத்துக்காக இரண்டுவிதமான ஒலிப்பதிவுகளை இவர் மேற்கொள்ள வேண்டி இருந்ததாம். முதலில் படவிழாக்களுக்கான வெர்ஷன் தயார் செய்யப்பட்டது. பிறகு தியேட்டர்களில் திரையிட வேறொரு வெர்ஷன் தயார் ஆனது. “கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் வேலை செய்தோம். அதற்கு ‘வெனிஸ்’ விழாவில் விருது கிடைத்ததும் நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்த உணர்வு ஏற்பட்டது” என்கிறார் உதயகுமார்.

கடந்தவாரம் வெளியான ‘மிருதன்’, ‘சேதுபதி’, இந்தவாரம் வெளியாக இருக்கும் ‘ஆறாது சினம்’ படங்களின் ஒலிப்பதிவாளர் இவர்தான். இதுதவிர, சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ முடிந்துவிட்டது. ஜீவா நடிக்கும் ‘போக்கிரிராஜா’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’, இளையராஜாவின் இசையில் புதியவர் லெனின் பாரதி இயக்கும் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ போன்ற படங்கள் பணியில் உள்ளனவாம்..

ஒரு திரைப்படத்திற்காக நடக்கும் பல கட்ட பணிகளில் இவருடைய பணிதான் மிக கடினமானது.. நெருக்கடியானது.. காரணம் என்ன..? அவரே சொல்கிறார்.. “படப்பிடிப்பு முடிந்து கடைசியில் எங்களிடம்தான் வந்து நெருக்கடி கொடுப்பார்கள். சீக்கிரம் முடித்துக் கொடுங்கள் என்று அழுத்தம் கொடுப்பார்கள். வீட்டை மறந்து இரவு பகல் என்று வேலை பார்த்து முடிக்க வேண்டும். குடும்பத்தைக் கவனிக்க முடியாது. வீட்டை பிரிந்து இருப்பது போல உணர்வோம். எங்கள் பணியில் உள்ள பணிச்சுமை, மன அழுத்தம் என் மனைவிக்குப் புரியும். ஓய்வான சமயங்களில் எங்காவது சத்தமே இல்லாத வாகனங்கள் இல்லாத பகுதிக்குப் போகலாம் என்று தோன்றும். ஆனால் அது மனதில் மட்டுமே விருப்பமாக இருக்கும் யதார்த்தத்தில் முடியாது. ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம்” என்கிறார் ஒருவித ஏக்கத்துடன்.

Comments are closed.