மூன்று வருடத்துக்கு ஒரு முறைதான் இந்தமாதிரி அதிசயம் நடக்கும் போல தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த அதிசயத்தை அரங்கேற்றுவது மலையாள சினிமாவாகத்தான் இருக்கிறது. 2007ல் மம்முட்டி நடித்து வெளியான ‘கத பறயும்போள்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன்பிறகு 2010ல் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான ‘பாடிகார்டு’ இதே போன்றதொரு அதிர்வலையை ரீமேக் ட்ரெண்டில் ஏற்படுத்தியது. அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இவற்றுடன் பெங்காலியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.
இப்போது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்’ அந்த பொறுப்பை ஏற்றிருக்கிறது. இதன் தமிழ் ரீமேக்கில் கமல் நடிப்பதும், மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்குவதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. தெலுங்கை பொறுத்தவரை, இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ள நடிகை ஸ்ரீபிரியாவே இந்தப்படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார். ஹீரோவாக நடிப்பவர் வெங்கடேஷ்.
அதேபோல இந்தியிலும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் தொடர்பான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். மோகன்லால் கேரக்டரில் நடிக்க அஜய் தேவ்கனை அணுகியிருக்கிறார்கள். படத்தில் 18 வயது பெண்ணுக்கு தந்தையாக நடிக்க வேண்டியிருப்பதால் இன்னும் அவரிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை. இதுதவிர கன்னடத்திலும் இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘த்ரிஷ்யம்’ ஒரு பெரிய ரவுண்டு வர தயாராகிவிட்டது.