‘சத்தியவான் சாவித்திரி’ விமர்சனம்

5

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், பாலசரவணன், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தரராஜன்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட்
இயக்கம் : பிரவீன் எஸ்.விஜய்
தயாரிப்பு : ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் – வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்

கணவனுக்காக எமனிடமே போராடிய சாவித்திரியின் புராணக் கதையை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நீதிமன்றப் பின்னணியில் ஒரு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக மாற்றியிருக்கிறது ‘சத்தியவான் சாவித்திரி’.

சட்டப்படிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ், பிரபல வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். தனது குருவையே நீதிமன்றத்தில் எதிர்கொண்டு முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவதன் மூலம் வழக்கறிஞர் உலகின் கவனத்தை ஈர்க்கிறார். ஆனால், வாழ்க்கை அவருக்கு அடுத்தடுத்து சோதனைகளை முன்வைக்கிறது. எதிர்பாராத உடல்நலப் பாதிப்பால் கருவை இழக்கும் அவர், உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார். இதனால் வழக்கறிஞர் தொழிலுக்கு முழுக்கு போட முடிவெடுத்து, மீண்டும் தாய்மையடையும் கனவுடன் வாழ்க்கையை நகர்த்துகிறார்.

அப்போது அவரது கணவர் சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத் கொலை வழக்கில் சிக்கி காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். கணவன் குற்றமற்றவர் என்பதை நம்பும் கீர்த்தி, அவரை மீட்பதற்காக மீண்டும் வழக்கறிஞர் அங்கியை அணிகிறார். ஒருகாலத்தில் தன்னிடம் தோல்வியடைந்த மிஷ்கினே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராகக் களமிறங்குவது, மோதலை இன்னும் தீவிரமாக்குகிறது. ஒரு பக்கம் கணவனின் விடுதலை, மறுபக்கம் தனிப்பட்ட பகை உணர்வுடன் காத்திருக்கும் அனுபவம் மிக்க எதிராளி. இந்தச் சவால்களை கீர்த்தி எப்படி எதிர்கொள்கிறார்? கொலை வழக்கின் உண்மையான பின்னணி என்ன? என்பதற்கான விடைகளே படத்தின் மீதிக்கதை.

சாவித்திரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரத்தின் உணர்வுகளை மிக இயல்பாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். கணவனைப் பிரிந்துவிடக் கூடாது என்ற பதற்றம், வாழ்க்கையில் சந்தித்த இழப்புகளின் வலி, நீதிமன்றத்தில் எதிராளியை எதிர்கொள்ளும் துணிச்சல் என வெவ்வேறு உணர்வுகளை முகபாவனைகளிலேயே கடத்துகிறார். குறிப்பாக, உணர்ச்சிகளுக்கும் சட்டப் போராட்டத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பெண்ணாக அவரது நடிப்பு படத்திற்கு முக்கியமான பலமாக அமைந்திருக்கிறது.

மிஷ்கின் வழக்கறிஞராகத் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் தனி கவனத்தைப் பெறுகிறது. வழக்கமான வில்லன் பாணியைத் தவிர்த்து, தனது தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் நிதானமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் சேர்க்கிறார். குறிப்பாக நீதிமன்றத்தில் கீர்த்தி சுரேஷுடன் அவர் நடத்தும் வார்த்தைப் போர் படத்தின் சுவாரஸ்யமான பகுதிகளில் ஒன்று.

கணவராக வரும் சாருகேஷ், காதல், பாசம், பிரிவு, குற்றச்சாட்டால் ஏற்படும் மன உளைச்சல் என தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்தியின் உதவியாளராகப் பயணிக்கும் பாலசரவணன், தீவிரமான கதையோட்டத்திற்கு இடையில் நகைச்சுவை மூலம் சிறிய ஆசுவாசத்தை வழங்குகிறார்.

ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டின் பங்களிப்பு படத்தின் பரபரப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கேமரா கோணங்களும், ஒளி அமைப்புகளும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதலை அழுத்தமாக உணரச் செய்கின்றன. விசாரணை தொடர்பான காட்சிகளிலும், கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் தருணங்களிலும் ஒளிப்பதிவு கதை சொல்லலுக்கு துணை நிற்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஏற்ற வகையில் பயணிக்கிறது. பதற்றமான தருணங்களில் இசையின் தாக்கம் நன்றாக இருந்தாலும், பாடல்கள் பெரிய அளவில் மனதில் பதியவில்லை. உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் பயன்படுத்திய மென்மையான இசை, கதையின் உணர்வுகளோடு பார்வையாளர்களை இணைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கதையின் இறுதிக்கட்டத்தில் வெளிப்படும் முக்கியமான திருப்பத்தை சரியான தருணத்தில் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சில காட்சிகள் யூகிக்கக்கூடியதாகவும், நம்பகத்தன்மை குறைந்ததாகவும் தோன்றினாலும், இறுதியில் திரைக்கதையின் போக்கையே மாற்றும் திருப்பம் படத்தின் மீதான பார்வையை மாற்றுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் எஸ்.விஜய், எளிதில் யூகிக்கக்கூடிய ஒரு குடும்பப் பின்னணிக் கதையை எடுத்துக்கொண்டு, அதை நீதிமன்றப் போராட்டம் மற்றும் குற்றப் புலனாய்வு இணைந்த திரில்லராக மாற்ற முயற்சித்திருக்கிறார். கணவனைக் காப்பாற்றப் போராடும் மனைவி என்ற வழக்கமான கதைக்கருவுக்கு, அவர் கொடுத்திருக்கும் திரைக்கதை வடிவமும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமும் படத்திற்கு தனித்துவம் சேர்க்கின்றன.

முதல் பாதியில் சில காட்சிகள் செயற்கைத்தனமாகவும், நீதிமன்ற வாதங்கள் நாடகத்தன்மையுடனும் அமைந்திருக்கின்றன. கீர்த்தி சுரேஷின் வழக்கறிஞர் திறமை வெளிப்படும் சில தருணங்களிலும் இயல்புத்தன்மை குறைவாகவே இருக்கிறது. இதனால் தொடக்கத்தில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கொலை வழக்கின் பின்னணியை மையமாக வைத்து திரைக்கதை வேறு திசையில் பயணிக்கத் தொடங்குகிறது. அதுவரை உருவாக்கப்பட்ட சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் எதிர்பாராத கோணத்தில் பதில் கிடைக்கும் விதம் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் வெளிப்படும் திருப்பம், முந்தைய குறைகளையும் ஓரளவுக்கு மறக்கச் செய்துவிடுகிறது.

வழக்கமான நீதிமன்றக் கதையாகத் தொடங்கி, எதிர்பாராத மர்ம முடிச்சுடன் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது ‘சத்தியவான் சாவித்திரி’. கீர்த்தி சுரேஷின் உணர்வுப்பூர்வமான நடிப்பும், மிஷ்கினின் தனித்துவமான திரை ஆளுமையும், இரண்டாம் பாதியின் சுவாரஸ்யமான திருப்பமும் படத்தை ரசிக்க வைக்கின்றன.

ரேட்டிங் 3.6/5

Comments are closed.