சைத்தான் – விமர்சனம்

168

saithan

விஜய் ஆண்டனி நடித்த படங்கள் என்றாலே பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போட்டுள்ளதா அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘சைத்தான்’..?

மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் விஜய் ஆண்டனி.. அனாதையான அருந்ததியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் திருமணத்துக்குப்பின் விஜய் ஆண்டனிக்கு மட்டுமே கேட்கும் ஒரு குரல் அவரை அவ்வப்போது டார்ச்சர் பண்ணுகிறது.. அதுவே அவரது நண்பன் முருகதாஸின் மரணத்துக்கும் காரணமாகி விடுகிறது.. மேலும் விஜய் ஆண்டனியை ஒரு பைத்தியக்காரன் அளவுக்கு மாற்றிவிடுகிறது..

விஜய் ஆண்டனியின் பாஸ் ஒய்.ஜி.மகேந்திரன் அவரை மனோதத்துவ நிபுணரான கிட்டியிடம் அழைத்து வருகிறார்.. அவர் விஜய் ஆண்டனியை மனோவசியப்படுத்தி கேள்விகளை கேட்டதில் விஜய் ஆண்டனியின் இதற்கு முந்தைய ஜென்மமும் அவரது பூர்வீகம் தஞ்சாவூர் என்பதும் அதில் ஜெயலட்சுமி என்பவர் தான் அவரது மரணத்துக்கு காரணமானவர் என்பதும் தெரிய வருகிறது. விஜய் ஆண்டனியின் காதில் அடிக்கடி ஒலிக்கும் அந்த குரல் அடிக்கடி வெளிப்படுத்தும் பெயர் தான் ஜெயலட்சுமி..

சிகிச்சையில் இருந்து தப்பி உண்மை தேடி தஞ்சாவூர் செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு தனக்கு முன் ஜென்மத்தில் நடந்தவை உண்மைதான் என அறிந்துகொள்ளும் விஜய் ஆண்டனியை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள். இந்தநிலையில் விஜய் ஆண்டனிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போகிறார் அருந்ததி. அவரைத்தேடி கிளம்பும் விஜய் ஆண்டனிக்கு தனது மனைவி பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது.. அது என்ன, அருந்ததிக்கு என்ன ஆயிற்று, விஜய் ஆண்டனியின் மன நோய் பாதிப்புக்கு உண்மையான காரணம் யார் என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.

படம் முழுவதும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லருக்கு உண்டான அத்தனை அம்சங்களும் விரவிக்கிடக்கின்றன.. அமானுஷ்ய குரலால் டார்ச்சருக்கு ஆளாகும் கேரக்டரில் வெகு இயல்பாக பொருந்தியுள்ளார் விஜய் ஆண்டனி.. தனக்கு பொருத்தமான கேரக்டர்களையும் கதையையும் மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு இந்தப்படம் இன்னுமொரு உதாரணம்.. அதிலும் பிளாஸ்பேக்கில் பாரதியார் கெட்டப்பில் மீசையுடன் வரும் விஜய் ஆண்டனி அழகு ப்ளஸ் கம்பீரம்..

நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் தான் அருந்ததிக்கு.. இரு வேறுப்பட்ட கேரக்டர்களையும் தனது நடிப்பால் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் அருந்ததி. ஆடுகளம் முருகதாஸின் திடீர் மரணம் நம்மை திகைக்க வைக்கிறது.. ஒய்.ஜி.மகேந்திரன், கிட்டி இருவரும் படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளனர்.. அம்மாவாக மீரா கிருஷ்ணன், ஆட்டோ ட்ரைவராக நீண்ட நாளைக்குப்பின் விஜயசாரதி மற்றும் சாருஹாசன் ஆகியோரும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

படம் முழுவதும் நம்மை திகில் மூடிலேயே வைத்திருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபரயுத்தும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும்.. அதிலும் ‘ஜெயலட்சுமிஈஈஈஈ” என அவ்வப்போது பின்னணியில் எழும் குரல் அடிக்கடி நம் மனதை ஏதோ செய்கிறது. ‘ஜெயலட்சுமி’ பாடலும் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை எந்தவித தொய்வுமின்றி பரபரப்பாக பயணிக்கிறது கதை. இடைவேளைக்குப்பின் வரும் தஞ்சாவூர் எபிசோடிலும் குறையில்லை.. ஆனால் கிளைமாக்ஸில் போதை மருந்து விவாகாரம் என யூ டர்ன் அடித்திருப்பது படத்தின் விறுவிறுப்பை குறைக்கவே செய்திருக்கிறது. வில்லன்கள் போதை மருந்தை பரிசோதிக்க பல பெண்களை அடைத்து வைத்து சித்திரவதை சேயும் அளவுக்கு கொடூரர்கள்.. அப்படியானால் விஜய் ஆண்டனியிடம் அந்த மருந்தை பரிசோதிப்பதற்காக தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக அருந்ததியின் திருமணத்தை நடத்துவானேன்..?

இது ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா படத்தில் இடம்பெற்றுள்ள பழிவாங்கல் முறையை ஞாபகப்படுத்துகிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் இப்படி லாஜிக்காக சில கேள்விகள் எழுந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு மணி நேரம் உங்களை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் யோசிக்க விடாமல் படம் பார்க்க செய்ததில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

Comments are closed.