எண்பதுகளில் நிலவிய தீவிரமான சாதிக்கொடுமையையும் அதை எதிர்த்து போராட்டம் நடத்திய இரண்டு கிராமத்து வீரர்களையும் பற்றிய கதைதான் இந்த ‘மாவீரன் கிட்டு’…
பழனி அருகில் உள்ள புதூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்கள் தங்களது ஆட்களின் இறுதிச்சடங்கை நடத்த சுடுகாட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் மேல்சாதியினர் வசிக்கும் வீதி வழியாகத்தான் செல்லவேண்டும்.. ஆனால் இதற்கு மேட்டுக்குடியினர் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பதால், நீண்ட தொலைவு சுற்றி செல்லவேண்டிய அவலமான சூழ்நிலை..
இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறார் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக கருதப்படும் பார்த்திபன். தனக்கு பின்னால் இன்னும் இந்த போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என, நன்கு படிக்கும் மாணவனான விஷ்ணுவை கலெக்டருக்கு படிக்குமாறு ஊக்குவிக்கிறார் பார்த்திபன். இந்த சூழலில் கல்லூரிக்கு செல்லும் விஷ்ணுவை காதலிக்கிறார் மேல்சாதி பெண்ணான ஸ்ரீதிவ்யா..
இவர்களது போராட்டங்களை ஒடுக்குவதில் ஊர் பஞ்சாயத்து தலைவர் நாகி நீடுவும் அவரது மகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமனும் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இதற்காக தங்களை மதிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் தங்களது சமூகத்தை சேர்ந்தவரான ஸ்ரீதிவ்யாவின் தந்தையை கொலைசெய்து, பழியை விஷ்ணு மீது போட்டு அவரது படிப்பை தடை செய்து ஜெயிலுக்குள் தள்ள நினைக்கின்றனர்.
ஜாமீனில் வெளிவரும் விஷ்ணு, ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு போலீஸ் அதிகாரி ஹரீஷ் உத்தமனை தாக்க முயற்சித்து பிடிபடுகிறார்.. லாக்கப்பில் வைத்து ஹரீஷிடம் மிதிபடும் விஷ்ணு, மறுநாள் முதல் காணாமல் போகிறார்.. அவரை கண்டுபிடித்து தரும்படியும், தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் மக்களை திரட்டி போரட்ட களத்தில் இறங்குகிறார் பார்த்திபன்.. விஷ்ணுவுக்கு என்ன ஆயிற்று..? போராட்டத்திற்கு பலன் கிடைத்ததா..? என்பது க்ளைமாக்ஸ்..
படத்திற்கு மாவீரன் கிட்டு என பெயர் வைத்திருந்தாலும் கூட, போராளியாக அனைத்திலும் முன்னிற்கும் சின்ராசுவான பார்த்திபன் தான் உண்மையான ஹீரோ என சொல்ல தோன்றுகிறது. இந்தப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நேர்மையான முறையில் போராடும் பார்த்திபனின் நடிப்பு மாறுபட்டது மட்டுமல்லாமல் பக்குவப்பட்ட ஒன்றும் கூட.
கண்ணாடி அணிந்து கொண்டு, எண்பதுகளின் கெட்டப்புகளுக்கு தன்னை மாற்றிகொண்டு இருக்கிறார்… பார்த்திபன் போட்டுத்தரும் பாதையில் கச்சிதமாக பயணம் செய்பவர், கிளைமாக்ஸில் தன் மக்களுக்காக சுயமாக எடுக்கும் முடிவு நெகிழ வைக்கிறது.
வழக்கம்போல தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞனை காதலிக்கும் மேல் தட்டு பெண்ணாக ஸ்ரீதிவ்யா.. அளவு மீறாத நடிப்பு.. அதேசமயம் அவரை, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவரின் மகளாக காட்டியிருப்பது புத்திசாலித்தனம் மற்றும் எஸ்கேப்பிசம்.. சீரியசாக நகரும் கதையில் காமெடி நடிகர் சூரி இருந்தால் கூட என்ன பண்ணமுடியும்.. தனது குருநாதர் படத்தில் தானும் ஒரு பங்களிப்பாக இருந்துவிட்டு போகிறேன் என பத்தோடு பதினொன்றாகவே வந்து போகிறார் சூரி.
தான் ஆதிக்க சாதி என்கிற வன்மத்தை பேச்சு, முகம், உடல் மொழி என அனைத்திலும் இம்மி பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார் ஹரீஷ் உத்தமன். இவரை தமிழ்சினிமா நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. அவரது தந்தையாக வரும் நாகிநீடுவும் வில்லத்தனம் காட்டுவதில் ஓகே வாங்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட்ட மக்களுக்கு உதவும் குணமுடைய மேல்சாதி மனிதர்களாக வரும் பெரைரா மற்றும் அந்த வக்கீல் கதாபாத்திரம் இரண்டுமே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.. பாதியில் பெரைரா பலியாவது அதிர்ச்சி என்றால், இறுதியில் வக்கீல் துரோகத்திற்கு விலை போவது யதார்த்தம்…
எண்பதுகளில் கதை நடப்பதால் அந்தக் காலகட்டத்திற்குண்டான ஒளியமைப்புடன் கூடிய காட்சியமைப்புகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா. இமானின் இசையும் அதே மூடில் பயணித்திருக்கிறது என்றாலும் ஹிட் பாடல் என்கிற ரகத்தில் எதுவும் சேரவில்லை.. கிளைமாக்ஸை நெருங்குமுன் அந்த டூயட் எதற்காக..? தவிர்த்திருக்கலாம்.
இதுபோன்ற கதைகளில் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல கிளிஷேக்களும் தவறாமல் இடம் பெறுகின்றன. மேல்சாதிப்பெண் பாம்புக்கடிக்கு ஆளாகி தப்பிப்பதும், பின் கௌரவ கொலைக்கு பலியாவதும் இன்றைய யதார்த்தத்தை பிரதிபலிக்கவே செய்கின்றன. பார்த்திபனின் போராட்ட யுக்தியும் அதற்கு விஷ்ணு தன்னையே தியாகம் செய்வதும் புதுசு தான் என்றாலும், ‘மாவீரன் கிட்டு’ என்கிற டைட்டிலுக்கு உகந்ததாக விஷ்ணுவின் கேரக்டர் அமையவில்லை என்றே சொல்லவேண்டும். விஷ்ணுவின் கலெக்டர் கனவு நனவாகி இருப்பதாக கதையை நகர்த்தியிருந்தால் டைட்டில் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கலாமோ என்னவோ..
குறைகள் சில இருக்கின்றன தான்.. ஆனால் சுசீந்திரன் நல்ல ஒரு படத்தை கொடுத்துள்ளார் என்பது மட்டும் நிச்சயம்.

Comments are closed.