நடிகர்கள் : விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், பிபாசா பாசு, சாம்ஸ், பாலஜி, மயில்சாமி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஜீவா
இயக்கம் : ஜான்
தயாரிப்பு : வி கிரியேஷன்ஸ் – கலைப்புலி எஸ்.தாணு
20 வருடங்களுக்குப் பிறகும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகியிருக்கும் விஜயின் ‘சச்சின்’ சதம் அடிக்குமா?, விமர்சனத்தை பார்ப்போம்.
கண்டதும் வரக்கூடிய காதல் மீது நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியாவை கண்டதும் காதல் கொள்கிறார் நாயகன் விஜய். ஆனால், வழக்கம் போல் இத்தகைய காதலில் தனக்கு நம்பிக்கை இல்லை, என்று கூறி ஜெனிலியா மறுத்து விடுகிறார். மனதுக்கு பிடிக்கும் சிறு சிறு விசயங்கள் போதும் ஒருவரை காதலிக்க என்ற அடிப்படையில் தொடர்ந்து ஜெனிலியாவை ஒருதலையாக காதலிக்கும் விஜயின் காதல் வெற்றி பெற்றதா?, இல்லையா ? என்பதை மென்மையாகவும், கலர்புல்லாகவும் சொல்வதே ‘சச்சின்’.
2005 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் ஸ்டைலிஷாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கான ஆடை வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. வழக்கம் போல் தனது குறும்புத்தனம் மற்றும் நகைச்சுவை நடிப்பு மூலம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விஜய், காதல் காட்சிகளில் உருக வைத்துவிடுகிறார்.
ஜெனிலியாவின் வெள்ளந்தியான நடிப்பும், சிறு அசைவுகளும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ரகமாக இருக்கிறது. குறும்புத்தனமான நடிப்பு மூலம் ரசிகர்களை கொள்ளைக் கொள்ளும் ஜெனிலியா, மீண்டும் நடிக்க வேண்டும், என்று ஏங்க வைக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் அல்டிமேன் காமெடியை திரையில் பார்க்கும் அனுபவம் கிடைத்திருக்கிறது. தற்போது சமூக வலைதளங்களில் ஹைலைட்டாக வலம் வரும் வடிவேலுவின் பல காமெடி வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக, “ஷாலுமா…இப்பவே காலில் விழ வேண்டாம்…”, “நீங்க ரொம்ப சப்ப பிகாரா இருக்கீங்க…” போன்ற வடிவேலுவின் வசனங்கள் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கையே அதிர வைக்கிறது.
சந்தானம், பாலாஜி, சாம்ஸ், மயில்சாமி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார்கள்.
பிபாசா பாசு, ரகுவரன், தலைவாசல் விஜய் ஆகியோரது அனுபவமான நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகமாகவும், திரும்ப திரும்ப கேட்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதை போல் மென்மையாக பயணிக்கிறது.
மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் பங்கு இப்படத்திற்கு மிக முக்கியமானது. படத்தின் ஒவ்வொரு பிரேமையும் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஜீவா, விஜய், ஜெனிலியா இருவரையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் போல் அல்லாமல், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜான், எளிமையான காதல் கதையை காமெடியாகவும், கலர்புல்லாகவும் கொடுத்திருக்கிறார். எந்த ஒரு வன்முறை காட்சிகளும் இல்லாமல், அதே சமயம் நெருடல் காட்சிகள் இல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவுக்கு நாகரீகமான காதல் படமாகவும் இயக்கியிருக்கிறார்.
ஏற்கனவே ’சச்சின்’ படத்தை பார்த்தவர்களுக்கு தற்போது வெளியாகியிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான படம் மற்றும் காமெடி காட்சிகள் புதிய அனுபவத்தைக் கொடுக்கும், பார்க்காதவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான அனுபவத்தை கொடுக்கும். மொத்தத்தில், இந்த ‘சச்சின்’ நிச்சயம் சதம் அடிப்பார்.
ரேட்டிங் 3/5
Comments are closed.