நடிகர்கள் : துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில், சரத் லோகித்ஷவா, ரோஷன் பஷீர், அருவி மதன்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
ஒளிப்பதிவு : தில்ராஜு
இயக்கம் : மைதீன்
தயாரிப்பு : மோகனா. ஆர்
சொந்த சகோதரர்களே திருமணத்திற்குப் பிறகு தனித்தனியாக வாழத் தொடங்கிவிடும் இன்றைய சூழலில், வடசென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைப் போல் பழகும் நண்பர்களின் குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து தொடங்குகிறது ‘ஆல் பாஸ்’.
மூன்று குடும்பங்களும் மிகவும் நெருக்கமாக வாழ்வதோடு, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜெயப்பிரகாஷின் பேச்சுக்கு மதிப்பளித்து நடக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் அவரை தங்களது பெரியப்பாவாகவே கருதி, அவர் சொல்வதை கேட்டு நடக்கின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் சரத் லோகித்ஷவா, தனது அரசியல் தேவைக்காக பல கோடி ரூபாய் பணத்தை பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருக்கிறார். அப்படி ஒரு பழைய கிடங்கில் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி பணம், எதிர்பாராதவிதமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கைகளில் சிக்குகிறது. அந்தப் பணத்தை வீட்டுக்கு கொண்டு வரும் அவர்கள், விஷயத்தை பெரியவர்களிடம் தெரிவிக்கிறார்கள்.
பணத்தைப் பார்த்த ஜெயப்பிரகாஷ் அதிர்ச்சியடைந்து, அதை எங்கிருந்து எடுத்தார்களோ அதே இடத்தில் கொண்டு போய் வைத்துவிடும்படி குழந்தைகளை அறிவுறுத்துகிறார். ஆனால், இதுவரை குடும்பத்தின் அனைத்து முடிவுகளிலும் அவரது பேச்சைக் கேட்டவர்கள், பல கோடி ரூபாய் என்றதும் அவரது அறிவுரையைப் புறக்கணிக்கிறார்கள்.
கையில் கிடைத்திருக்கும் பணத்தை எப்படி செலவு செய்வது என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கனவு காணத் தொடங்குகிறார்கள். மறுபுறம், பணத்தை இழந்த எம்.எல்.ஏ, அதை மீட்பதோடு, பணத்தை எடுத்தவர்கள் யார் என்பதையும் கண்டுபிடிக்க தீவிரமாக களமிறங்குகிறார்.
பணம் கையில் இருந்தும் அதை வெளியில் எடுத்துச் செலவு செய்ய முடியாத நிலை ஒருபுறம், அந்தப் பணத்தால் குடும்பத்திற்குள் உருவாகும் கருத்து வேறுபாடுகள் மறுபுறம் என கதை வேகம் பெறுகிறது. இறுதியில் அந்த ரூ.5 கோடி யாரிடம் செல்கிறது? பணத்தை இழந்த எம்.எல்.ஏ அதை மீட்டாரா? ஏழ்மையில் வாழ்ந்த அந்த குடும்பங்கள் அந்தப் பணத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா மற்றும் பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். எளிய குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களாக அவர்களது கதாபாத்திரங்கள் நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கு இவர்களது நடிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அவர்களது மனைவிகளாக நடித்துள்ள செந்திகுமாரி, வினோதினி மற்றும் மோகனா. ஆர் ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
இளம் ஜோடியாக வரும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் ஜனனி ஆகியோரின் காதல் காட்சிகள் படத்திற்கு தேவையான கமர்ஷியல் அம்சத்தை சேர்க்கின்றன. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியும் திரைக்கதைக்கு ஓரளவு பலம் சேர்க்கிறது.
மூன்று குடும்பங்களின் குழந்தைகளாக நடித்திருக்கும் சஞ்சய், கோகுல் மற்றும் நிகில் ஆகியோர் தங்களது வயதுக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக இருக்கும் இவர்களது கதாபாத்திரங்கள் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றன.
எம்.எல்.ஏவாக வரும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலராக நடித்திருக்கும் சத்யா, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் அருவி மதன் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறிய கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார்கள். இதனால், கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வகையில் கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் தில்ராஜு, வடசென்னையை எந்தவிதமான செயற்கைத்தனமும் இல்லாமல் அதன் இயல்பான தன்மையோடு திரையில் பதிவு செய்திருக்கிறார். அப்பகுதியின் தெருக்கள், வீடுகள் மற்றும் மக்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக உணர வைக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. பாடல் காட்சிகளிலும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் உள்ளன. குறிப்பாக காதல் பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை படத்தின் திரில்லர் தன்மைக்கு கூடுதல் வேகம் கொடுப்பதோடு, பல காட்சிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.
எஸ். பாஸ்கரின் படத்தொகுப்பு முதல் பாதியில் கதையின் வேகத்திற்கு நன்றாக துணை நிற்கிறது. கதை விறுவிறுப்பாக நகர்வதற்கு அவரது எடிட்டிங் உதவியிருக்கிறது. ஆனால், முதல் பாதியில் இருந்த அதே சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதியில் முழுமையாக தக்கவைக்க முடியாதது சற்று குறையாக தெரிகிறது.
ரசியல்வாதிகளின் பதுக்கல் பணத்தையும், அதை எதிர்பாராதவிதமாக பெறும் எளிய மக்களின் வாழ்க்கையையும் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் மைதீன், கையில் பணம் இருந்தும் அதை சுதந்திரமாக பயன்படுத்த முடியாத சூழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்ஹ்டி சென்றிருக்கிறார்.
பணத்தை மீட்க எம்.எல்.ஏ எடுக்கும் முயற்சிகள், மறுபுறம் பணத்தை வைத்திருக்கும் குடும்பத்தினர் அதை பயன்படுத்த முடியாமல் சிக்கிக் கொள்வது, அந்தப் பணம் அவர்களுக்குள் உருவாக்கும் பிரச்சினைகள் என திரைக்கதை பல கோணங்களில் பயணிக்கிறது.
வடசென்னையின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பகுதி மக்களின் மனநிலையையும் பதிவு செய்யும் வகையில் தொடங்கும் படம், குழந்தைகளின் கைகளில் எம்.எல்.ஏ-வின் பணம் சிக்கிய பிறகு சுறுசுறுப்பாகிறது. அந்த இடத்திலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, பார்வையாளர்களை திரைக்குள் இழுத்துச் செல்கிறது.
பெரிய நடிகர்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமே நம்பாமல், ஒரு எளிமையான கதைக்கருவை வைத்து சுவாரஸ்யமான திரில்லர் அனுபவத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மைதீன். குடும்ப ஒற்றுமை, பணத்தின் மீதான ஆசை, பணம் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என பல விஷயங்களை கதைக்குள் இயல்பாக இணைத்திருப்பது படத்தின் பலம்.
வடசென்னையின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு, பணத்தாசை குடும்ப உறவுகளை எப்படி மாற்றுகிறது என்பதை திரில்லர் பாணியில் சொல்லும் ஒரு எளிமையான, நேர்மையான திரைப்படமான இந்த ‘ஆல் பாஸ்’ ரசிகர்களிடம் அப்ளாஷ் பெறுவது உறுதி.
ரேட்டிங் 4/5
Comments are closed.