
ரஜினி தனது படங்களின் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதை புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.. ஆனால் பல வருடங்களாக ரஜினியின் படங்களை கவனித்து வருபவர்களுக்கு ஓரளவு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பு இருக்கிறது.
என்னதான் ரஜினியை வைத்து சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, மற்றும் உள்ள தனது சில ஆஸ்தான இயக்குனர்களுடன் பணியாற்றிவிட்டு வந்து, மீண்டும் தன்னை வைத்து ஹிட் கொடுத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்..
அதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டால் இதேமுறையில் அடுத்த சில வருடங்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.. அண்ணாமலை, பாட்ஷா, வீராவை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணாவுக்கு சில வருடங்கள் கழித்து ‘பாபா’ இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் அவரால் அதை சரியாக பயன்படுத்த முடியவில்லை.
பணக்காரன், மன்னன், உழைப்பாளி கொடுத்த வாசுவுக்கு, பாபாவின் தோல்வியால் தான் இருந்த இக்கட்டன சூழில் ‘சந்திரமுகி’ இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. அதை பி.வாசுவும் சரியாக பயன்படுத்தியதால், அடுத்து உடனடியாக ‘குசேலன்’ இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அதில் கோட்டைவிட்டார் பி.வாசு.. இதோ இப்போது இன்னொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
முத்து, படையப்பா என ரஜினியை வைத்து இரண்டே படங்களை மட்டுமே இயக்கியிருந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரையும் ரஜினியின் ஆஸ்தான இயக்குனராகவே ரசிகர்களும் திரையுலகமும் கருதினார்கள்.. அனால் படையப்பா என்கிற மெகா வெற்றியை கொடுத்தும் ‘லிங்கா’ மூலம் ரஜினியை இயக்க ரவிக்குமாருக்கு சுமார் 13 வருடங்கள் தேவைப்பட்டது. அந்த வாய்ப்பை அவர் ஜஸ்ட் லைக் தட், சொதப்பினார் என்பது வேறு விஷயம்..
அதேசமயம் ரஜினிக்கு ஒரு இயக்குனரின் ஸ்டைல் ரொம்பவே பிடித்துப்போனால் அவருக்கு உடனடியாக அடுத்த தனது படத்தையும் இயக்கும் வாய்ப்பை தருவார் என்பது இயக்குனர் ஷங்கர் விஷயத்தில் தான் வெளிப்பட்டது.. ‘சிவாஜி’ படம் கொடுத்த உற்சாகத்தில் தனது அடுத்த படத்தையும் ஷங்கருக்கே கொடுத்தார் ரஜினி.
இடையில் ரஜினி கூட குசேலன் என்கிற படத்தில் நடித்தார்.. ஆனால் ஷங்கரோ ‘சிவாஜி’க்கு அடுத்ததாக இயக்கியது ‘எந்திரன்’ படத்தை தான். அந்த மாதிரி அரிதிலும் அரிதான பட்டியலில், ரஜினிக்கு பிடித்தமான இயக்குனராக ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித்தும் மாறியதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.
இத்தனைக்கும் வெறும் இரண்டே படங்களை மட்டும் இயக்கிய, ரஞ்சித்திற்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு ‘கபாலி’யில் கிடைத்ததே ஆச்சர்யம் என்றால், இப்போது ரஜினியின் அடுத்த படத்தையும் அவரே இயக்கப்போகிறார் என்றால் இதைவிட ஆச்சர்யம் வேறென்ன இருக்க முடியும்..
‘கபாலி’ படத்திற்கு வரவேற்பில்லை’.. ‘கபாலி’ சரியாக போகவில்லை’ என்று வெளியான எந்த செய்திக்கும் சூப்பர்ஸ்டார் மதிப்பு கொடுக்கவில்லை.. உண்மை அவருக்கு மட்டும் தானே தெரியும்.. அவரை அசத்தியது ரஞ்சித்தின் எளிமை.. பணிவு.. பிடிவாதம்.. நேர்த்தியான டைரக்சன்.. அதுதான் அடுத்த படத்திற்கும் உடனே அச்சாரம் போடவைத்துள்ளது.
இது ஒன்றும் யூகமான செய்தியோ, அல்லது வதந்தியோ அல்ல.. நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியான செய்தி.. வெளியிட்டது அவரது மருமகன் தனுஷ்.. ஆம். ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப்போவது தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தான்.. இயக்கப்போவது ரஞ்சித்..
இனிவரும் நாட்களில் இந்தப்படம் கொடுக்கப்போகும் பலப்பல ஆச்சர்யங்களுக்காக காத்திருக்க வேண்டியதுதான் ரசிகர்களின் வேலை.
Comments are closed.