
ஊருக்கும் நண்பர்களுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பவர் ஜெய். தாங்கள் உயிராக நினைக்கும் விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஒருவருக்காக அபகரிக்க முயற்சிக்கிறார் உள்ளூர் அரசியல்வாதியான மாரிமுத்து. ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சிக்கும் தடைபோடுகிறார் ஜெய்.
இதனால் எரிச்சலாகும் மாரிமுத்து, ஜெய்யின் நண்பனை கவுன்சிலராக்கி, ஜெய்க்கு எதிராக திருப்பி மீண்டும் தனது திட்டத்தை அரங்கேற்ற முயற்சிக்கிறார். அதிலும் பலன் பூஜ்யம் என்பதால் ஜெய்யை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார். மாரிமுத்துவின் முயற்சி பலித்ததா..? இல்லை, ஜெய்க்கு ஜெயம் கிட்டியதா என்பது க்ளைமாக்ஸ்.
புரட்சிகரமான வேடம் என்பதால் சில சமயம் குருவி தலையில் பனங்காயை வைத்து விட்டார்களோ என்றும் நினைக்க வைக்கிறார் ஜெய். ஆனாலும் கோபக்கார இளைஞனாக வரும் ஜெய் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக, பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் சுரபி. அடிதடி இளைஞனை காதலிக்கும் வழக்கமான டிபிக்கல் கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்..
ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், குணச்சித்திர நடிகாராக பட்டையை கிளப்புகிறார்.. தம்பியை காப்பாற்றவும், அவரை அடிதடி வழியில் செல்லாமல் திருப்பவும் அவர் முயற்சிக்கும்போது சராசரி அண்ணனாக பளிச்சிடுகிறார்.. வன்மம் கொண்ட உள்ளூர் அரசியல்வாதி கேரக்டரில் மாரிமுத்து படு பாந்தம். எதிர்ப்பவர்களிடம் சீறுவதும், பின் அரசியல் சூழல் காரணமாக அவர்கள் தோள் மீதே கைபோட்டு நட்பு பாராட்டுவதும் என ஒரிஜினல் அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஜெய்யின் நண்பனாக வந்து வில்லனாக மறுப்பவர் என இருவருக்குமே நல்ல வாய்ப்பு. இளைஞர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள ஒரு விளையாட்டு மைதானம், அதைச்சுற்றி நடக்கும் அரசியல் என படம் முழுவதும் ஒரே உள்ளூர் அரசியல் தான்..
அதனாலேயே அரசியல்வாதியை எதிர்க்கும் சாதாரண இளைஞன் என்கிற கதையோட்டத்தில் நிறைய இடங்களில் லாஜிக்குகள் மிஸ்ஸாவதையும் பார்க்க முடிகிறது. அடிதடி என்பதை தவிர அரசியல்வாதிகளை எதிர்க்க இயக்குனர் மணிமாறன் புதிதாக யோசனை செய்திருக்கலாம்.
Comments are closed.