’பிரேமலு’ விமர்சனம்

251

நடிகர்கள் : நஸ்லென், மமீதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன், அல்தாப் சலீம், சமீர் கான், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன்
இசை : விஷ்ணு விஜய்
ஒளிப்பதிவு : அஜ்மல் சபு
இயக்கம் : கிரிஷ் ஏடி
தயாரிப்பு : பகத் பாசில், திலீஷ் போதன், ஷ்யாம் புஷ்கரன்

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பிரேமலு’ தமிழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. மலையாள ரசிகர்களை கவர்ந்த இப்படம் தமிழ் ரசிகர்களையும் கவருமா?, விமர்சனத்தை பார்ப்போம்.

கல்லூரி காலத்தில் ஒன்சைடு காதலில் தோல்வியடைந்த நாயகன் நஸ்லென், அதில் இருந்து விடுபடுவதற்காக தனது நண்பனுடன் ஐதராபாத் செல்கிறார். அங்கிருந்து ஆந்திராவில் நடக்கும் ஒரு திருமணத்துக்கு செல்லும் போது, அங்கு நாயகி மமீதா பைஜுவை சந்திக்கிறார். அவரை கண்டதும் நஸ்லென் மனதில் காதல் பிறக்கிறது. ஆனால், மமீதா பைஜூ அவருடன் நட்பாக பழகுகிறார். இதற்கிடையே, மமீதா பைஜு மீதான காதலுக்காக ஐதராபாத்தில் தங்கும் நஸ்லென், தன் காதலை அவரிடம் சொல்லும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, மமீதா பைஜுவின் தோழி மூலம் தன் காதலை தெரியப்படுத்த நஸ்லென் முயற்சிக்கும் போது முடியாமல் போவதோடு, அவர் நஸ்லெனின் காதலை ஏற்கும் நிலையில் இல்லை, என்ற தகவலும் அவருக்கு கிடைக்கிறது. இருந்தாலும், மமீதாவுடன் தொடர்ந்து பயணிக்கும் நஸ்லெனின் காதல் இந்த முறையாவது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘பிரேமலு’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் நஸ்லென், குழந்தைத்தனமான முகத்தோடு வெகுளித்தனமான நடிப்பில் கவர்கிறார். அவர் காதல் தோல்வியால் கஷ்ட்டப்பட்டாலும், அவரது நடவடிக்கைகளை பார்வையாளர்களை சிரிக்க மட்டுமே வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜு, மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி இளைஞர்கள் அத்தனை பேரையும் கொண்டாட வைக்க கூடிய திறன் படைத்தவராக இருக்கிறார். அசால்டான நடிப்பும், உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு, முக பாவனைகள் என அனைத்திலும் அசத்தும் மமீதா பைஜு மலையாள சினிமாவில் மட்டும் அல்ல தென்னிந்திய சினிமா முழுவதும் பெரிய வலம் வருவார் என்பது உறுதி.

வில்லத்தனமான வேடத்தில் நடித்திருக்கும் ஷ்யாம் மோகன் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது. நாயகனின் நண்பராக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப் ஒன்லைன் வசனங்கள் மூலம் தான் வரும் காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

அகிலா பார்கவன், சமீர் கான், அல்தாப் சலீம், மீனாட்சி ரவீந்திரன் என திரைக்கதையோட்டத்தில் தலை காட்டும் மற்ற நடிகர்களும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.

அஜ்மல் சபுவின் ஒளிப்பதிவும், விஷ்ணு விஜயின் இசையும் ஜாலியான உணர்வை படம் முழுவதும் கொடுத்து, கலர்புல்லான காதல் பயணத்தை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அனுபவிக்க வைக்கிறது.

கிரிஷ் ஏடி மற்றும் கிரண் ஜோஷியின் எழுத்தில் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம், படம் முழுவதையும் தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.

பிரசாரம் செய்யக்கூடிய அறிவுரையோ, அல்லது அழுது தீர்க்கும்படியான காதல் தோல்வி வசங்ககளோ இல்லை, எந்தவித எதிர்பாரத திருப்பங்களும் இல்லை, ஆனால், சச்சின் மற்றும் ரீனு ஆகியோரின் காதல் பயணத்தை பார்வையாளர்களும் கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு ஜாலியாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏடி.

ஒன்சைடு காதலை வைத்துக்கொண்டு இளைஞர்களுக்கான கலர்புல்லான, ஜாலியான ஒரு படமாக இருந்தாலும் அதை மிக நாகரீகமாக கையாண்டிருக்கும் இந்த ‘பிரேமலு’-வை மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களும்கொண்டாடி தீர்ப்பார்கள் என்பது உறுதி.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.