
தங்கள் வயதில் காணக்கூடாத வன்முறையை காண நேரிடும் ஏழாம் வகுப்பு படிக்கும் மூன்று பையன்கள் அதை நிகழ்த்திய கயவர்களை தங்களது சமயோசித புத்தியால் எப்படி சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதைத்தான் ‘பூவரசம்பீப்பி’ செய்து ஊதியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா சமீம்.
கதை என்ன? கோடை விடுமுறையில் ஊர் சுற்றும் வேணு, ஹரீஷ்(ஆண்டெனா), கபில்தேவ் மூன்று பேரும் ஒரு பெண்ணை நான்கு கயவர்கள் பாலியல் வன்முறை செய்து கொலைசெய்துவிடுதை தூரத்தில் இருந்து பார்த்து விடுகிறார்கள். இந்த கொடுமைக்கு நம்மால் ஏதாவது நியாயம் கிடைக்க செய்யமுடியுமா பார்ப்போம் என மூவரும் களத்தில் இறங்குகிறார்கள்.
முதலில் அந்த நான்குபேரும் யார் என கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்கள். மணல் கடத்தல் தாதா, குளிர்பான விற்பனை செய்பவன், மொபைல் கடை வைத்திருப்பவன் இவர்களுடன் ஒரு வாத்தியாரும் சேர்ந்துகொண்டுதான் இதை செய்தார்கள் என கண்டுபிடிக்கிறார்கள்.
பின்னர் அவர்களை தங்களது புத்திசாலித்தனமான, டெக்னிக்கலான ஐடியாக்களால் அலறியடிக்க வைக்கிறார்கள். இறுதியில் அவர்களின் மற்ற அயோக்கியத்தனங்களையும் அவர்கள் செய்த கொலையையும் ஊரறியச்செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள்..
ஒரு பெண் இயக்குனர் இயக்கியுள்ள படம் என்கிற சற்றே இளக்காரமான மனநிலையுடன் படம் பார்க்க அமரும் ரசிகனுக்கு பத்தாவது நிமிடத்தில் அதையெல்லாம் மறக்கடித்து விடுகிறது படத்தின் சுவராஸ்யமான திரைக்கதை.
கோலிசோடா படத்தின் ஹைடெக் வெர்ஷன் என்றுகூட இந்தப்படத்தை சொல்லலாம்.. அந்தப்படத்தில் நாலு சின்னப்பையன்கள் கொஞ்சம் புத்திசாலித்தனையும் அதிகமாக தங்களது உடல் பலத்தையும் நம்பி இறங்கி ஒரு தாதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்.. இதில் முழுக்க முழுக்க புத்திசாலித்தனையும் அதற்கு உதவியாக சில அறிவியல் தொழில்நுட்பங்களையும் வைத்துக்கொண்டு எதிரிகளை பந்தாடுகிறார்கள்.
துறுதுறு சிறுவன்களாக வரும் வேணு, ஹரீஷ்(ஆண்டெனா), கபில்தேவ் மூன்று பேரும் பொருத்தமான தேர்வு.. விடுமுறை நாட்களில் பசங்க எப்படி ஊர்சுற்றுவார்களோ அதை அப்படியே எதார்த்தமாக பிரதிபலித்திருக்கிறார்கள்.. கூடவே அந்த இரண்டு குட்டிப்பொண்ணுகளும் தான்.
கிராமத்தில் யதார்த்த வில்லன்களாக வலம் வரும் அந்த நான்கு பேருமே கதையை தொய்வின்றி நகர்த்த தங்களது அருமையான நடிப்பால் உதவியிருக்கிறார்கள். கெஸ்ட்ரோலில் சில நிமிடங்களே வந்தாலும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் கம்பீரம்.
சமூகத்தில் நிகழும் ஒவொரு நிகழ்வும் அவர்களை எப்படி பாதிக்கிறது, அதை எப்படி அவர்கள் உள்வாங்குகிறார்கள் என்பதை சிறுவர்களின் ஒவ்வொரு செயலிலும் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா. அதற்கு மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவும் அருள்தேவின் இசையும் தோள்கொடுத்திருக்கின்றன.
சிறு பையன்களின் ரொமான்ஸ் ஏரியா ரசிக்கிற அளவுக்கு இருந்தாலும் கொஞ்சம் மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் பொன்வண்டு விற்பது, சிறுவன் தான் வயதுக்கு வந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும் காட்சி, சிறுவர்கள் வில்லன்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சி என ரசிக்கக்கூடிய இடங்கள் நிறைய இருக்கின்றன., பூவரசம் பீப்பி ரேடியோ எஃப்.எம் மூலம் கலாட்டா பண்ணுவது உட்பட பல அறிவியல் சாதனங்களை சிறுவர்கள் அசால்ட்டாக பயன்படுத்துவதில் லாஜிக் இடிக்கவே செய்தாலும் காட்சியின் வேகத்தில் அதை பெரிதாக நம்மால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளி செல்லும் சிறுவர்களை வைத்து வகுப்பறையை மட்டுமே காட்டி போரடிக்காமல் விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் கதையை தந்ததோடு மணல் கொள்ளை, நட்சத்திர ஆமை கடத்தல் என சமூக விழிப்புணர்வையும் தூண்டிவிட்டிருப்பதால் முதல் படத்திலேயே நம் கவனத்தை ஈர்த்துவிட்டார் இயக்குனர் ஹலிதா சமீம். பாராட்டுக்கள் மேடம்..!
Comments are closed.