சினிமாவில் பாட்டெழுதும் ஆசையில் சென்னைக்கு வந்து இறங்கின அந்த நேரத்தில் ஒரு இலக்கிய கூட்டங்களை கூட விட்டு வைக்காமல் கலந்துகொள்வேன். பார்வையாளனாக. மாலை நேரத்தில் நடக்கும் அந்த கூட்டத்திற்கு போவதற்கென்றே சில நண்பர்கள் இருப்பார்கள். கவியரங்ககளில் கவிதை வாசிப்பு, கவிஞர்களை சந்திப்பது இப்படி ஃபுல் பார்மில் இருந்தேன். அப்படிதான் கவிஞர் மு.மேத்தா ஐயாவை சந்தித்தேன். பின்னால் பத்திரிகையில் எழுதுவதில் தீவிர கவனம் செலுத்தியபோது பாடல் எழுதுவதில் விருப்பமில்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் என் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவர்கள் படத்தில் பாடல் எழுத வேண்டினர். மறுத்துவிட்டேன். காரணம் வேறொன்றுமில்லை. பத்திரிகையில் இருப்பதால் படத்தை பற்றி செய்திகளை நாம் பணியாற்றும் பெரிய பத்திரிகையில் அதிகமாக வெளிவரவேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இதில் ஒரு தத்துவம் உண்மையாகியிருக்கும் பாருங்கள். ‘தேடுவதை நிறுத்து..தேடியது கிடைக்கும்’ என்ற தத்துவம்தான் அது.
பள்ளிகூட நாட்களில் படித்துகொண்டிருக்கும்போதே எங்கள் ஊரான பழனிசெட்டிபட்டியில் பகுதிநேர கிளை நூலகராக வேலை பார்த்து வந்தேன். அரசாங்க வேலைதான். அந்த நேரத்தில் பாடப்புத்தகத்தைவிட அதிகமாக படித்தது இலக்கிய புத்தகத்தையும், கவிதை புத்தகத்தையும்தான். அப்படி படித்ததால்தான் அரசு வேலையை எழுதிகொடுத்து விட்டு சென்னைக்கு புறப்பட்டு விட்டேன். பின்னாளில் நான் ராஜா சாரை சந்தித்தபோது, “உனக்கு எந்த ஊருய்யா”ன்னு கேட்டார். “பழனிசெட்டிபட்டி” என்றதும், “அந்த ஊர்ல இருக்கும் சௌடாம்பிகை கோயில்லதான் பாரதிராஜா முதன் முதல்ல நாடகம் போட்டார். நான் முதன் முதல்ல அவர் நாடகத்துக்கு மியூசிக் பண்ணினேன்.”ன்னு நினைவுபடுத்தி சொன்னார்.
அப்போது படித்த புத்தகங்களில் மு.மேத்தா அவர்கள் எழுதிய ’நந்தவன நாட்கள்’ புத்தகமும் ஒன்று. அந்த ஈர்ப்பில் மு.மேத்தா அவர்களிடமே உதவியாளராக சேர்ந்தேன். நான் உதவியாளர் என்பதைவிட அவர்தான் எனக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். தவறாக நினைக்க வேண்டாம். ரூம் வாடகை, சாப்பாட்டு செலவு என்று பல வகைகளில் எனக்கு உதவி செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல கவியரங்குகளுக்கு கவிதை வாசிக்க என்னையும் கூட்டிகிட்டு போவார். ராஜ் டிவியில் கவிதை வாசிக்க வைத்திருக்கிறார். வாணியம்பாடி கல்லூரியில் நடந்த கவியரங்கத்துக்கும் அனுப்பினார். அப்போது நா.முத்துக்குமார், கபிலன் இருவரும் கவிதை வாசிக்க வந்திருந்தனர். இப்படி தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவனை தனக்கு நிகராக பாவித்து வளர்த்துவிடும் மனபாங்கு கவிஞர் மு.மேத்தா ஐயா ஒருவருக்குதான் உண்டு.
இதைவிட, கலைஞரின் 82 வது பிறந்தநாளுக்கான மலருக்கு அவர் கவிதை எழுதி அனுப்பும் போது, என்னிடம் “நீயும் தலைவரை பத்தி ஒரு கவிதை எழுதி கொடுப்பா என்னோட கவர்ல வெச்சு தர்றேன். தலைவருக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா போடுவாரு.” என்றார். ஆச்சரியம் கவிஞர் சொன்னது போலவே என் கவிதையையும் தேர்வு செய்திருந்தார் கலைஞர். ‘தமிழர்களுக்கென்று தனியே தேசியக்கொடி உண்டு அது உன் துண்டு’ என்று நான் எழுதிய அந்த கவிதையை முழு பக்கத்தில் வெளியிட்டது முரசொலி. இசைஞானியை நான் அதிகம் சந்திக்க நேர்ந்தது இப்போதுதான். என் ஆவலை புரிந்து கொண்ட கவிஞர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு போகும்போதெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வார். ஒருநாள் ரெக்கார்டிங் முடிந்து வெளியே வந்த ராஜா சாரிடம் “அண்ணே உங்களோட தீவிர ரசிகன்” என்று என்னை அறிமுகப் படுத்தினார். இன்று இசைஞானியை நான் எந்த நேரத்திலும் போய் பார்க்க முடிவதற்கு மேத்தா ஐயாதான் காரணம்.
ராஜா சார் அப்போது வெண்பாக்களை எழுதி குவித்துக்கொண்டிருந்தார். அந்த கையெழுத்துப் பிரதிகளை மேத்தா ஐயா என்னிடம் கொடுத்து படியெடுக்க கொடுப்பார். அந்த வெண்பாக்கள் படிக்க படிக்க பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கும். இதை வெறும் பேச்சுக்காகவோ, ராஜா சாருக்காகவோ சொல்லவில்லை. அந்த வெண்பாக்களை பற்றி பின் ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன். அப்படி மேத்தா சார் கொடுத்த அந்த வெண்பாக்களை திருவல்லிக்கேணி அறையில் இரவு மூன்று மணிவரைகூட உட்கார்ந்து படியெடுத்திருக்கிறேன்.
இப்படி என்னை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வளர்த்துவிட்டவர் மு.மேத்தா அவர்கள். அவர் எழுதிய பல திரைப்படப் பாடல்கள் அவர் எழுதியது என்றே தெரியாமலேயே போயிருக்கிறது. வேலைக்காரன் படத்தில் எல்லா பாடல்களையும் மு.மேத்தா அவர்களே எழுதியிருந்தார். அந்த பட சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் வேலைக்காரன் படப்பிடிப்பு அப்போது டெல்லியில் நடந்துகொண்டிருந்தது. பனிப்பொழிவு காலம். இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு ஒரு திடீர் யோசனை. ஒரு டூயட் பாடலையும் இங்கேயே எடுத்துவிட்டால் என்னவென்று தோன்றியது. உடனே சென்னைக்கு போன் பறந்தது. அப்போது ஏவி.எம்மில் இருந்த இசைஞானிக்கு பேசிய எஸ்.பி.எம். “அவசரமா ஒரு டூயட் தேவைப்படுது ராஜா நீங்க பாட்டை ரெக்கார்ட் பண்ணி அனுப்பிடுங்க.”ன்னு சொல்லிட்டார். ராஜா சார் ஒரு டியூனை போட்டுட்டு மேத்தா ஐயாவை வரச்சொல்லி எழுத வைக்கிறார். டைரக்டரும் கவிஞருக்கு போன் பண்ணி சிச்சுவேசனை சொல்கிறார். அப்போது கவிதாலயாவிலிருந்த அனந்து அவர்கள் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி, “நாம தாஜ்மஹாலுக்கு போய் சூட் பண்ணப்போறோம்ங்கிறதை கவிஞருக்கு சொல்லுங்க என்றிருக்கிறார். இது அப்படியே மேத்தா அவர்களுக்கு சொல்லப்பட ‘வா வா வா கண்ணா வா’ என்ற அந்த டூயட் பாடலில் இப்படி எழுதுகிறார். ‘தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம். மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்’ இந்த வரிகளை கேட்ட ரஜினி வியப்பின் உச்சிக்கு போயிருக்கிறார். இந்த பாடல் பதிவாகி விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படி வாய்ப்புக் கிடைக்குபோதெல்லாம் சமூக பிரச்சனைக்களுக்கு குரல் கொடுப்பவர் மு.மேத்தா அவர்கள்.
இப்போது அவருக்கு ஒரு சின்ன பிரச்சனை. அதான் ’காஷ்மீர்’ படத்திற்கு பாட்டெழுதி அதற்கான தொகையை தராமல் இழுத்தடித்த பிரச்சனைதான். சினிமாவில் இது சகஜம். அதுவும் புவுன்ஸ் ஆன செக்குகள் அதிகமாக இருப்பது கவிஞர்களிடம்தான். ஆனால் இங்கே காஷ்மீர் படத்தில் பாட்டெழுதின எல்லா கவிஞர்களுக்கும் பணத்தை கொடுத்து விட்டு மேத்தா ஐயாவுக்கு மட்டும் தராமல் செய்திருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதனால் அந்த கம்பெனிக்கு விடாமல் தொடர்ந்து சென்று விசாரிக்க ஆரம்பித்தேன். இது பற்றி எப்போது கேட்டாலும் “அடுத்த வாரம் வாங்க தர்றோம்” என்றார்கள். வாரம் மாதம் ஆனது. மாதம் மாதங்கள் ஆனது. இது மாதிரி சமயங்களில் கவிஞர் கோபப்பட மாட்டார். “விடுப்பா தந்தா தர்றாங்க இல்லன்னா போறாங்க” என்று விட்டு விடுவார். ஆனால் இந்த முறை நான் விடுவதாக இல்லை. பல மாதங்கள் கடந்தும் கடன் வசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை. வார்த்தைகள்தான் மாறியிருந்தது. “க்ளைமாக்ஸ் முடியட்டும்” என்பதுதான் அது.
நான் இப்படி விடாமல் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்த கம்பெனி மேனேஜர்,, ‘”கண்ணன் இவங்க க்ளைமாக்ஸை எப்ப முடிக்கிறது. நீங்க எப்ப பணம் வாங்கறது. ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டுப் போங்க நான் புரட்யூசர் வந்ததும் கொடுக்கிறேன்.” என்றார். எனக்கு கோபம்தான் வந்தது. மேனேஜரிடம் பேப்பரை வாங்கி எழுதி அவரிடமே கொடுத்தேன். படித்து விட்டு அந்த அறையே இடிந்து விழும் அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே திகைத்துப்போய் பார்த்தனர். காரணம் அது ஒரு கவிதை.
‘அச்சடித்த காகிதத்தை தேடிவந்து – பூமியின்
அட்சரேகை தேய்ந்ததடா என்கால் நடந்து…
மிச்சமுள்ள என்உயிரும் தீர்வதற்குள் – உங்கள்
உச்சக்கட்ட காட்சியை முடித்திடுக.’
மேனேஜர் சிரித்து முடிப்பதற்குள் கவிதை தாள் அந்த அறைக்குள் ஒரு ரவுண்ட் வந்து சிரிப்பை பரவ விட்டது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து கவிஞரை அழைத்து முழுதொகையையும் கொடுத்தனர். அப்போது நானே எதிர்பாரத பெருந்தொகை கொடுத்தார் அந்த பெருந்தகையாளர்.
மேத்தா அவர்களுடன் இருந்த போதுதான் டியூனுக்கு எப்படி பாடல் எழுதுவது என்பதை தெரிந்து கொண்டேன். இசைஞானியின் இசையில் அவர் பாடல் எழுதுவதை பார்ப்பதே தனி அனுபவம். ஒரு’ படத்திற்கு பாடலை அவசரமாக பதிவு செய்ய வேண்டிய சூழல். என்னை ரூமிலிருந்து பிரசாத் ஸ்டுடியோவிற்கு வரச்சொல்லி விட்டார். நானும் காலை 8 மணிக்கே ஸ்டுடியோவில் இருந்தேன். ராஜா சாரிடம் டியூனை வாங்கிக்கொண்டு டென்சனில் வெளியே வந்தார். மேத்தா சார். “இங்கேயே எழுதிடுங்க மேத்தா” என்று ராஜா சார் சொல்லிவிட்டதால் ஒரு பரபரப்பு தெரிந்தது கவிஞரிடம். அப்படி அவர் டென்சனில் எழுதி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன அந்த பாடலுக்கு தேசிய விருதே கிடைத்தது. அது பற்றி அடுத்த வாரம பேசலாம்.
(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன். 9840515216
Mokkai