ஆம்புலன்சுக்கு 108… அவசரத்திற்கு விவேக்! – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 02

108

சினிமாவில் என் நெருங்கிய நண்பர்களில் விவேக் சார் முக்கியமானவர். எனக்கும் விவேக் சாருக்குமான நட்பு பற்றி சொல்லி விடுகிறேன். நான் நடுச்சாமத்தில் போன் பண்ணினால் கூட எதையாவது ஒரு ஜோக் சொல்லி விட்டு “என்ன விஷயம் தேனி” என்பார். இது பத்திரிகையை மீறிய பாசம். திடீர்னு போன் பண்ணி “என்ன பேசி ரொம்ப நாளாச்சே” என்பார் “நேற்று முன்தினம் தானே பேசினோம்.” என்று ஞாபகப்படுத்துவேன். அப்படி ஒரு ப்ரண்ட்ஷிப், நட்பு என்பதை விட அண்ணன், தம்பி, அப்பன், ஆத்தா, சீய்யான் இப்படி எதுவாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

நான் என் சொந்த வேலையாக தேனியில் இருந்தேன். விவேக்கிடமிருந்து எனக்கு போன். “என்ன கண்ணன் பேசி நாலு நாளா ஆயிடுச்சு. எங்க இருக்கீங்க, என்ன பண்றீங்க.” வரிசையாக கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் நான் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன். ஆனால் அதை அவரிடம் சொல்லாமல், “சார் ஊர்ல இருக்கேன் வர இன்னும் நாலு நாள் ஆகும்.” என்று மட்டும் சொன்னேன் “ஏன் இவ்வளவு நாள்.” மறுபடியும் கேட்டார். அப்போது தான் உண்மையைச் சொன்னேன். “சார் என் கூட படிச்ச ஒருத்தனுக்கு ஆபரேஷன் பண்ணனும். ஹாஸ்பிடல்ல சேர்த்து ஐந்து நாளைக்கு மேல ஆகுது. ஹாஸ்பிடல்ல சரியாவே கவனிக்க மாட்டேன்கிறங்க பணம் வாங்குறதுலதான் கவனமா இருக்காங்க. பாவம் அவன் வசதியில்லாதவன். என்ன பண்றதுன்னு தெரியல. நான் அவன் கூடதான் இருக்கேன்.” என்று பெருமூச்சுடன் சொல்லி வைத்தேன். “அப்படியா என்ன இப்படி ஆகிப்போச்சே..” என்று ஃபீல் பண்ணினார். அப்புறம் பொதுவாக பேசி போனை வைத்து விட்டோம்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு விவேக்கிடமிருந்து போன் வந்தது. “கண்ணன் எனக்கு ஒரு யோசனை தோணுது. நீங்க எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க டாக்டர் யார்னு சொல்லமுடியுமா.” என்றார். “சார் ஹாஸ்பிடல்ல சரியான கவனிப்பு இல்ல. கேட்டாலும் சரியான பதில் இல்ல. வேற ஹாஸ்பிடல் போகவும் வசதியில்லாமல் அவங்க ஃபேமிலி கஷ்டப்படுறாங்க. இன்னிக்கு நைட்டுக்குள்ள எதாவது பண்ணியாகனும் கொஞ்சம் பதட்டமா இருக்கு. “அதான் கண்ணன் நான் சொல்றபடி பண்ணுங்க.” என்று அந்த யோசனையை சொன்னார்.

இரவு 12 மணி பெரியகுளத்தில் இருக்கும் இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவரின் செல் போன் அலறுகிறது. தூக்கக் கலக்கத்தோடு போனை எடுக்கிறார் டாக்டர். “ஹலோ டாக்டர் சாரா.” ஆமாம் நீங்க யாரு இந்த நேரத்துல? “வணக்கம் டாக்டர். ஸாரி நான் நடிகர் விவேக் பேசுறேன்.” “எந்த விவேக்” டாக்டர் மறுபடியும் கேட்கிறார். “நடிகர் விவேக் சார்” டாக்டர் நம்ப முடியாமல் “இந்த விலையாடெல்லாம் வேண்டாம் நீங்க யார் உங்களுக்கு என்ன வேணும்.” அந்த அர்த்த ராத்திரியில் அவரை நம்ப வைக்க “நீங்க வெறும் தாஸா லாடு லபக்கு தாஸா” காமடியை அப்படியே போனில் பேசி காட்டுகிறார் விவேக். அதோடு நிற்காமல், “இன்னைக்கு உங்க ஹாஸ்பிடல்ல மூணாவது வார்டுல செந்தில்னு ஒரு பேஷண்ட் ஆபரேஷனுக்காக அட்மிட் ஆயிருக்காங்களா.” என்று கேட்கவும் டாக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

படுக்கையை விட்டு எழுந்தவர், “சார் என்னால நம்பவே முடியல சார்..” என்றவர் டிவியை போடுகிறார். “சார் ஆதித்யாவில் கூட உங்க காமெடிதான் சார் போகுது.” டாக்டர் போட்ட சந்தோஷ் கூச்சலில் வீடே எழுந்து நிற்க, “சார் என் மனைவிகிட்ட பேசுங்க சார்..” என்று ஆரம்பித்து வீட்டில் உள்ள அத்தனை பேரிடமும் பேசிவிட்டு ”எனக்கு ஒரு உதவி செய்யணும். அந்த செந்தில் என்னோட உறவினர் நீங்க கொஞ்சம் நல்லபடியா பார்த்துக்கிட்டால் போதும். கிரிட்டிக்கலான நேரத்தில் பணம் தேவைப்பட்டால் நீங்களே எனக்கு போன் பண்ணலாம். என் ப்ரண்ட் தேனி கண்ணன் அங்க இருக்கார் அவர்கிட்டயும் சொல்லிடுங்க.” என்று சொன்னதும் டாக்டர் “என்ன சார் உங்களுக்காக இதைகூட செய்ய மாட்டேனா..எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சிட்டு நானே உங்களுக்கு பேசறேன் சார்.” என்று போனை வைத்தார். அந்த நிமிடமே பெரியகுளத்திலிருந்து தேனிக்கு காரை கிளப்பிக்கு கொண்டு வந்து, எனக்கு போன் அடித்தார்.

அவ்வளவுதான் அந்த நிமிடத்திலிருந்து என் நண்பன் செந்தில் அந்த ஹாஸ்பிடலின் வி.வி.ஐ.பி பேஷண்டாகிப் போனான். ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டு எப்போதும் ஒரு நர்ஸ் கண்காணிப்பில் அவனை வைத்திருந்தார்கள். ஒரு வழியாக ஆபரேஷன் முடிந்து நண்பன் நலமாக வெளியே வந்து விட்டான். நானும் சென்னைக்கு கிளம்பி விட்டேன்.. ஆனால் வரும் போது வெறுமையான சிந்தனை. பிடித்து ஆட்டியது. எதற்காக ஒரு நடிகர் இத்தனை மெனக்கெட வேண்டும். அதுவும் முகம் தெரியாத ஒரு ஆளுக்கு ஏன் உதவி பண்ண வேண்டும். அந்த துன்பத்தை பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் எப்படி பார்க்க முடியும். …………முடியும் அதுதான் நட்பு. என் நண்பனின் குடும்பம் என்னை கட்டி தழுவி அழுத ஆனந்த கண்ணீரில் நான் ரொம்பவும் உடைந்து போயிருந்தேன். அந்த உதவிக்கு நான் பொறுப்பல்ல. ஆனாலும் ஏற்றுக்கொண்டேன். சென்னை திரும்பியதும் விவேக் சாரை சந்தித்தால் அழுது விடுவேனோ என்று நான்கு நாட்கள் அவரை பார்க்கவே இல்லை. பிறகு ஒரு நாள் சந்தித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டேன்.

தீவிர ஷீரடி சாய்பாபா பக்தரான விவேக் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் பாபாவின் மகிமைகளை பற்றிச் சொல்லி என்னையும் பாபா பக்தராக்கினார். விவேக் சார், செல் முருகன் நான் மூவரும் பேச உட்கார்ந்தால் ராஜா சாரை பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். முருகன் பாட்டு வெறியன் என்றே சொல்ல வேண்டும். ’செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே ஜில் என்ற காற்றே’ பாடலில் முன்னால் வரும் கிடார் இசையும், கூடவே எங்கிருந்தோ வந்து இணையும் புல்லாங்குழல் ஓசையை பற்றியும் மட்டுமே அணு அணுவாக ரசித்து பேசிக் கொண்டிருப்போம். விவேக் சாருக்கு கீபோர்டு, பியானோ வாசிக்கத்தெரியும். சில சமயங்களில் அதையும் வாசித்து காண்பிப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே செல் முருகன் அடிக்கும் கமெண்டில் சிரித்து அடி வயிறு வலிக்கும். மனுஷன் பத்து நிமிஷம் ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும் மறுநாள் அவரை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல பேசிக் காண்பிப்பார் முருகன்.

சிரிப்பு சத்தத்தில் ஏரியா அதிரும். இப்படித்தான் ஒருநாள் சிரித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை நண்பரிடமிருந்து எனக்கு போன் வந்தது.. “சார் ஒரு அவசர வேலை” என்று உடனே நான் அங்கிருந்து கிளம்பினேன். நான் போய் நின்ற இடம் விஜயா ஹாஸ்பிடல் நண்பர் ராதாராஜ் மிகவும் சீரியஸான நிலையில் சேர்க்கப்பட்டிருந்தார். பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் கவலையோடு அங்கு கூடியிருந்தார்கள். ராதாராஜின் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் அழுது கொண்டிருந்ததை பார்த்தபோது நெஞ்சம் கனத்துப் போனது. டாக்டரின் பதிலுக்காக காத்திருந்த நாங்கள் எல்லோரும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்துகொண்டிருந்தோம். காரணம் ஒரு பெரிய தொகை ஹாஸ்பிடலுக்கு செலுத்த வேண்டியிருந்தது. ஆளுக்கொரு யோசனை தெரிவித்தார்கள். அப்போது தான் அங்கிருந்த அண்ணன் பிஸ்மி, “தேனி விவேக் சாரிடம் கேட்டுப் பாருங்களேன்.” என்றார். ஆனால் அந்த சமயத்தில் பத்திரிகையாளர்களுக்கும், விவேக்கிற்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் எனக்கு எப்படி அவரிடம் கேட்பது என்று தயக்கம். “இந்த நேரத்தில் உதவி கேட்டால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ” என்று அண்ணன் பிஸ்மியிடம் கூறினேன். ”இது முக்கியமான விஷயம் எதற்கும் கேட்டுப் பாருங்கள்.” என்று சொல்லவும் நீண்ட நேரம் தயக்கமாகவே இருந்தது.

ஆனால் மருத்துவமனை வெளியே கதறி அழும் பெண் குழந்தைகளை பார்த்தால் பகீர் என்றிருந்தது. கேட்டுப் பார்த்துவிடலாமென்று போனில் விவேக் சாருக்கு தகவல் சொன்னேன். “அப்படியா” என்று பரிதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்த போதே,, பெரிய அலறல் சத்தம் கேட்டது. பாசத்திற்குரிய நண்பர் ராதாராஜ் சிகிச்சை பலனின்றி இறந்த தகவல் வந்திருந்தது. இன்னும் சில பத்திரிகை நண்பர்களின் உதவியோடு ராதாராஜின் இறுதி காரியங்களை செய்து முடித்தோம். இடையில் விவேக் சார் இரண்டு முறை போன் பன்ணியிருந்தார். மிஸ்டு காலில் பார்த்து நானே பேசினேன். “கண்ணன் கேள்வி பட்டேன் இவ்வளவு சீரியஸாவா இருந்தார். ஏன் முன்னாடியே சொல்லலை.” என்று கடிந்து கொண்டார். நான் அதற்கு பிறகு உதவி பற்றி பேசவில்லை.

ராதாராஜின் இரங்கல் கூட்டத்திற்கு விவேக் வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார். அதன்படியே வந்திருந்தார். கனத்த மனதோடு ரூபாய் இரண்டு லட்சத்தை ராதாராஜின் குடும்பத்திற்கு கொடுத்தார். அவரைபோல மனிதாபிமானத்தோடு பலரும் உதவிகளை செய்திருந்தாலும் தொகையில் விவேக் கொடுத்ததுதான் அதிகம்.

இசைஞானி இளையராஜா அவர்கள் எழுதிய வெண்பா இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. அதாவது ஒரு உதவியை செய்யும் போது அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவிதான் இறைவன் திருவடியை போய் சேரும். உதவி செய்தவருக்கும் இறைவனின் பலம் கிடைக்கும். இதை வெண்பாவடிவில்

பலன்கருதிச் செய்கர்மம் எப்பலத்தால் நிற்கும்?

பலன்கருதாக் கர்மமதான் தற்பலத்தால் நிற்கும்

பலனொன்றும் வேண்டாது பாப்பலவே செய்தேன்

பலனென்றன் சிற்றம் பலம்

என்று குறிப்பிட்டிருப்பார் அதே போல சில நாட்களில் விவேக் அவர்களுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. இப்போதும் எப்போதும் நட்புக்கு மரியாதை கொடுப்பதில் விவேக் க்ரேட்.

Leave A Reply

Your email address will not be published.