பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 01

101

www.behindframes.com வாசகர்களுக்கு வணக்கம். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ தொடருக்கான அறிவிப்பை பார்த்ததும் எனக்கு முகநூலிலும், செல் போனிலும் நிறைய நண்பர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இது வெறும் சினிமாதுறையினரை பற்றி அல்லாமல் பல்வேறு அனுபவங்களையும் எழுதுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆகவே இது ஒரு பத்திகையாளரின் பயண அனுபவங்களாகவே இருக்கும். இந்த என் எழுத்து முயற்சிக்கு எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பாராட்டுக்கள் குவிந்தன. அவர்களுக்கெல்லம் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதோடு என்னை வளர்த்த வார இதழ்களுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும், சக சகாக்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்
தேனி கண்ணன்.

நான் எம்.ஜி.ஆர்னா யாரு சரோஜாதேவி?

வாலி…

என் கவலைகளுக்கு மருந்து போட்ட பாட்டு வைத்தியர். சாமரம் வீசி அமர்ந்திருந்த சங்கத் தமிழை தன் திரைத்தமிழில் தீட்டி பாமரனையும் பாட வைத்த பாட்டு வாத்தியார். நான் அனாதரவாக நின்ற நேரத்தில் எனக்கு ஆறுதல் அளித்த ஆறுமுகனின் பக்தர். அந்த தமிழ் சீயத்தின் பாதத்தைப் பற்றி, அவர் நேயத்தை பற்றி முதலில் பேசப் போகிறேன்.( போதும் கவித்தமிழ். இனி கலோக்கிய தமிழில்.)

ஒரு நாள் நான் பணியாற்றிய பத்திரிகை அலுவலகத்திலிருந்து வாலி சாருக்கு போனில் பேசினேன். “அய்யா எங்களுக்காக ஒரு தொடர் எழுதனும். அது சம்மந்தமா உங்களை பார்த்து பேசனும். எப்போ வரலாம்.” “யோவ்….தேனி உங்க பத்திரிகை மேல எனக்கு சில வருத்தங்கள் இருக்கு. அதனால நான் எழுத விரும்பல. மற்றபடி நீ எப்போதும் போல வீட்டுக்கு வா..போ..எப்போ வர்ற..” என்றார். “அய்யா மாலையில் வரட்டுமா.” “வாயேன்”.என்று போனை துண்டித்தார். இது போல் அவரை சமாதானப் படுத்தும் நேரங்களில் நான் போய் நிற்பது பழநிபாரதி அண்ணனிடம்தான். என்னைப் பார்த்ததும், “வா கண்ணா வாலி பேசினார். யோவ் நீ சும்மாவே இருக்க மாட்டியா.அவர ஏன்யா தொந்தரவு பண்ற.” சிரித்துக் கொண்டே கேட்டார். இல்லண்ணே ஆபீஸ்ல சொல்லிட்டாங்க எழுத வைக்கலன்னா நல்லா இருக்காது. வாங்கண்ணே போவோம்.” சரி சாயந்தரம் வந்திரு.” என்றார். எப்படியும் எழுத சம்மதித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருந்தது. காரணம் நான் வந்த பிறகு பழநிபாரதி வாலியிடம் நிறைய நேரம் பேசி அவரை சமாதானப் படுத்தியிருக்கிறார். அதனால் என்ன எழுத வைக்கலாம் என்பதை பற்றிய யோசனை தான் இருந்தது. “அங்க வந்து அதை எழுதுங்க..இதை எழுதுங்கனு.சொல்லாத கண்ணா. நானே ரொம்ப கஷ்டப்பட்டு சமாதானப் படுத்தியிருக்கேன். அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும் கேட்டுக்கோ.” என்று என்னை தாயார் படுத்தினார்.

மாலையில் வாலி சார் வீட்டில் இருந்தோம். அவருக்கு ஏற்பட்ட மன வருத்தங்களை பகிர்ந்து கொண்டார். “பழநிபாரதி உனக்காக பேசினாப்ல. நீங்க எழுதினீங்கன்னா கண்ணனுக்கு அபீஸ்ல கொஞ்சம் மரியாதையா இருக்கும்னு சொன்னதால எழுதுறேன்.என்றார். எனக்கு நிம்மதி வந்தது.

பல்வேறு விஷங்கள் பற்றி பேசினோம். திடீரென்று, “மண், மொழி, மக்கள்“ இதுதான்யா தலைப்பு.” என்று உற்சாகமானார். அதுதான் வாலி சார். லேசில் எதையும் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டால் எப்போதும் அதே சிந்தனையோடு இருந்து உழைப்பது. இதுதான் அந்த மனிதனை 82 வயதிலும் சினிமா தேடித்தேடி பாடல் வாங்க வைத்திருக்கிறது.

தொடரில் யார் யாரைப் பற்றி எழுதலாம் என்ற பேச்சு வந்தது. “முதல் வசனகர்த்தா இளங்கோவன், ஏ.கருணாநிதி,” என்று நான் ஒரு லிஸ்ட் வாசித்தேன். என்னை கூர்ந்து பார்த்து விட்டு “நீ இந்தக்கால ஆள் மாதிரி தெரியலையே” என்று குலுங்கினார். அவர் மகிழச்சியின் உச்சத்தில் இருந்தால் சிரிப்பு கீச்சு குரலில் வரும். ”உங்கள பார்க்க வரும் போதே இதையெல்லம் குறிச்சு வெச்சுட்டு வருவான் போல” என்று சிரித்தார் அண்ணன். ”அய்யா நடிகை லட்சுமிஸ்ரீ பற்றியும் எழுதுங்களேன்.” என்று தயங்கியபடியே சொன்னேன்.” ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் பார்த்தார்.”யோவ் அற்புதமான நடிகைய்யா. பழநி… கண்ணன் சொல்ற நடிகை யார் தெரியுமா. தர்மயுத்தம் படத்துல ’ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ பாட்டுல வருவாளே அவதான். அந்த நடிகையின் தற்கொலை அந்த சமயத்துல பெரிய அளவுல பத்திரிகையில் வந்து பரபரப்பாச்சு. சரி எழுதலாம்.” என்று பேசி முடித்து, அதற்கான புகைப்படங்களை எடுக்க ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அப்போது நடந்ததுதான் பகீர் காமெடி.

ஒரு மாலை நேரத்தில் போட்டோ எடுக்க அவர் வீட்டுக்குப் போனோம். பளீர் வேஷ்டி, சட்டையில் ஒளி வீச வந்தார் வாலி. அவர் வீட்டு முன் இருந்த மரத்தின் கீழ் போட்டோ எடுக்கும் பணி நடந்தது. “வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நிக்கிறேன். எடேன்”என்று நின்றார். எதோ யோசித்தவர், அந்த கண்ணாடியை கொண்டுவா,” என்று குழந்தை போல குதூகலத்தோடு சொல்ல, வீட்டில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் கொண்டுவந்து கொடுத்தனர். கண்ணாடியை போட்டுக் கொண்டு, ”எப்படியிருக்கு” என்ற கவிஞருக்கு அங்கிருந்த பணிப்பெண்கள் குறும்பாக, ”அய்யா எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கீங்க.” என்று சொல்லிவிட்டனர். இதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வாலியும் விடாமல், “அப்ப யார் சரோஜா தேவி.” என்று அனாயசமாக பதில் கமெண்டை வீச அவ்வளவுதான் முகத்தில் ஒரு கூடை வெட்கத்தோடு வீட்டுக்குள் ஓடி மறைந்தனர். அந்த இரண்டு பணிப்பெண்களும். என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தது தான் போட்டோவாக பதிவாகி விட்டது. போட்டோ எடுத்து முடிந்து பேச்சு தொடங்கியது.

”அய்யா ஒரு பாட்டுக்கு அதிக சம்பளம் வாங்கினது எப்பங்கய்யா.” “உமக்கு ஏன்யா இந்த ஐ.டி. வேலை.” என்று சொல்லி விட்டு தொடர்ந்தார். “ ஒரு நாள் கமல்கிட்டருந்து போன் வந்தது. ’அண்ணே ரெண்டு பாட்டு அவசரமா தேவை. நான் இப்ப பாம்பேல இருக்கேன். டியூன் உங்க வீட்டுக்கு வந்திடும். நாளைகழித்து ரெக்கார்டிங்’னு சொன்னார்.இப்படி அவசரத்துல எழுத முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்குன்னு போனை வெச்சுட்டேன். அரைமணிக்கப்புறம் போன் பண்ணி, ’உங்களால மட்டும்தான் அந்த சூழலுக்கு ஸ்பீடா எழுதிதர முடியும்.’னு வற்புறுத்தினார். சரி சம்பளம் அதிகமாகும் பரவாயில்லையானு கேட்டேன். காரணம் எனக்கு நிஜமாகவே வேலை நிறைய இருந்தது. அப்போதாவது விட்டுருவார்னு நினைச்சேன். அப்ப சில ஆயிரங்கள்ல தான் பாட்டுக்கு வாங்கிகிட்டுயிருந்தேன். அது கமலுக்கும் தெரியும். நான் இப்படி கேட்கவும், ‘அவ்வளவுதான கொஞ்ச நேரத்துல என் கம்பெனியிலிருந்து ஆள் வருவாங்க. எனக்கு நாளைக்கு பாட்டு வேணும்னு போனை வெச்சுட்டார் கமல். கொஞ்ச நேரத்துல ஒரு ஆள் வந்தார். ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் வைத்து எல்லா பாட்டுக்கும் பணத்தை மொத்தமா கொடுத்திருந்தார் கமல். அப்போதிருந்து நான் லட்சத்துக்கு குறையல. அந்த படம் மும்பை எக்ஸ்பிரஸ் போதுமா.” என்று முடித்தார் வாலி.

அவர் மறைவதற்கு சில வாரங்கள் முன்பு என் மீது அவர் கொண்ட அக்கறையும், அன்பும் உணர்ச்சிப்பூர்வமானது. வேலையிழந்திருந்த நேரம் மனைவியையும், குழந்தையையும் ஊருக்கு அனுப்பி வைத்திருந்தேன். ஒரு நாள் காலையில் போன் பண்ணினார். ”தேனி என்ன பண்ற, ,என்னய்யா இப்படி ஆகிப்போச்சு. உனக்கு வேலையில்லங்கறது எனக்குதான்யா வேதனையா இருக்கு. நீ வேற என் கட்டுரையை படிச்சுட்டு பாராட்டும் போது வெந்த புண்ல வேல் பாய்ச்சின மாதிரியிருக்குய்யா.” என்று எனக்காக அவர் வருந்திய சில நிமிடங்களிலிருந்து என் மன வேதனையெல்லாம் பறந்து போனது. அவர் எத்தனை உயரத்தில் இருக்கும் மனிதர். எனக்காக ஏன் வருத்தப்பட வேண்டும். அப்படி அவர் கொண்ட பாசம்தான் வாழக்கையில் நான் பெற்ற பாக்கியம். மீண்டும் பேசினார். “கவலை படாதே தேனி எல்லாம் நல்லபடியா நடக்கும். உன் கையில் வித்தை இருக்குய்யா ஏன் வருத்தப்படுற,” என்று அவர் பேசிக்கொண்டிருக்க, நான் உடைந்து அழுதே விட்டேன். இதை தெரிந்து கொண்ட அவர், என்னை சாமாதானப் படுத்த, பேச்சை திசைதிருப்பினார். “ஆமா.. இதென்ன புது நம்பரா இருக்கே.”என்க, “முன்ன பேசினது என் ஆபீஸ் எண். இதுதான் இனிமேல் எனக்கு நிரந்தர வைப்பு எண் அய்யா.” என்றேன். “.நீ நல்லா வருவேன்னு இப்பதான் சொன்னேன். அதுக்குள்ள பலிச்சிடுச்சு பார்த்தியா.” என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ”அதான்யா இப்பவே வைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டியே…” என்றார் வீட்டில் நான் தனியாக சிரித்து சிரித்து புரையேறியது.( புரியுதா..) என் சந்தோஷத்தை பார்த்த பிறகுதான், “சரிய்யா நான் அப்புறம் பேசறேன்.” என்று போனை வைத்தார்.

ஆனால் அதன் பிறகு நான் அவரை பார்த்தபோது பேசவேயில்லை. நிரந்தரமாக.

இதுவரைக்கும் என் வீட்டில் என் தந்தையின் போட்டோ கூட வைத்ததில்லை. எனக்காக் மனம் இரங்கிய தாடி வைத்த தமிழின் போட்டோவை வைத்துதான் வணங்கி வருகிறேன். தாமதம் ஆனால் என்ன, “உனக்கு நல்லதே நடக்கும்,” என்ற அவரின் வார்த்தைகள் பலிக்கத்தான் போகிறது.

(தாழ் திறக்கும்)

தேனி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.