’பூக்கி’ விமர்சனம்

170

நடிகர்கள் : அஜய் திஷன், ஆர்.கே.தனுஷா, பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
இயக்கம் : கணேஷ் சந்திரா
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – மீரா விஜய் ஆண்டனி

அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், விஜய் ஆண்டனி தயாரிப்பு மற்றும் இசையமைப்பில், அஜய் திஷன், ஆர்.கே.தனுஷா நடிப்பில், வெளியாகியிருக்கும் ‘பூக்கி’ படம் எப்படி இருக்கிறது ? , விமர்சனத்தை பார்ப்போம்.

2 கிட்ஸ்களான பூக்கி காதல் ஜோடி நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்கு இடையே ஏற்படும் சிறு கருத்து மோதலால் பிரிந்து விடுகிறார்கள். காதலர்கள் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். தங்களது காதல் பிரிவு தவிப்பில் இருந்து தப்பிப்பதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிய, காதல் பிரிவு வலிக்கு மருந்து மற்றொரு காதல் தான், என்ற மனநிலைக்கு வருகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு காதலை நோக்கி பயணிக்க, அந்த கதல் அவர்களது காதல் பிரிவு வலிக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? இல்லையா ?, என்பதை இளமை ததும்ப தடும்ப சொல்வது தான் ‘பூக்கி’.

காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்போதையை காலக்கட்ட இளைஞர்களின் வாழ்வியலை, கலகலப்பாக சொல்லியிருப்பதோடு, எந்த காலக்கட்டத்திலும் காதல் உணர்வு மாறுவதில்லை, என்பதையும் அழுத்தமாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயற்சித்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் கவர்கிறார். காதல் பிரிவு வலியை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது, அதில் இருந்து விடுபட வேறு தளங்களில் பயணித்து, அதனால் பாதிப்பு அடைவது, என்று படம் முழுவதும் பல உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிமையான அழகோடு கவர்கிறார். ஹீரோவுக்கு நிகராக நடிப்பில் அசத்தியிருப்பவர் நடனத்திலும் அசத்துகிறார். அழுத்தமான காட்சிகளில் மிக அசால்டாக நடித்து, யாருப்பா இந்த பொண்ணு ?, என்று வியக்க வைத்திருக்கிறார்.

பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டையும் சிறப்பாக செய்து படத்திற்கு பெரும் பலமாக பயணித்திருக்கிறார்.

புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வலியை ஜாலியாக சொன்னாலும், இறுதியில் காதல் வலியின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரக்கூடிய விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி கொடுக்கும் வலிக்கு மருந்து மற்றொரு வலியா அல்லது காதலா என்பதை, தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்துகள் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக அல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகத்தின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் மேற்கொண்ட வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்துவதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் காதல் எத்தனை பிரிவுகளாக பிரிந்திருக்கிறது, என்பதை ஜாலியான கலந்துரையாடலாக சொல்லியிருக்கிறார்.

காதலர் தினத்தில், காதலர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்திருப்பதோடு, தங்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாகவும் இந்த ‘பூக்கி’ அமைந்திருக்கிறது.

ரேட்டிங் 3.3/5

Comments are closed.