தெலுங்கில் சுதந்திர தினத்தன்று தளம் என்ற படம் ரிலீஸாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கோ மற்றும் கோவா படங்களில் துறுதுறு பெண்ணாக ரசிகர்களை கவர்ந்த பியா தான், இந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் கிஷோர் நாசர் இருவரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்தப்படத்தை தற்போது கூட்டம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்களாம். இந்தப்படத்தை ஜீவன் ரெட்டி இயக்கியுள்ளார்.
படத்தின் கதைக்களம் நக்சலைட்டுகளைப் பற்றியது. நக்சலைட்டுகளான நவீன் சந்திராவும் கிஷோரும் திருந்திவாழ நினைத்து தங்களது கூட்டத்துடன் போலீஸிடம் சரணடைகிறார்கள். ஜெயிலில் அவர்களை சந்திக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான அபிமன்யூ சிங் இவர்களை வைத்து தளம் என்ற அமைப்பை உருவாக்கி ஒரு சாதாரண போலீஸ்காரன் செய்யமுடியாத சில செயல்களை செய்கிறார். இந்நிலையில் நவீனை சந்திக்கும் பியா அவரை காதலிக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மோசமான அரசியல்வாதியான நாசர் இவர்களை தனது சொந்த நலனுக்காக தவறாக பயன்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் நாசர் கொடுத்த் அசைன்மெண்ட் ஒன்றை முடிக்கும் நேரத்தில் இவர்களை உருவாக்கிய போலீஸ் அதிகாரியே இவர்களை கொல்ல முயற்சிக்கிறார். இவர்களை அவர் கொல்ல நினைக்க காரணம் என்ன.. திடீரென்று இவர்களுடன் இணைந்த பியா யார்.. அவரது பின்னணி என்ன..? என்பது திடுக்கிட வைக்கும் சஸ்பென்ஸ்.
நக்சலைட்டுகளைப் பற்றி படம் எடுக்கும்போது கத்திமேல் நடப்பதுபோல கவனமாக இருக்கவேண்டும். அதை சரியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜீவன் ரெட்டி. வழக்கம்போல இந்தப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பியா. விரைவில் கூட்டம் என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கும் இந்தப்படம் தமிழ் ரசிகர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
மு.விஜயகுமார்