நடிகர்கள் : ஜோஜு ஜார்ஜ், அபிநயா, சாகர் சூர்யா, ஜுனாயஸ்.வி.பி, சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரன்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ்
இசை : விஷ்ணு விஜய் & சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : வேணு & ஜிண்டோ ஜார்ஜ்
தயாரிப்பு : ஏடி ஸ்டுடியோஸ் & அப்பு பது பப்பு – எம்.ரியாஸ் ஆதாம் & சிஜு வடக்கன்
ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பணி’ அதே தலைப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. மலையாள ரசிகர்கள் போல் தமிழ் ரசிகர்களையும் படம் கொண்டாட வைத்ததா? அல்லது கொன்று விட்டதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். அவருக்கு தெரியாமல் அங்கு எதுவும் நடக்காது என்ற சூழலில், குற்ற செயல்களில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் மூலம் நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு ஜோஜு ஜார்ஜுக்கு ஏற்படுகிறது. அதனால் அவர்களை பழி தீர்க்க, அவரது மொத்த சாம்ராஜ்யமே களத்தில் இறங்க, அந்த இளைஞர்கள் எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்களின் பதிலடியை முறியடித்து தனது பாணியில் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை கொடுக்க களம் இறங்கும் ஜோஜு ஜார்ஜ், அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘பணி’.
ஜோஜு ஜார்ஜ் வழக்கம் போல் தனது ஃபேவரைட் வேட்டி சட்டையில் இயல்பாக நடித்து கலக்குகிறார். மனைவியின் நிலை கண்டு கலங்குவதும், அடுத்த கனமே அதற்கு காரணமானவர்கள் மீது இருக்கும் தனது கோபத்தை கண்களில் வெளிப்படுத்துவது என அதிகம் பேசாமலேயே தனது உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டுகிறார்கள்.
சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், தோற்றங்கள் மூலம் அவர்களின் குணங்களையும் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறது.
விஷ்ணு விஜய் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பு கொடுத்திருக்கிறது.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு மற்றும் அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
ஆக்ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும் அதை சுவாரஸ்யத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். நாயகனாக இருந்தாலும், திரைக்கதையில் பல கதாபாத்திரங்களை பயணிக்க வைத்து அதன் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்பவர், இரண்டு இளைஞர்கள் நாயகனிடம் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் முழுவதும் சீட் நுணியில் உட்கார வைத்து ‘பணி’ மூலம் இயக்குநர் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
ரேட்டிங் 3/5
Comments are closed.