‘பாண்டியநாடு’ யாருடைய கதை? வெடிக்கும் சர்ச்சை..!

117

தீபாவளி தினத்தன்று சுசீந்திரன் டைரக்‌ஷனில், விஷால் நடிப்பில் வெளியான ‘பாண்டியநாடு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வெற்றிகரமாக ஓடினாலே சில சர்ச்சைகளும் அதைச்சுற்றி எழுவது வாடிக்கை தானே. அப்படித்தான் இப்போது ‘பாண்டியநாடு’ படத்தின் கதை என்னுடையது என கொடிபிடித்திருக்கிறார் ஒருவர்.

ஆண்டிபட்டியை சேர்ந்த புவனராஜா என்பவர் “‘அழகர்சாமியின் குதிரை’ படப்பிடிப்புக்காக சுசீந்திரன் ஆண்டிபட்டி வந்தபோது அவருடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அவரிடம் சில கதைகள், குறும்படங்கள் என்னிடம் இருக்கின்றன என்றும் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினேன். ஒருநாள் அவர் தனது உதவி இயக்குனர் மூலமாக என்னை சென்னைக்கு அழைத்து என்னிடம் கதை ஏதாவது இருந்தால் சொல்லும்படி கூறினார்.

நானும் அவரிடம் இரண்டு கதைகளை கூறினேன். அதன்பின் சமயம் வரும்போது என்னை அழைப்பதாக அவர் கூறவே திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் அவரிடம் இருந்து அழைப்பு ஏதும் இல்லை. தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரது உதவி இயக்குனர் என்னை தொலைபேசியில் அழைத்து சுசீந்திரன் தீபாவளி கிஃப்டாக உதவி இயக்குனர்களுக்கு பணம் போட சொல்லியிருக்கிறார் என்று கூறி எனது பாங்க் அக்கவுண்ட் நம்பரை வாங்கினார்.

ஆனால் பாண்டியநாடு படம் வெளியான பின் அதை பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். அதில் நான் சொன்ன கதையின் சாராம்சங்கள் சற்றே மாற்றப்பட்டிருந்தனவே தவிர கதை என்னுடையதுதான். எனது இரண்டு கதைகளையும் இணைத்து ‘பாண்டியநாடு’ படத்தை எடுத்திருக்கிறார். நான் மணல் திருட்டு என்று சொன்னதை கிரானைட் திருட்டாகவும், அதிகாரியை லாரி மோதி கொல்கிறார்கள் என்பதை பஸ் மோதி கொல்கிறார்கள் எனவும் மாற்றிவிட்டார்கள். ஆனால் நான் இதுபற்றி புகார் கொடுக்கப்போவதில்லை. இப்போதுகூட இதைச் சொல்வதற்கு காரணம் என்னைப்போல வேறு யாரும் அவரிடம் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சுசீந்திரன் என்ன சொல்கிறார்? “புவனராஜா ஆண்டிபட்டியில் எனக்கு அறிமுகமானார். அங்கே லொக்கேஷன் விஷயங்களில் உதவியாக இருந்தார். வேறு ஒரு படத்திற்காக சில இலக்கிய தகவல்கள் தெரிந்த ஆள் ஒருவர் உடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று புவனராஜாவிடம் கேட்டேன். அதற்கான புத்தகங்கள் வாங்க ஆகும் செலவிற்கு நாம் பணம்கூட தந்துவிட்டேன். ஆனால் அந்தப்படம் ட்ராப் ஆகிவிட்டது.

தீபாவளிக்கு முன்னர் எனக்கு போன் செய்து குழந்தைகளுக்கு துணி எடுக்க பணம் இல்லை என்றார். எனது உதவி இயக்குனரிடம் சொல்லி ரூ.25000 அனுப்பிவைத்தேன். அவருடன் பேசியகாலத்தில் தேனிப்பக்கம் தனக்கு பிடிக்காத ஒருவரை பழிவாங்குவதற்காக கை, கால்களை கட்டி கிணற்றில் போட்டுவிடும் ஒரு நடைமுறை இருக்கிறது என்று சொல்லி இருந்தார். அதை மட்டும் க்ளைமாக்ஸில் பயன்படுத்தினேன். மற்றபடி அவருடைய கதையை நான் பயன்படுத்திவிட்டேன் என்று கூறியதில் உண்மை இல்லை. இது சம்பந்தமாக நான் இயக்குனர் சங்கத்தில் புகார் அளிக்கப்போகிறேன்” என்கிறார் சுசீந்திரன்.

உண்மையில் நடந்தது என்ன?

Leave A Reply

Your email address will not be published.