‘ஒற்றைப் பனை மரம்’ விமர்சனம்

110

நடிகர்கள் : புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், மாணிக்கம் ஜெகன்
இசை : அஷ்வமித்ரா
ஒளிப்பதிவு : சி.ஜெ.ராஜ்குமார், மஹிந்தே அபிசின்டே
இயக்கம் : புதியவன் இராசையா
தயாரிப்பு : ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் – எஸ்.தணிகைவேல்

ஈழத்தின் இறுதி யுத்தத்திற்குப் பிறகு இயக்கத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் எத்தகைய கஷ்ட்டங்களை அனுபவித்தது என்பதையும், ஈழத்தில் நடக்கும் உண்மைகளை உலகிற்கு சொல்லும் விதமாகவும் வெளியாகியிருக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த வீரர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் இராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அப்போது ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை கண்டு வருந்தும் புதியவன் இராசையா, பெண்களை ஒன்றிணைத்து ஒரு சங்கம் தொடங்கி அதன் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருப்பதோடு, படத்தை இயக்கவும் செய்திருக்கும் புதியவன் இராசையா, ஈழத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அவர்களின் வலிகளையும் தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி நவயுகா, அடங்கி போக வேண்டிய இடத்தில் அமைதியாகவும், வெகுண்டெழும் இடத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்து கதபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அஜாதிகா புதியவன் மிக எதார்த்தமாக நடித்து பார்வையாளர்கள் இதங்களை கனக்கச் செய்திருக்கிறார்.

பொதுவாக ஈழத் தமிழர்களை மையப்படுத்திய படங்கள் என்றாலே, அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகள், பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, சொந்த மண்ணில் அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழும் நிலை உள்ளிட்ட சம்பவங்களை பதிவு செய்வதோடு, இறுதி யுத்தத்தின் பிறகும் அரசியல் ரீதியாக அம்மக்கள் வஞ்சிக்கப்படுவதை உலக மக்களுக்கு சொல்லும் விதமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் பல குற்றங்கள் செய்த சிங்கள ராணுவத்தினரின் அடாவடித்தனத்தை ஆரம்பக் காட்சியில் மட்டும் சிறிய அளவில் காண்பிக்கும் இயக்குநர் அதன் பிறகு தமிழகர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பது போல் படத்தை நகர்த்திச் செல்கிறார். இலங்கை தமிழர்களிடம் சாதி பாகுபாடு அதிகம் இருப்பது, சூழ்நிலை அமைந்தால் போராளிகள் உடன் இருப்பவர்களையே கொலை செய்வார்கள் உள்ளிட்ட பல காட்சிகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தாலும், அனைத்தும் நடந்த உண்மை சம்பவங்கள் என்பதால் அதை தைரியமாக சொல்லியிருப்பது பாராட்டுக்குறியது என்பதை மறுக்க முடியாது.

இலங்கையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் மஹிந்தே அபிசிண்டே மற்றும் இந்திய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் சி.ஜெ.ராஜ்குமார் இருவரும் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.

அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை தொடவில்லை என்றாலும், கதையில் இருந்து விலகாமல் பயணித்திருக்கிறது.

இறுதி யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறேன், என்று தனது படைப்புக்கு நியாயம் சேர்க்கும் இயக்குநர் புதியவன் இராசையா, சில விசயங்களை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கலாம். ஆனால், புலிகள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார், என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

வடக்கில் இருக்கும் இஸ்லாமியர்களை புலிகள் அமைப்பு வெளியேற்றிய சம்பவம் அவர்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று தவறு, என்று சொல்லும் இயக்குநர், அதை அவர்கள் ஏன் செய்தார்கள்? என்பதை விவரிக்கவில்லை. அதேபோல், சங்கம் அமைத்து பெண்கள் பாதுகாப்புக்காக போராட நினைப்பவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டத்தை ஏன் குறை சொல்கிறார், என்பதற்கான தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. இதுபோன்ற சில விசயங்கள் சற்று குறையாக இருந்தாலும், இறுதி யுத்தத்திற்குப் பிறகு தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த ‘ஒற்றைப் பனை மரம்’ பல துன்பங்களோடு வாழ்வதைக் காட்டிலும் மரணிப்பதே மேல் என்ற தமிழர்களின் எண்ணத்தை மிக நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.

ரேட்டிங் 3/5

Comments are closed.