“இன்னும் ஒரு நிமிஷம் முன்னாடி போயிருந்தா நானும் விபத்துல சிக்கியிருப்பேன்.. நல்லவேளை லேட்டா போனேன்..” என நாம் பேச்சுவாக்கில் சொல்வோமே, அந்த ஒரு நிமிடம் என்பது நம் விதியையே மாற்றவல்லது என்பதை காமெடியாக ஆனால் புதிய முறையில் சொல்லியிருக்கும் படம் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’
நாம் ஒருத்தரை சந்திப்பது திட்டமிட்ட நிகழ்வு என்றால் ஒரு நிமிடம் லேட்டாக போனாலும் அது நடந்துதானே தீரும் என பிரம்மனிடம் வாதிடுகிறார் நாரதர். பஞ்சாயத்து சிவபெருமானிடம் போகிறது. சிவபெருமானோ அதை மறுத்து, ஒவ்வொரு நிமிடத்துக்கும் என தனியாக ஒரு விதிப்பலன் உள்ளது என்பதை லைவ்வாக நிரூபிப்பதுதான் கதை.
அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள்(ந.கொ.ப.கா) என இந்த மூன்றுபேரும் சேர்ந்து பத்து மணிக்கு சர்ச்சில் திருமணம் செய்ய இருக்கும் அருள்நிதியின் காதலி ஹர்ஷிதா ஷெட்டியை கடத்த திட்டம் தீட்டி வீட்டைவிட்டு 8.59க்கு கிளம்புகிறார்கள்.. சில பல தடைகளை தாண்டி காதலியை கடத்தும் வேளையில் ஏற்பட்ட மோதலில் அருள்நிதி மீது குண்டு பாய்ந்து இறக்க நேரிடுகிறது.
பதறாதீர்கள்.. இப்போது சிவபெருமான் பூமியை மீண்டும் காலையில் இருந்து திரும்பவும் சுழலவைக்கிறார். இப்போது கடத்தல் டீம் 8.59க்கு பதிலாக ஒரு நிமிடம் தள்ளி 9 மணிக்கு கிளம்புகிறார்கள். அப்போது வேறுவிதமான சோக சம்பவம் நடக்கிறது. மீண்டும் சிவன் பூமியை திருப்ப இப்போது டீம் கிளம்பும் நேரம் 9.01. இதிலாவது சுபமாக முடிகிறதா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி இந்த மூன்று பேரையும் ஹீரோ, ஹீரோயின், காமெடியன் என ஒரு வட்டத்திற்குள் அடைக்காமல் மூவரையும் சமமான கதாபாத்திரங்களாக உலாவ விட்டிருக்கிறார்கள். அதுதான் படத்திற்கு பலமும் கூட. அதிலும் காதல் கலக்காத அருள்நிதி, பிந்துமாதவி ஃப்ரண்ட்ஷிப் படு யதார்த்தம்.
எப்போதும் முறுக்கிக்கொண்டிருக்கும் ஆளாகவே நாம் பார்த்துவந்த அருள்நிதி இதில் காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார். பிந்துமாதவியா இது..? கடத்தல் திட்டம் போடுவதில் இருந்து மாடிக்கு மாடி ஜம்ப் பண்ணுவது வரை நிறைய உழைப்பை தந்திருக்கிறார். அதிலும் சர்ச்சில் இரண்டு பேர்களை மிரட்டும்போது பிந்துமாதவிக்கு காமெடியும் நன்றாகவே கைவருகிறது.. இதில் பகவதியின் லூட்டியும் சேர்ந்துகொள்ள ஒரே கலாட்டா தான்.
படத்தின் கலாட்டா சீன்கள் :
1. என்கௌண்டர் போலீஸாக வரும் ஆடுகளம் நரேன் மனோபாலா டீக்கடையில் உட்கார்ந்து சிறுவர் மலர் கேட்பது
2. டீக்கடையில் தாதாவிடம் பகவதி மாட்டிக்கொண்டு முழிப்பது
3. ஹாஸ்பிடல் ரிஷப்னில் உள்ள இரண்டு பெண்களையும் மூன்றுமுறை விதவிதமாக ஏமாற்றுவது. (அதில் ஒரு பெண்ணின் காஸ்ட்லி காதல் டமால் ஆவது சூப்பர்)
4. ட்ராஃபிக் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸின் காமெடி
5. கதைக்கு ஒரு முடிவு தரும் வி.எஸ்.ராகவனின் ஃபைனல் காமெடி டயலாக்
6. பிந்துமாதவி-பகவதி சாக்ஸ் காமெடி
டாக்டராக வரும் ஜெயபிரகாஷ், ஹிப்பிலஹரியாக தமாசு பண்ணும் நாசர், டீக்கடை நாயராக வரும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், அருள்நிதியின் குண்டு நண்பன் உட்பட படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஒரே காட்சியில் மூன்று விதங்களில் நடித்துள்ளனர்.
நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்கள் தேவையில்லாத எந்த இடத்திலும் நுழையவில்லை. ஒரு நிமிடத்தின் வேல்யூவை விளக்கும் விதமாக சற்றே புதிய கோணத்தில் கதையை நகர்த்தியிருக்கும் சிம்பு தேவனின் முயற்சியை பாராட்டலாம். கோடைவெயிலின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக குளிர்ச்சியான நகைச்சுவை ஜூஸ் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன்.
Comments are closed.