மற்ற மொழிகளை விட தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பதுதான் சிரமமான காரியம். அதனால் வரும் படங்களில் ஏதாவது ஒரு பாட்டு ஹிட்டானால் அந்தப்பாடலின் வரியில் இருந்து டைட்டிலை தேடும் வேலைதான் இங்கே அதிகமாக நடக்கிறது.
அந்தவகையில் ‘சூதுகவ்வும்’ படத்தின் சூப்பர்ஹிட் பாடலில் இருந்து ‘காசு பணம் துட்டு’ என்ற வார்த்தையை எடுத்து தான் இயக்கும் படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டார் இயக்குனர் கஸ்தூரிராஜா. அவர் இயக்கும் 23 வது படம் இது. இந்த படத்தில் மித்ரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சுவேஷா சாவந்த், ஸ்ருதி பட்டேல் ஆகியோரும் புதுமுகங்களாக அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ராதிகா இருவரும் நடிக்கிறார்கள்.
‘காசு பணம் துட்டு’ படத்தின் கதை என்னவாம்..? “பிறக்கும் போதே யாரும் திருடனாக பிறப்பதில்லை. திருடன், பிக்பாக்கெட், ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன் என அவர்களை மாற்றியது யார் இந்த சமுதாயம் தான். இன்று உறவுகள், பாசம், அன்பு இதையெல்லாம் மீறிய விஷயமாக பணம் மாறி விட்டது. காசும், போதை பழக்கமும் தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றிவிடுகிறது என்கிற ஒரு வரி கதையை இரண்டு மணி நேர திரைக்கதையாக்கி இருக்கிறோம்” என்கிறார் கஸ்தூரிராஜா.