நட்பதிகாரம்-79 – விமர்சனம்

242

natpathikaram-79

அம்ஜத்கான்-ரேஷ்மி மேனன் ஒரு காதல் ஜோடி.. ராஜ்பரத்-தேஜஸ்வி இன்னொரு ஜோடி.. இரண்டு ஜோடிகளும் எதிர்பாராமல் நட்பாகின்றனர். இவர்கள் காதலுக்கு குடும்பமும் பிரச்சனை இல்லை.. அந்தஸ்தும் பிரச்சனை இல்லை.. சூழல் காரணமாக இரண்டு ஜோடிகளில் இருந்து ஒரு புது ஜோடி திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்படுகிறது.

இந்த கடினமான சூழலை மற்ற இருவருக்கும் புரியவைக்க அந்த புது ஜோடி எடுத்த நடவடிக்கைகள் செவிடன் காதல் ஊதிய சங்காக ஆகின்றது.. இது எதனால் நடந்தது..? முடிவு சுகமாக அமைந்ததா..? புதுமையாக அமைந்ததா என்பதே க்ளைமாக்ஸ்.

‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற காதல் காவியத்தை கொடுத்த ரவிச்சந்திரன் இதில் காதலையும் நட்பையும் இணைத்து கதைசொல்ல முயற்சித்திருக்கிறார்.. ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் நாயகர்களில் ஒருவரான ராஜ்பரத் அலட்டல் இல்லாத நடிப்பால் நம் மனதில் இயல்பாய் உட்கார்ந்து விடுகிறார்.

இன்னொரு நாயகன் அம்ஜத்கான் துறுதுறுவென நடித்தாலும் ஒரு செயற்கைத்தனம் இழையோடுகிறது.. நாயகிகளில் ரேஷ்மி மேனனுக்குத்தான் சுமை அதிகம்.. நன்றாகவே சுமந்திருக்கிறார். தேஜஸ்வியும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார்.

ஆனால் கதை..? காதலர்கள் தவறாக புரிந்துகொள்வதையும் ஜோடி மாறி கல்யாணம் வரை செல்வதையும் எத்தனையோ படங்களில் பார்த்து விட்டோமே.. அட்லீஸ்ட் இதில் புதிதாக ஹேண்டில் பண்ணியிருந்தால் கூட பரவாயில்லை.. இத்தனை பிரச்சனைகளையும் அவை உருவாவதற்கு முன்னாலும் உருவான பின்னாலும் சிம்பிளாக ஒரு போன் கால், ஒரு மெசேஜ், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வழிகளில் தீர்த்திருக்கும் வாய்ப்பு இருக்க, இயக்குனர் வலுக்கட்டாயமாக அதையெல்லாம் உபயோகப்படுத்தவே இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் நட்பில் காதலை கலக்காமல், அதன் கண்ணியத்தை கைப்பற்றும் விதமாக க்ளைமாக்ஸ் அமைந்ததற்காக பாராட்டலாம். இசையமைப்பாளர் தீபக் நிலம்பூர் ஏ.ஆர்.ரஹ்மானின் சீடர் என்பதற்காக பொசுக்கு பொசுக்கென பாட்டை போட்டுவிட வேண்டுமா என்ன..? இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் புதிய பாணி ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Comments are closed.