நான் சிகப்பு மனிதன் – விமர்சனம்

126


விஷாலுக்கு சிறுவயதில் இருந்தே திடீர் திடீரென தூங்கி விழுகின்ற ‘நார்கோலெப்ஸி’ என்கிற நோய். அம்மா சரண்யாவின் துணையோடு படிப்பை முடித்தவருக்கு, இந்த நோயால் வேலை கிடைப்பது தடைபடுகிறது. நண்பன் துணையில்லாமல் தனியாக போக முடியாது.. இதற்கெல்லாம் உச்சமாக அவரால் திருமண உறவில் ஈடுபட்டு ஒரு வாரிசை உருவாக்கவும் முடியாது.

ஒருகட்டத்தில் இதையெல்லாம் தாண்டி லட்சுமி மேனன் மூலமாக காதல் அவரை தேடி வருகிறது. வாரிசு உருவாக்கும் சூட்சுமத்தையும் லட்சுமி மேனன் கண்டுபிடிக்க, அடுத்து அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என நினைக்கும் வேலையில் எதிர்பாராமல் இடி இறங்குகிறது. அது என்ன.., நார்கோலெப்ஸி நோயுடன் விஷால் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

புதுவிதமான வியாதி தான்.. ஆனால் அதற்கு அற்புதமாக உயிர்கொடுத்திருக்கிறார் விஷால். தூங்கி விழும்போதெல்லாம் சிரிப்பு, பரிதாபம் என கலவையாக கைதட்ட வைக்கிறார். அளவு மீறாத இயல்பான நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார். இடைவேளைக்குப்பின் வில்லன்களை கண்டுபிடிக்கவேண்டிய கட்டாயத்தில், தனது வியாதியின் வீரியத்தை குறைக்க அவர் கையாளும் டெக்னிக்குக்கள் சூப்பர்..

லட்சுமி மேனன்.. சொல்லவே தேவையில்லை.. இதிலும் லட்சுமிகரமான மேனன் தான்.. துணிச்சலான லிப்லாக் முத்தக்காட்சியில் நம்மை மிரட்டுபவர், இடைவேளையில் நம் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.

நண்பர்களாக ஜெகன், சுந்தர் ராமு.. அதிலும் ஜெகன் விஷாலுக்கு ட்ரைவர் வேலை பார்ப்பது சரியான காமெடி.. சுந்தர் ராமு நடிப்பு சற்று மிகையோ என நினைக்க தோன்றுகிறது, அவரது கேரக்டரை தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..

கொஞ்ச நேரமே வந்து லைட்டாக வில்லித்தனம் காட்டி வீணாக உயிரை விடும் இனியாவின் நடிப்பு கச்சிதம். இனியாவை மடக்கும் ‘கருங்காலி’ சீனுவும் பரவாயில்லை. சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் இருவருமே பாந்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷின் இசை பாடல்களைவிட, பின்னணியில் மிரட்டுகிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் தண்ணீருக்குள்ளான ரொமான்ஸ் காட்சி மனதை அள்ளுகிறது.

வழக்கமான காதல், பழிவாங்கும் ஆக்ஷன் கதை தான் என்றாலும் அதை சொல்ல எடுத்துக்கொண்ட வித்தியாசமான கதைக்களத்திலேயே நம் கவனத்தை ஈர்த்து கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் திரு. விஷால் தூங்கிவிழும் காட்சிகள், அவரை தூங்கவிடாமல் தடுக்கும் காரணிகள் என ஒவ்வொன்றையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இடைவேளை வரை தொய்வில்லாமல் பறக்கும் கதையில் அதற்குப்பின்னும். வில்லன்களை வடிவமைத்ததிலும் ஃப்ளாஸ்பேக் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் புதிதாக மாற்றி யோசித்திருந்தால் ஃபவுண்டரிக்கு பதிலாக சிக்ஸரே அடித்திருக்கலாம்.

ஆனாலும் போரடிக்காத ஒரு முழு நீள படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் திருவுக்கு தாராளமாய் நன்றி சொல்லலாம்..

Comments are closed.