ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ‘சே’ என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். இந்த திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்த படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம். இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில்,“நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜுமுருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன். அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால் அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில்,“ இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம். என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறு வேறு அல்ல. இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன்.. யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். இந்த படத்தில் ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில். “ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது. கதையில் ஒரு உண்மை இருந்தது.
மனிதநேயத்தை மதிக்கவேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும் ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.
படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி.
கற்றது தமிழ், ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்று என்னை கேட்டபோது, இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது. நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்.”என்றார்.
‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

Comments are closed.