நினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன்.. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பெயர் திருமணம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, கேரளாவை சேர்ந்த கவிதா சுரேஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.. இந்தநிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.
விழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவு வாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்வில் வைரமுத்து பேசும்போது, ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம், காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை, வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள், உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.” என பேசினார்.
Comments are closed.