நடிகர்கள் : மம்முட்டி, பிருத்விராஜ், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன், ஜாய் மேத்யூ, ரெஞ்சி பணிக்கர்.
இசை : பிஜிபால்
திரைக்கதை : ஆர்.உன்னி
கதை, ஒளிப்பதிவு, இயக்கம் : வேணு
கதை என்ன?
ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்டாக வேலைபார்க்கிறார் அபர்ணா.. அவர் மிகவும் மதிக்க கூடிய மூத்த பத்திரிகையாளரான பிரதாப் போத்தன், தனது நண்பரும் ஜெயில் அதிகாரியுமான நெடுமுடி வேணு தனது சுயசரிதையை எழுத விரும்புவதால் அதற்கு உதவியாக அபர்ணாவை ரெகமண்ட் செய்து அனுப்பி வைக்கிறார்.
ஜெயிலுக்கு அவரை சந்திக்கபோன இடத்தில் அங்கே கைதியாக இருக்கும் மம்முட்டியையும் ஏதேச்சையாக சந்திக்கிறார் அபர்ணா. மனைவியையும் இன்னொரு பெண்ணையும் கொலைசெய்த குற்றத்திற்காக ஜெயிலுக்கு வந்தவர் மம்முட்டி.
ஆனால் தண்டனைக்காலமான 14 வருடங்கள் முடிந்து 6 வருடங்கள் ஆகியும் கூட, அங்கிருந்து போக மனமில்லாமல் ஜெயிலிலேயே அதிகாரிகளுக்கு அசிஸ்டென்ட் ஆக, கூடமாட வேலை பார்த்துக்கொண்டு அங்குள்ள லாக்கப்பிலேயே தங்கியிருக்கிறார் மம்முட்டி.
அவரை பற்றிய விபரம் அறிய முற்படும் அபர்ணாவிடம், தான் அந்த கொலைகளை செய்யவில்லை என்று சொல்கிறார் மம்முட்டி. தத்துவார்த்தமாக பேசும் மம்முட்டியின் பேச்சுக்களும் அவரது அமைதியான சுபாவமும் கண்ட அபர்ணா, ஒரு வாரப்பத்திரிகையில் அவரை பற்றிய கவர் ஸ்டோரி ஒன்றை எழுதுகிறார்.
அதன் மூலம் மம்முட்டியுடன் சேர்ந்து, அபர்ணாவும் பிரபலமாகின்றார். பல பத்திரிகைகளும் சேனல்களும் ஜெயில் அதிகாரிக்கு போன் செய்து மம்முட்டி பற்றி விசாரிக்கின்றனர். இதனால் அதிகாரியின் கோபம் மம்முட்டியின் மீது திரும்புகிறது. அவரை ஜெயிலை விட்டு கிளம்பி வெளியே போகும்படி சொல்லி விடுகிறார்..
இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பதிப்பகம் ஒன்று அபர்ணாவிடம் மம்முட்டியின் கதையை புத்தகமாக எழுதி தரும்படி கேட்டு, அதற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுக்கவும் முன் வருகிறது. அதனால் மம்முட்டியை ஜெயிலை விட்டு அழைத்து செல்கிறார் அபர்ணா.
அவரை யாருக்கும் தெரியாத இடத்தில் தங்கவைத்து அவரிடம் அவரது வாழ்க்கையை பற்றி, அந்த இரட்டை கொலையில் உள்ள மர்மம் பற்றி எழுத சொல்கிறார். மம்முட்டியும் அதற்கு சம்மதிக்கிறார். அந்த பதிப்பகம் 30 நாட்களுக்குள் மொத்த கதையையும் தரவேண்டும் என கெடு விதித்து அட்வான்ஸ் பணமும் கொடுக்கிறது.
தான் ஜெயில் அதிகாரியின் சுயசரிதையை எழுதுவதற்காகத்தான் வந்தோம் என்கிற விஷயத்தை மறந்து, இந்த புத்தக வேலையில் பிசியாகிவிடும் அபர்ணா, அந்த அதிகாரி மற்றும் ரெகமன்ட் செய்த பத்திரிகையாளர் இருவரின் கோபத்துக்கும் ஆளாகிறார்.
ஆனால் நாட்கள் செல்கிறதே தவிர மம்முட்டி ஒரு பக்கம் கூட எழுதாமல் அபர்ணாவை சோதிக்கிறார். ஒரு பக்கம் பதிப்பகம் கொடுத்த காலக்கெடு நெருங்குவதாலும், இன்னொரு பக்கம் பதிப்பகத்திற்கு இவரை ரெகமன்ட் செய்த இவரது நண்பர்கள் இருவர் புத்தகம் என்னாச்சு என அடிக்கடி கேட்பதாலும் டென்ஷனில் தவிக்கிறார் அபர்ணா..
இடையில் இன்னொரு வட இந்திய பெண் பத்திரிகையாளர் ஒருவர் மம்முட்டியின் கதையை எழுதப்போவதாக சொல்லிக்கொண்டு மம்முட்டியை தேடிவர, அதனால் கிராமத்தில் உள்ள ஆள் அரவமில்லாத தோப்பு வீடு ஒன்றிற்கு மம்முட்டியை மாற்றுகிறார் அபர்ணா. ஆனாலும் எழுதாமல் காலம் கடத்துகிறார் மம்முட்டி.
இன்னும் நான்கு நாட்களே கெடு இருக்கும் சூழ்நிலையில் சொன்ன நேரத்தில் ஸ்கிரிப்ட்டை தராவிட்டால், பதிப்பகத்தின் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய டென்ஷனில் இருக்கும் அபர்ணாவை பெண்பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் பிருத்விராஜ். அபர்ணாவின் சூழ்நிலையை பார்த்து கஷ்டமான எதையும் வீணாக இழுத்துப்பிடித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே என அட்வைஸ் பண்ணுகிறார் பிருத்வி. அதனால் மமமுட்டியை வைத்து இந்த புத்தகம் எழுதும் எண்ணத்தையே விட்டொழிக்க முடிவுசெய்கிறார் அபர்ணா..
இருந்தாலும் கெடு முடிய ஒரு நாள் இருக்கும்போது மம்முட்டி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து, அவர் மீது கோபம் கொண்டு, அவரை திட்டி வேறு இடம் பார்த்துக்கொண்டு கிளம்புமாறு சொல்கிறார். ஆனால் அப்போது ஆச்சர்யமாக முதல் நாள் தான் எழுதி வைத்திருந்த பேப்பர்களை அபர்ணாவிடம் தருகிறார் மம்முட்டி.
அதை வியப்புடனும், திகைப்புடனும் படித்துப்பார்க்கும் அபர்ணாவின் முன்னால் நின்று, நான் எங்கே போவதென்று முடிவு செய்துவிட்டேன் என்கிறார் மம்முட்டி… ஆனால் இறுதியில் அவர் எடுக்கும் முடிவு தான் நமக்கு மிகப்பெரிய ஷாக்..
ஒரு கதை, ஒரு கதாபாத்திரம் ஒரு நடிகனிடம், என்ன கேட்கிறதோ அதைமட்டுமே கொடுப்பவன் தான் சிறந்த நடிகன் என்பதை மம்முட்டி பல பல படங்களில் நிரூபித்திருக்கிறார். இந்தப்படமும் அந்தப்பட்டியலில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.
தண்டனை காலம் முடிந்தும்கூட வேறு போக்கிடம் இல்லாததால் ஜெயிலுக்குள்ளேயே மனப்பூர்வமாக சுற்றுவது, தத்துவார்த்தமாக பேசுவது, தன்னை வைத்து கதை எழுத முயற்சிக்கும் அபர்ணாவுக்கு ஒத்துழைப்பு தருவதாக சொல்வது, ஆனால் ஒரு நாள்கூட, ஒரு எழுத்துகூட எழுதவராமல் தவிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் எழுப்புகிறார் மம்முட்டி.
அவரது நடிப்பில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. அவரது கேரக்டர் சீரியசானது என்றாலும் பல இடங்களில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். மம்முட்டி தங்கியிருக்கும் மாடி அறைக்கு அவருக்கு சாப்பாட்டு கொடுக்க வரும் பையன் மம்முட்டியிடம் நான் கதை சொல்கிறேன் என மோகன்லாலையும் துல்கர் சல்மானையும் வைத்து அள்ளிவிடும் காட்சிகள் சுவராஸ்யம்.. அதிலும் துல்கரா..? யார் அது? என அந்த சிறுவனிடம் மம்முட்டி கேட்கும் இடத்தில் தியேட்டரில் அப்படி ஒரு கைதட்டல்… காரணம் உங்களுக்கு புரியும் தானே..!
பாப் கட்டிங் தலையும் முட்டை கண்ணாடியுமாக அசல் ஜர்னலிஸ்ட்டாகவே மாறியிருக்கிறார் அபர்ணா கோபிநாத். ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்டிற்கே உரிய ஆர்வத்தையும் அதேசமயம் தொழில் போட்டியையும் சரியாக கையாண்டிருக்கிறார். சுய சரிதை எழுதப்போன இடத்தில் வேறு ஒரு விஷயம் கைக்கு கிடைக்க, அப்படியே முன்னதை விட்டுவிட்டு பின்னதிற்கு தாவும்போது, யாதார்த்ததில் ஒரு சில பத்திரிகையாளர்களின் முகங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
படம் பார்க்கும் நமக்கு கிடைக்கும் போனஸ் சர்ப்ரைஸ் தான் பிருத்விராஜின் எண்ட்ரி. அமெரிக்க மாப்பிள்ளையாக அஞ்சு நிமிஷம் வந்தாலும் அவ்வளவு துறுதுறுப்பாக இருக்கும் பிருத்வியை பார்க்கும்போதே நமக்கும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. பிரதாப் போத்தன், நெடுமுடி வேணு, அபர்ணாவின் பத்திரிகை நண்பராக வரும் இயக்குனர் ரெஞ்சி பணிக்கர், மூத்த பத்திரிகையாளராக வரும் ஜாய் தாமஸ் என அனைவருமே பத்திரிகையுலகில் நடமாடுபவர்களாகத்தான் நமக்கு தோன்றுகிறார்கள்..
ஜெயிலில் தண்டனை முடிந்தாலும் கூட அதிகாரிகளுக்கு உதவி செய்துகொண்டு சுதந்திரமாக மம்முட்டி நடமாடுவதையும் ஜெயிலை விட்டு வெளியே வந்தாலும் அபர்ணாவின் நிர்ப்பந்தத்தால் வெளியே எங்கும் செல்லமுடியாமல் அறைக்குள்ளே அடைபட்டு அங்கே மனதளவில் ஜெயில் வாழ்க்கையையே வாழ்வதையும் பார்க்கும்போது அபர்ணா போன்ற நபர்களின் மீது நமக்கு ஒரு இயல்பான கோபம் எழுகிறது.
படத்தின் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸில் நாம் அதிர்ச்சியானாலும் படம் முடிந்து வீட்டிற்கு வரும்போது நிதானமாக யோசித்து பார்த்தால் மம்முட்டி எடுக்கும் முடிவுக்கு காரணம் கூட அதுதானோ என்று நம்மை நாமே சமாதானபடுத்திக் கொள்ளவும் அந்த கோபமே காரணமாகிறது.
இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் வேணு. படத்தின் ஒளிப்பதிவையும் சேர்த்து இவரே கவனித்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக வலுவான திரைக்கதையை அமைத்து படத்தை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறார் ஆர்.உன்னி.
ஜெயிலில் இருப்பவர்களின் மன உணர்வு இப்படித்தான் இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது என்பதை மம்முட்டி கதாபாத்திரம் வாயிலாக அருமையாக விளக்கியுள்ளார் வேணு. கடைசிவரை மம்முட்டியின் பிளாஸ்பேக்கை எந்த ஒரு இடத்திலும் அவிழ்க்காமல் கதையை நகர்த்தி சென்றிருக்கும் அவரின் சாதுர்யம் புதுசு என்பதுடன் பாராட்டுக்கும் உரியது.
ரிசல்ட் : படம் மலையாளத்தில் சூப்பர்ஹிட்.. சில காலமாக மம்முட்டிக்கு ஏற்பட்டிருந்த சரிவை நிமர்த்தி இருக்கிறதாம்.

Comments are closed.