முண்டாசுப்பட்டி – விமர்சனம்

217

இரண்டு மணி நேரம் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும்படி படம் எடுக்க முடியுமா? திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தை பார்க்கும்போது முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

எப்போதோ வானத்தில் இருந்து வந்து கோயிலுக்குள் விழுந்த விண்கல் ஒன்றை ’வானமுனி’ சாமியாக வணங்கும் முண்டாசுப்பட்டி கிராமத்தினர் போட்டோ எடுத்தால் வியாதி வந்து செத்துப்போவோம் என நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை செத்து சுடுகாட்டுக்கு போகும்முன் போட்டோ எடுத்து வீட்டில் மாட்டுவதுதான் வழக்கம்.

அப்படிப்பட்ட ஊருக்கு, சாகும் தருவாயில் உள்ள ஊர்த்தலைவரின் தந்தையை அவர் இறந்தபின் போட்டோ எடுப்பதற்காக வெளியூரில் இருந்து செல்கின்றனர் போட்டோகிராபர் விஷ்ணுவும் அவரது உதவியாளர் காளியும். போன இடத்தில் ஏற்கனவே இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட தலைவர் மகளான நந்திதா மீது விஷ்ணுவுக்கு காதல்.

இந்த நேரத்தில் இறந்தவரின் போட்டோ சரியாக பதிவாகாததால் ஊராரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, அதே சாயலில் உள்ள தங்கள் ஸ்டுடியோவிற்கு அடிக்கடி வரும் ராம்தாஸை சினிமா ஆசைகாட்டி பிணம் போல போட்டோ எடுத்து அதை ஊர்த்தலைவரிடம் ஒப்படைக்கிறார்கள்.

ஆனால் இறந்துபோனவரின் உறவுக்காரரான ராம்தாஸ் முண்டாசுப்பட்டிக்கு வர, அவர் மூலமாக போட்டோ விஷயம் தெரிந்து விஷ்ணு, காளி இருவருக்கும் தண்ணீர் வரும்வரை கிணறு தோண்டும் தண்டனையை தருகிறார்கள் ஊர்க்காரர்கள். விஷ்ணுவும் நந்திதாவை அருகில் இருந்து பார்க்கும் ஆசையில் வாய்ப்பிருந்தும் தப்பிக்க நினைக்காமல் காளியுடன் அங்கேயே டேரா போடுகிறார்,

இந்நிலையில் ஏற்கனவே தாத்தாவின் மரணத்தால் தடைபட்டிருந்த நந்திதாவின் திருமண ஏற்பாடு வேகமாக நடக்கிறது. அதேசமயம் ஊரே வணங்கும் வானமுனி சிலையை கடத்தி அதன்மூலம் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள் விஷ்ணுவும் காளியும். ஆனால் அது அவர்களுக்கு எதிராகவே திரும்ப மீண்டும் ஊராரின் கோபத்திற்கு ஆளான விஷ்ணு நந்திதாவை கைபிடித்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

1982 காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான கதை. அதற்கேற்ற மாதிரி பார்த்து பார்த்து கவனமாக செய்திருக்கிறார்கள். விஷ்ணு, காளி(வெங்கட்) ரெண்டு பெருமே ஹீரோ தான் என்று சொல்லும் அளவுக்கு ஆரம்ப காட்சியில் இருந்து இறுதிவரை இணைந்தே வருகிறார்கள்.. விஷ்ணுவுக்கு நீண்ட நாளைக்கு அப்புறம் ஒரு ஹிட் படம் இது என்றே சொல்லலாம். நந்திதாவுடன் காதல், அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்வது, நடை உடை பாவனை என எண்பதுகளின் காலகட்டத்தில் உள்ள இளைஞனை அப்படியே நகல் எடுத்திருக்கிறார்.

ஜாடிக்கேத்த மூடியாக விஷ்ணுவுடன் சேர்ந்துகொண்டு காட்சிக்கு காட்சி வசனம், முகபாவனை, மைண்ட் வாய்ஸ் என எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கிறார் காளி. உட்கார இடம் தர மறுப்பவர்களை கேமராவை காட்டி பதறியடித்து ஓடவைப்பது சிரிக்காதவரையும் கூட சிரிக்க வைக்கும். காளிக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

அதிர்ந்து பேசாத அமைதியான நந்திதா படம் முழுவதும் பெரும்பாலும் கண்களாலேயே பேசுகிறார். விஷ்ணுவுக்கு எதிர்பாராமல் முத்தம் தரும் இடத்தில் இளசுகளுக்கு சிலிர்ப்பு ஏற்படுத்துகிறார்.

முனீஷ் காந்த்தாக வந்து லூட்டி அடிக்கும் ராம்தாஸின் காட்சிகள் எல்லாமே செம அலப்பரை. முண்டாசுப்பட்டியில் இறந்தவர் வீட்டுக்கு அவர் வருவது சரியான காமெடி ட்விஸ்ட். கிராமத்தில் விஷ்ணு, காளி இருவரிடமும் மாட்டிக்கொண்டு ராம்தாஸ் படும் பாடுகள் அனைத்தும் ஜாலி கலாட்டா. அதிலும் க்ளைமாக்ஸில் ஆனந்த்ராஜை பார்த்து அவர் அடிக்கும் துப்பாக்கி-தோட்டா காமெடிக்கு தியேட்டரே அதிர்கிறது

ஆனந்த்ராஜ் இதில் ‘வித்தியாச’ ராஜ். பூனை சூப் குடிப்பது, கிண்டல் செய்யும் வேலைக்காரனை விரட்டுவது என புதுமுகம் காட்டியிருக்கிறார். மாட்டிக்கொள்ளும் கோயில் சாமியார், பெட்டிக்கடை வைத்திருக்கும் அப்பாவி மீசைக்காரர் ஆகியோரது காமெடி போர்ஷன் எல்லாமே ஹைலைட் தான்.

சீன் ரோல்டனின் இசை சில நேரங்களில் அடக்கி வாசித்தாலும் பல நேரங்களில் எண்பதுகளை விட்டுவிட்டு இரண்டாயிரத்து பதினாலுக்கு வந்து வந்து போகிறது. பி.வி.சங்கரின் கேமரா எண்பதுகளின் கிராமத்தை கண்ணில் நிறுத்த ரொம்பவே மெனக்கெட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

போட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கையை வைத்து இரண்டுமணி நேர அலுப்பிலாத படத்தை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம்குமார். கடைசியில் அந்த மூட நம்பிக்கையையே அஸ்திரமாக பயன்படுத்தி விஷ்ணு தப்பிப்பது காமெடியானாலும் லாஜிக்கான விஷயம். உங்கள் குழந்தைகள் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரிப்பதை பார்த்து ரசிக்க வேண்டுமா..? உடனே முண்டாசுப்பட்டிக்கு செல்ல டிக்கெட் போடுங்கள்.

 

Comments are closed.