
தமிழ் சினிமாவை மெல்லிசைப் பக்கம் திருப்பிய அந்த ராகதேவன்களில் ஒருவரான ராமமூர்த்தி இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்தார். இதோ இன்று அடுத்தவரான எம்.எஸ்.விஸ்வநாதனும் இப்போது நம்முடன் இல்லை. ஆம்.. கடந்த சில மாதங்களாகவே வயதானால் ஏற்படும் உபாதைகளால் பலவீனமடைந்து சிகிச்சை பெற்று வந்த 87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்.
ஓங்கி குரலெடுத்து நாடகப்பாணியில் பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவும் தமிழ்த்திரை இசையும் 1960களில் அதன் உச்சத்தைத் எட்டியது என்றால் அப்படிப்பட்ட பொற்காலத்தை உருவாக்கிய இரட்டையர்கள் தான் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே.ராமமூர்த்தியும்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் விஸ்வநாதனை தவிர்த்துவிட்டு ராம்மூர்த்தியை பற்றி மட்டும் தனியாக எழுதிவிட முடியாது. காரணம் திரையுலகப்பயணத்தின் தொடக்க காலத்தில் இருந்தே இருவரும் நகமும், சதையுமாகத்தான் செயல்பட்டார்கள். அந்த கால கட்டத்தில், இந்தி திரைப்பட உலகில், சங்கர்-ஜெய்கிஷன் என்ற இருவர் இரட்டை இசையமைப்பாளர்களாக பிரபலமாகியிருந்தனர். தேவதாஸ் மற்றும் சண்டிராணி படங்களின் வெற்றியைக் கண்ட விஸ்வநாதன், அதேபோல தமிழ் சினிமாவில் நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் என்ன என்ற தனது ஆசையை ராமமூர்த்தியிடம் வெளியிட்டார்.
முதலில் இதற்கு மறுத்த ராமமூர்த்தி, பின்னர் விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இரட்டை இசையமைப்பாளராக பணியாற்ற ஒத்துக் கொண்டார். அன்று முதல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி பிரபலமானது. எண்ணற்ற இசை காவியங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இந்த இருவரின் இசைப்பயணம் கிட்டத்தட்ட 700 படங்கள் வரை எந்தவித சலனமும் இல்லாமல் தொடர்ந்தது. ஆனால் விதியின் விளையாட்டால் 1965-ல் எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தோடு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன்பினர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்தார் விஸ்வநாதன்.
ஆனால் பிரிந்திருந்த காலத்திலும் கூட நட்பு பாராட்டுவதை இவர்கள் கைவிடவில்லை. சகோதரர்களாகவே வாழ்ந்தனர். மீண்டும் இணைந்தபிறகு விஸ்வநாதன் எந்த நிகழ்ச்சியிலோ அல்லது பாராட்டு விழாவிலோ கலந்துகொண்டாலும் தவறாமல் ராமமூர்த்தியையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள ராமமூர்த்தி வீட்டுக்கு, விஸ்வநாதன் போவதும், பெசன்ட் நகரில் உள்ள இவர் வீட்டுக்கு ராமமூர்த்தி போவதும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
கண்ணதாசன் எழுதிய “நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை கேட்கும்கும்போதெல்லாம் ராமமூர்த்தியின் பிரிவை எண்ணி எம்.எஸ்.விஸ்வநாதன் கண்கலங்கி விடுவாராம்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய ‘பணம்’ படத்தில் இந்த இருவரில் யாருடைய பெயர் முதலில் இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது ராமமூர்த்தி, விஸ்வநாதனை விட வயதில் மூத்தவராக இருந்தாலும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்பதுதான் சொல்வதற்கு ரைமிங்காக இருக்கும் என்று இருவரின் சம்மதத்தை வாங்கிய பெருமை கலைவாணரையே சாரும்.
1963ல் மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்ச்சுரல் அகாடமி சார்பில், ஹிந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் ‘சித்ராலயா’ கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் இவர்கள் இருவருக்கும் “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த…’ பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின்மாயானத்தில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மெல்லிசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.
Comments are closed.