தலைப்பை பார்த்ததும் அக்மார்க் கிராமத்து கதையோ என நினைத்துவிடவேண்டாம்.. முழுமுழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நம்ம ஊர் மண்வாசனை கமழும் படம் தான்..
மலேசியாவில் செட்டிநாடு ஹோட்டல் நடத்துபவர் பிரபு. மனைவி இறந்துவிட்டதால் தனது ஒரே மகன் காளிதாஸை செல்லமாக வளர்க்கிறார்.. கல்லூரியில் படிக்கும் காளிதாஸ் தந்தையின் அன்பை புரிந்துகொள்ளாமல் மனம் போனபடி நடக்கிறார்.. இதனால் பிரபுவுக்கு வருத்தம் ஏற்படுத்துவதுடன், காதலி ஆஸ்னா ஜவேரியுடன் கூட முரண்படுகிறார்.
இந்நிலையில் பக்கத்து தீவில் இருக்கும் பிரபுவின் நண்பர் ஒய்.ஜி.மகேந்திரன் இவர்கள் இருவரையும் வரவழைத்து துறவியான கமலை சந்திக்க வைக்கிறார்..
கமல் அவர்கள் ஒருவர் பிரச்சனையை இன்னொருவர் புரிந்துகொள்ளட்டும் என்பதற்காக இருவரையும் கூடுவிட்டு கூடுபாய வைக்கிறார். இருவரும் மலேசியா திரும்ப, இப்போது பிரபுவின் உருவத்தில் காளிதாசும், காளிதாஸின் உருவத்தில் பிரபுவும் மாற, இருவரின் அன்றாட நடவடிக்கைகளும் தலைகீழாக மாறுகிறது.. இதனால் ஏற்கனவே இருந்த சிக்கல் தீர்ந்ததா இல்லை புதிய சிக்கல் உருவானதா என்பதை இடைவேளைக்குப்பின் சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் அமைதியான அன்பான பிரபு, இடைவேளைக்குப்பின் ஆர்ப்பாட்டமான பிரபு என இரண்டு கெட்டப்புகளிலும் அசத்துகிறார். ஆனால் காட்சிகள் ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்துப்போன பழைய மீன் குழம்பாக இருக்கிறது..
ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படம் இது. களையான முகம்.. முதல் படத்திலேயே அதீத லவ், அதிரடி ஆக்சன் என்றெல்லாம் கதையை தேர்வு செய்யாமல், கதைகேற்ற கேரக்டராக இதில் தன்னை பொருத்திக்கொண்டு இருப்பதால் மக்கள் மத்தியில் இவரது முகம் நன்றாகவே பதியும். நடிப்பும் குறைசொல்லும்படி இல்லை.
இரண்டே காட்சிகள்.. மொத்தம் ஐந்தே நிமிடங்கள் வரும் கமல் நம் மனதில் நிறைகிறார். அதிலும் துறவியாகவும், விஸ்வரூபம் கமலாகவும் அவரை காட்டியிருப்பதும் அதற்கு அவர் சொல்லும் காரணமும் சூப்பர்.
காளிதாஸுக்கு ஜோடியாக ஆஸ்னா ஜவேரி. துறுதுறுப்பான பெண்ணாக வளைய வருகிறார்.. அதிரடி பெண்மணியாக வரும் பூஜா குமார், பிரபு தரும் காபியில் மனதை பறிகொடுத்து அவரை காதலிக்க ஆரம்பிப்பது கலாட்டா எபிசோட்.. ஊர்வசி வழக்கம்போல படபட பட்டாசு. ‘டான்’ ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அவரது வலது கையாக வரும் தளபதி தினேஷும் ஜாடிக்கேத்த மூடி.
இமான் இசையும், லட்சுமணின் ஒளிப்பதிவும் மலேசியாவை புதிய கோணத்தில் காட்டுகின்றன. தந்தை-மகன் இருவருக்குமான தலைமுறை இடைவெளியை புதிய கோணத்தில் சரி செய்யலாம் என இயக்குனர் அமுதேஷவர் யோசித்ததெல்லாம் சரிதான். ஆனால் காட்சியமைத்தலில் வித்தியாசம் காட்டாமல் பழைய ’க்ளிஷே’க்களை இதில் பயன்படுத்தி இருக்கவேண்டாமே..
இருந்தாலும் இந்த மீன் குழம்பும் சுவையாகவே இருக்கிறது.
Comments are closed.