‘கடல்’ படத்துக்குப் பின் மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் என்னாச்சு என ரசிகர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் மலையாள நடிகர் ஃபகத் பாசிலை வைத்து தனது அடுத்த படத்தை மணிரத்னம் இயக்கப்போகிறார் என வதந்திகளுக்கு பூச்சூடி அழகு பார்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல் ஆச்சர்யத்தையும் அதேசமயம் அப்படி நடந்தால் பிரமிப்பையும் தரக்கூடியதாக இருக்கிறது. ஆம், மணிரத்னம் அடுத்ததாக இயக்கப்போகும் படத்தின் ஹீரோ ஆந்திர சினிமாவின் முடிசூடா இளவரசன் மகேஷ்பாபுதான்.
இப்படி ஒரு முயற்சிக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதாவும் தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லியிருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப்படம் தயாராகும் என்று தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இருவரும் இணைந்திருக்க வேண்டியது. ஆனால் நேரம் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. மணிரத்னமும் ‘நாயகன்’, ‘தளபதி’ படங்களுக்கு பின் நீண்டகாலம் கழித்து தனக்குள் ஒளிந்திருக்கும் ஆக்ஷன் அவதாரத்தை மீண்டும் இந்தப்படத்தில் காட்டப்போகிறார் என்றும் அவரது வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அப்படின்னா இந்த வருடம் புதிய திருவிழாவுக்கு காப்பு கட்ட இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.