‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’ படத்தின் க்ளாசிக் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபு நடித்துவரும் அடுத்த படத்தின் பெயர் ‘1-நேனொக்கடினே’. இந்தப்படத்தில், மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார், கீர்த்தி சனான். நம்ம சாயாஜி ஷிண்டே தான் வில்லன். ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், இந்தப்படத்தில் சரிவிகிதத்தில் மசாலா பொடி தூவியுள்ளார் இயக்குனர் சுகுமார்.
படத்திற்கு இசையமைப்பவர் தேவிஸ்ரீபிரசாத். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், மகேஷ்பாபுவின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. தவிர இப்போதுதான் படத்திற்கான முதற்கட்ட விளம்பரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு கிடைத்துள்ள வரவேற்பு தனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என மகேஷ்பாபு தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவின் ட்விட்டர்தளம் சில மாதங்களாக வைரஸ்களால் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது. ஒரு சிறிய போராட்டத்திற்குப் பிறகு ட்விட்டர் தொழில்நுட்பக்குழு அதை சரி செய்ய, ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு இப்போது மீண்டும் ட்விட்டருக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மகேஷ்பாபு.
2014 சங்கராந்தி பண்டிகையை(பொங்கல்) முன்னிட்டு இந்தப்படம் ஆந்திராவில் வெளியாக இருக்கிறது. அதற்கு அச்சாரமாக வரும் 18ஆம் தேதி இசைவெளியீட்டு விழாவை நடத்த இருக்கிறார்கள்.