நடிகர்கள் : விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சூனு சூட், சந்தானம், மனோபாலா, சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, நான் கடவுள் ராஜேந்திரன்
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்
சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மத கஜ ராஜா’ மக்களை மகிழ்விக்குமா? அல்லது ஐயயோ…என்று கதறவிடுமா?, விமர்சனத்தை பார்ப்போம்.
தனது பள்ளி ஆசிரியரின் மகள் திருமணத்திற்கு செல்லும் விஷால், அங்கு தனது நண்பர்களை சந்திக்கிறார். மனைவி, குழந்தைகளோடு அவர்கள் மகிழ்ச்சியாக வாந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷால் நினைக்கும் போது, அவர்கள் ஆளுக்கு ஒரு பிரச்சனையில் சிக்கி, விரக்தியின் உச்சத்தில் இருப்பது தெரிய வருவதோடு, அவர்களின் பிரச்சனைக்கு பெரும் தொழிலதிபர் சோனு சூட் தான் காரணம் என்பதையும் விஷால் அறிந்துக் கொள்கிறார்.
சோனு சூட்டை சந்தித்து சமாதானமாக பேசி தனது நண்பர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விஷால் முயற்சிக்க, அது முடியாமல் போகிறது. உடனடியாக அதிரடியாக களத்தில் இறங்கும் விஷால், வில்லன் சோனு சூட்டின் பலங்கள் எதுவோ அவற்றின் மூலமாகவே அவரை வீழ்த்து தனது நண்பர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அதை அவர் எப்படி செய்கிறார்?, என்பதை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் சொல்வதே ‘மத கஜ ராஜா’ படத்தின் கதை.
விஷல் துடிப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி நகைச்சுவைக் காட்சிகளிலும் அசரடிப்பவர், இரண்டு நாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பார்வையாளர்களின் காதல் புகை வர வைக்கிறார்.
அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் கமர்ஷியல் ஏரியாவுக்கு பொருத்தமான நாயகிகளாக வலம் வருகிறார்கள். பாடல் காட்சிகளில் மட்டும் இன்றி படம் முழுவதும் கிடைக்கும் சிறிய இடங்களில் கூட தங்களது பெரிய இடுப்புகளின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் தீ மூட்டுகிறார்கள்.
விஷாலின் நண்பராக நடித்திருக்கும் சந்தானம், ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார். அவருடன் மனோபாலா, சுவாமிநாதன், மனோகர், நான் கடவுள் ராஜேந்திரன் என மற்ற காமெடி நடிகர்கள் இணையும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் சூனு சூட், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா என ம்ற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். பின்னணி இசை கமர்ஷியல் ரகம். ரிச்சர் எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளபளக்கும் ரகம்.
12 வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய படம் என்றாலும், இப்போதும் ரசிகர்களை மகிழ்விக்கும் அத்தனை கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக கையாண்டு படத்தை முழுக்க முழுக்க பொழுதுபோக்காக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
காமெடி, கவர்ச்சி, ஆக்ஷன், மாஸ் என அனைத்தும் ஏற்றம் இறக்கம் இல்லாமல் மிக சரியான அளவில் பயணித்து ரசிகர்களை மகிழ்விப்பதோடு, படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்னதாக இயக்குநர் சுந்தர்.சி நிகழ்த்தியிருக்கும் மேஜிக்கை லாஜிக் இல்லாமல் பார்த்தால், சிரித்து சிரித்து வயிறு புன்னாவது உறுதி.
ரேட்டிங் 3/5
Comments are closed.