மாரி – விமர்சனம்

218

ஏரியா தாதாவான சண்முகராஜனின் வலது கையாக இருக்கும் தனுஷ் (மாரி) வைத்தது தான் சட்டம்.. புறா பந்தயம் நடத்துவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவருடைய இடத்தையும் அதிகாரத்தையும் பறிக்க நினைக்கிறார் இன்னொரு கையான மைம் கோபி.. அந்த பகுதிக்கு புதிதாக குடிவரும் காஜலுக்கு தனுஷின் டார்ச்சர் பிடிக்காமல் போகிறது.

அந்த ஏரியா போலீஸ் எஸ்.ஐ விஜய் யேசுதாஸ், காஜல் மூலமாக பொறி வைத்து, தனுஷை தந்திரமாக ஜெயிலுக்கு அனுப்புகிறார். கூடவே சன்முகராஜனையும் உள்ளே தள்ளிவிட்டு மைம் கோபியும் எஸ்.ஐயும் சேர்ந்து ஏரியாவை தங்கள் வசம் கொண்டுவருகின்றனர். ஜெயிலில் இருந்து திரும்பி வரும் தனுஷ் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினாரா என்பதுதான் மீதிக்கதை..

‘செஞ்சுடுவேன்’’ என தனுஷ் சொல்லும் விதம் குழந்தைகளை கவரும் என்பதில் ஐயமில்லை. வி.ஐ.பியில் விசிலடிக்க வைத்த, அனேகனில் அசரவைத்த தனுஷ் இப்படி ஒரு கதையில் கூட நடிப்பாரா என்கிற ஆச்சர்யம் படம் முடிந்தபின்னும் கூட நம்மைவிட்டு விலகவில்லை. காஜல் அகர்வாலின் நடிப்பை விட, அவரது கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக, புதுமையாக வடிவமைத்திருந்த இயக்குனர் பாலாஜி மோகனை காஜல் நீண்டநாளைக்கு மறக்கவே மாட்டார்.

தனுஷின் அடிப்பொடிகளாக வரும் ரோபோ சங்கரும் அடிதாங்கி வினோத்தும் சில இடங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக விஜய் யேசுதாசுக்கு உருவம் பொருந்திய அளவுக்கு உடல் மொழியும் வசன உச்சரிப்பும் பொருந்தவில்லை என்பதே உண்மை.. கான்ஸ்டபிளாக வரும் காளி வெங்கட்டின் நடிப்பு யதார்த்தம்.

அனிருத் வந்து ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டால் பாடல் ஹிட்டாகிவிடும் என்கிற மாயை இதில் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். ஒரே ஏரியாவுக்குள்ளேயே கதை சுற்றி வருவதால் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கும் வேலை குறைவுதான்.

பாலாஜி மோகனின் முந்திய படத்தையும் இந்தப்படத்தையும் பார்க்கும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் (கதையை அல்ல இடத்தை) மட்டுமே கதைசொல்ல வருமோ என்கிற சந்தேகம் தான் தோன்றுகிறது.. படத்தின் நூறு சதவீத லொக்கேஷனும் அந்த ஒரே செட்டுக்குள் தான் என்பது படம் பார்க்கும் நமக்கு அயர்ச்சியைத்தான் தருகிறது.

விஜய் யேசுதாசுக்கும் தனுஷுக்குமான மோதல் உக்கிரமாக இருக்க வேண்டாமா..? தனுஷிடம் முதல் காட்சியில் அடி வாங்கி விட்டு போன எதிர் குரூப் ஆட்கள், மறுநாளும் மாமூல் வசூலிக்க வருவது சரியான காமெடி.. அரத பழசான கதை என்றாலும் கூட, காட்சிப்படுத்தலில் கூட எந்தவித புதுமையையும் கையாள்வதற்கு பாலாஜி மோகன் தவறிவிட்டார் என்பதை அவர் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்..

Comments are closed.