
விருப்பமில்லாத இரண்டு உள்ளங்கள் திருமணத்தால் இணைக்கப்பட்டால் என்ன நடக்கும்..? என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை வேறொரு கண்ணோட்டத்தில் சொல்லவந்திருக்கும் 1001வது படம் தான் இந்த மாலை நேரத்து மயக்கம்.
நாயகன் பாலகிருஷ்ணன் கோலாவிற்கும் நாயகி வாமிகாவுக்கும் இடையே நிலவும் பொருந்தாத மணவாழ்க்கையை படம் முழுமைக்கும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கீதாஞ்சலி செல்வராகவன். செக்ஸ் குறித்த சரியான கண்ணோட்டம் இல்லாததால் தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்யும் அறிமுக நாயகன் பாலகிருஷ்ணன் நடிப்பில் அதிரவைக்கிறார்… அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு
என்னதான் தனது சுயம் பாதிக்கப்பட கூடாது என பெண்ணியத்தை தூக்கிப்பிடிக்கும் கதாபாத்திரமாக நாயகி வாமிகா சித்தரிக்கப்பட்டாலும், அவரது தெளிவற்ற, குழப்பமான சிந்தனைகளும் நடவடிக்கைகளும் தான் அவளது கணவனின் முன்னுக்குப்பின் முரணான நல்லவன்-கெட்டவன் என்கிற செயல்பாட்டிற்கு காரணமாக அமைவதையும் காட்சிக்கு காட்சி பகிரங்கப்படுத்துவதில் நடுநிலை வகித்திருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரத்திற்கு வாமிகாவும் உயிர் கொடுத்துள்ளார்.
ஆனால் ஒரே அபார்ட்மென்ட், கணவன்-மனைவி சண்டை, கோபதாபங்கள், சைக்கோவாக மாற தயாராகும் பகீர் கணங்கள், காதல் விஷயத்தில் கதாநாயகியின் இரட்டை நிலை என பல அலுப்படைய வைக்கும் நிகழ்வுகள் திரும்ப திரும்ப காட்டப்படுவதை கத்திரி போட்டிருக்கலாமே.. கணவனே தன் மனைவியை பாலியல் பலாத்காரம் பண்ணுகிறான் என்கிற காட்சியை அவ்வளவு செய்முறை விளக்கமாக காட்டத்தான் வேண்டுமா..? பெண் இயக்குனர் தான் என்றாலும் அவரும் வியாபார நோக்கில் அதை காட்சிப்படுத்தி இருப்பது சற்றே அதிர்ச்சி தான்.
ஆண், பெண் ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துப்போனா கல்யாணம் பண்ணுங்க.. வேற வழியில்லாம சூழ்நிலையால அப்படி கல்யாணம் கட்டிக்கிட்டாலும், இரண்டு தரப்பும் ஆரம்பத்துலேயே பேசி தீர்த்துக்குங்க என்று சொல்வதற்காக ஒரு படத்தை செல்வராகவன் துணையுடன் அவரது மனைவி கீதாஞ்சலி எடுத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்
Comments are closed.