“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..!

246

நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) மட்டும் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்த விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் சூர்யா பேசியபோது, “கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.

கல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள்.

அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். வீட்டில் அப்பா – அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும். . நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது” என தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார் சூர்யா.

Comments are closed.