தமிழில் ‘காசி’, ‘என் மனவானில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளவர், காவ்யா மாதவன். மலையாள முன்னணி நடிகையான இவர், தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆனால் கிடைத்த காசை வாங்கிக்கொண்டு ஏதோ படங்களில் நடித்தோம் என்பதில் அவருக்கு உடன்பாடில்லையாம்.
தான் நடிக்கும் படங்கள் நல்ல கதையம்சம் உள்ளவையாக, சமூக பொறுப்புள்ளவையாக இருக்கிறதா என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து தான் கதைகளை தேர்ந்தெடுக்கிறார். தற்போது அவர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருக்கும் ‘லாஸ்ட் பெல்’ திரைப்படமும் அந்தவகையை சேர்ந்ததுதான்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையை காட்டி ஆங்காங்கே பள்ளிகளை இழுத்துமூடும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ‘லாஸ்ட் பெல்’ படத்தில் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தில் தான் வேலைபார்க்கும் டீச்சராக காவ்யா மாதவன் நடிக்க இருக்கிறாராம்..
வகுப்பிற்கு மாணவர்கள் வருவது படிப்படியாக குறைந்து ஒரே ஒரு மாணவன் மட்டுமே வந்தாலும் அவனுக்காக இடைவேளை பெல் அடிப்பது, பாடங்கள் நடத்துவது, மாலையானதும் லாஸ்ட் பெல் அடிப்பது என தனது பணியை செவ்வனே செய்யும் கதாபாத்திரம் காவ்யா மாதவனுடையது. இந்தப்படம் அரசுப்பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அதுவே தனக்கு கிடைக்கும் திருப்தி என்கிறாராம் காவ்யா மாதவன்.
Comments are closed.