ஜெய். செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்க தோணுதே’ என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜா பேசினார். அவர் பேசும் போது பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான் . ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார்.ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன்.ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும்.
இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடிமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விடமுடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப் பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது. என் மூத்தமகன் செல்வா என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.
துள்ளுவதோ இளமை’யில் நடித்தபோது அப்போது . ப்ளஸ் ஒன் படித்த தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, ஈடுபாடில்லை. பைனான்சியர் பணம் கொடுத்துவிட்டு ‘அப்பனும் புள்ளையும் கேமரா வச்சிட்டு விளையாடறாங்க’ என்றார் கிண்டலாக. ‘என் ராசாவின் மனசிலே’ சமயத்தில் கூட என்னையும் ராஜ்கிரணையும் ‘கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது’ என்றார்கள். இப்படி எல்லாரும் அவமானங்களைத் தாண்டித்தான் வர வேண்டும்.
மதுரையில் 1974–ல் மெஜுரா கோட்ஸ் நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை. அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான்.
எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. இன்று சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்று சினிமா சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.” என்று தனது மனக்குமுறல்களை கொட்டினார் கஸ்தூரி ராஜா.

Comments are closed.