வரும் ஏப்-7ஆம் தேதி தான் இயக்கியுள்ள ‘காற்று வெளியிடை’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான முகூர்த்த தேதியை குறித்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம்.. கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த்ள்ளார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை..
தனது குருநாதரான மணிரத்னம் படத்தில் கார்த்தி முதன்முதலாக ஹீரோவாக நடிப்பதும், கார்த்தியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக இசையமைபதும் இந்தப்படத்தின் ஹைலைட்ஸ்.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நேற்று நடத்தினார்கள்.. இதில் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படக்குழுவினர் அனைவரும் ஆஜராக சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று படத்தின் மற்ற மூன்று பாடல்கள் சேர்த்து ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய படத்தின் நாயகன் கார்த்தி, “இது எனது கனவு படம் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். மணி சார் உருவாக்கிய இந்த கதையைப் படித்தப்போது சர்ப்ரைஸாக இருந்தது. அதே நேரம் என்னால் இந்த கதையில், இந்த கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. காரணம் இந்த கதையில் வரும் ஃபைட்டர் பைலட் வருண் என்ற கதாபாத்திரம் சாதாரணமானது அல்ல.
இதை உண்மையிலேயே நான் பண்ணணுமா என்று மணி சாரிடம் கேட்டேன். ஆனால் அவர் மீசை எடுக்கணும், வெயிட் குறைக்கணும் என்று சொல்லி என்னை பயமுறுத்தினார். சரி கடைசியாக செய்து பார்ப்போம் என்று களத்தில் இறங்கினோம். ஆனால் அந்த ஃபைட்டர் பைலட் என்ற விஷயம் புதுமையாக இருந்தது. அதை தெரிந்துகொள்ள ஒரு பைலட் கூட டிராவல் பண்ணி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
மணி சாரும் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். மணி சார் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஏர் ஃபோர்ஸ் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதை தான் இது. அதற்காக மணி சார் இயக்கிய ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’ போன்ற படங்களை நினைவில் வைத்து கொண்டு இந்த படத்திற்கு வராதீர்கள். இது மணி சாரின் வேறுவிதமான ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி படம். உங்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் தரும் ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும்” என்றார் கார்த்தி.

Comments are closed.