நடிகர்கள் : சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், கோவை சரளா, போஸ் வெங்கட், நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : வெற்றி
இயக்கம் : சிவா
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல் ராஜா
சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘கங்குவா’, படக்குழு சொன்னது போல் பிரமிக்க வைக்கிறதா? விமர்சனத்தை பார்ப்போம்.
நிகழ்காலத்தில் கோவாவில் வாழும் சூர்யாவை தேடி சிறுவன் ஒருவன் வருகிறான். அவன் மூலம் சூர்யாவின் முன் ஜென்மம் நினைவுக்கு வர, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கங்குவா கதை தொடங்குகிறது.
ஐந்து தீவுகளில் இயற்கை வளம் அதிகம் உள்ள பெருமாச்சி தீவை கைப்பற்ற முயற்சிக்கும் ரோமானியப் படை, போர் புரிவதையே தொழிலாக கொண்ட பெருமாச்சி வீரர்களை எளிதில் வென்றிட முடியாது என்பதால், சதியின் மூலம் அவர்களை வீழ்த்த முடிவு செய்கிறது. அதன்படி, மற்றொரு தீவைச் சேர்ந்த நட்டி நட்ராஜுக்கு பணத்தாசைக் காட்டுகிறது. அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு ரோமானியப் படைகளுடன் இணைந்து, தனது சதி திட்டத்தால் பெருமாச்சி வீரர்களை கொன்று குவிக்கிறார். இதைக்கண்டு பொங்கும் பெருமாச்சி தலைவரின் மகன் சூர்யா, தனது மக்களை கொன்றவர்களை பழிதீர்ப்பதோடு, எதிரிகளை வேறோடு சாய்க்க நினைக்கிறார்.
சூர்யா தலைமையிலான பெருமாச்சியை வீழ்த்துவதற்காக உதிராவின் உதவியை ரோமானியப் படை நாடுகிறது. இரத்தத்தை கடவுளாக வணங்கும் இரக்கம் அற்ற இனமான உதிராவின் தலைவர் பாபி தியோல், பெருமாச்சியின் மீதான தனது பகையை தீர்த்துக்கொள்ள, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். அதன்படி, மேலும் சில தீவுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருமாச்சி மீது போர் தொடுக்க, அவர்களிடம் இருந்து சூர்யா தன் மக்களை காப்பாற்றினாரா?, நிகழ்கால சூர்யாவுக்கு முன் ஜென்மத்தை நினைவுப்படுத்திய சிறுவன் யார்? போன்ற கேள்விகளுக்கான விடையை ஃபேண்டஸி மற்றும் ஆக்ஷனோடு சொல்வது தான் ‘கங்குவா’.
தோற்றம், பார்வை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் சூர்யா கங்குவா என்ற கதாபாத்திரத்தை மக்களிடம் கடத்துவதற்கு கடினமாக உழைத்திருக்கிறார். சூர்யாவின் ஒவ்வொரு அசைவுகளும் கங்குவா உலகத்தை உண்மைக்கு நெருக்கமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரத்திற்கான அவரது அளப்பரிய அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுகிறது. நிகழ்கால சூர்யாவின் தோற்றமும், இளமையும் ரசிக்கும்படி இருந்தாலும் நடிப்பும் அவரது செயல்களும் வழக்கமானதாகவே இருக்கிறது.
உதிரா இனத்தின் தலைவராக நடித்திருக்கும் பாபி தியோலின் தோற்றம் மிரட்டலாக இருந்தாலும், அவருக்கான வாய்ப்பு குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலில் கவர்ச்சியாக தோன்றுவதோடு தனது பணியை முடித்துக் கொள்கிறார் நாயகி திஷா பதானி. வழக்கமான காமெடி என்றாலும் அதை எடுபடாதவாறு செய்திருக்கிறார் யோகி பாபு. ரெடின் கிங்ஸ்லி தேவையில்லாத பொருளாக வலம் வருகிறார். நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரேம் குமார் என தெரிந்த முகங்கள் பலர் இருந்தாலும், கதாபாத்திரங்களாக அவர்களின் முகம் மக்கள் மனதில் பதியவில்லை.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்தின் பிரமாண்டத்திற்கே பிரமாண்டம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. “நெருப்பு..”, ”தலைவா…” என பாடல்களிலும் கங்குவாவின் உலகத்தை பிரமிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது பீஜியம்கள் மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். நிகழ்கால கோவா காட்சிகள் மற்றும் கங்குவா உலகம் என இரண்டையும் வெற்றியின் கேமரா மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஹாலிவுட் படங்களை பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப், கங்குவா உலகின் பிரமாண்டத்தை மக்களிடம் நேர்த்தியாக கடத்தியது போல், அந்த கதையையும் சற்று நிதானமான உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கலாம். ஐந்து தீவுகள், அதன் மக்கள், அவர்களின் தோற்றம், உடை, இருப்பிடம், உணவு என கங்குவா என்ற ஒரு உலகத்தையே உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் மிலனின் பணி பிரமிக்க வைக்கிறது. சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் மற்றும் அவரது குழுவினர் மிக கடுமையாக உழைத்திருப்பது அனைத்து சண்டைக்காட்சிகளிலும் தெரிகிறது.
படத்திற்கு பெரும் பலமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயணித்தாலும், பல இடங்களில் தர்மற்ற கிராபிக்ஸ் காட்சிகளினால் படத்தின் தரமும் குறைந்து விடுகிறது.
கங்குவா உலகத்தை உருவாக்கிய விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை விவரிப்பதற்காக சொல்லப்படும் நிகழ்கால கதையும், அதில் வரும் கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையற்றதாக இருக்கிறது. திரைக்கதை மற்றும் காட்சிகள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்ந்தாலும் கதையும், கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் நிற்காமல், மின்னல் போல சட்டென்று கடந்து போவது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
ஒரு கதையில் கதாநாயகன் இருந்தால் நிச்சயம் கதாநாயகி என்பவர் இருப்பார், அவர் நாயகனுக்கு ஜோடியாக இல்லை என்றாலும் கதையில் முக்கிய பங்கு வகிப்பார். ஆனால், கங்குவா கதையில் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் இல்லாதது பெரும் ஏமாற்றம். அந்த ஏமாற்றத்தை மறைப்பதற்காக கங்குவாவிடம் போர் பயிற்சி பெற்ற பெண்கள், எதிரிகளை வீழ்த்துவது போன்ற ஒரு சண்டைக்காட்சியை வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த சண்டைக்காட்சியும் பெரிதாக எடுபடவில்லை.
சூர்யாவின் தோற்றம் மற்றும் நடிப்பு, கங்குவாவின் உலகத்தை நம்பும்படியாக சொன்ன இயக்குநர் சிவாவின் திரைக்கதை வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மூலம் படம் சற்று சுவாரஸ்யமாக பயணித்தாலும், அந்த சுவாரஸ்யம் முதல் பாதியோடு முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் இடம் பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தலைவலியை மட்டுமே கொடுக்கிறது.
ரேட்டிங் 3/5
Comments are closed.