நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தினா, ஜி.ஞானசம்மந்தம், வினோத் முன்னா
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் – பின்னணி இசை : ரேவா
ஒளிப்பதிவு : பி.வி.சங்கர்
இயக்கம் : பி.வி.சங்கர்
தயாரிப்பு : அக்சஸ் ஃபிலிம் பேக்டரி – ஜி.டில்லி பாபு
ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா நடிப்பில், அறிமுக இயக்குநர் பி.வி.சங்கர் இயக்கத்தில், அக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரிப்பில், நாளை (ஏப்ரல் 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘கள்வன்’ படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார். தனது நண்பர் தினாவுடன் சேர்ந்து சிறு சிறு திருட்டு செயல்களில் ஈடுபடுவது, மது அருந்துவது என்று இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், வனத்துறையில் காவலர் பணியில் சேருவதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார். அந்த கிராமத்தில் அடிக்கடி யானை வருவதோடு, யானையால் கிராம மக்கள் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதற்கிடையே, திருட போன இடத்தில் இவானாவை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர் மீது காதல் கொள்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் காதலை இவானா நிராகரித்தாலும், அவரை பின் தொடரும் போது, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை சந்திக்கிறார். தன்னைப் போல் ஆதரவற்றவராக இருக்கும் பாரதிராஜாவை தாத்தாவாகவும் தத்தெடுக்கிறார். காதலுக்காக முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுக்கிறார் என்று அவரது நண்பர் நினைக்கும் போது, பாரதிராஜாவின் தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சிகரமான திட்டம் இருப்பது தெரிய வருகிறது. அந்த திட்டம் நிறைவேறியதா?, அவருடைய காதலை இவானா ஏற்றுக்கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கெம்பன் என்ற கதாபாத்திரத்தில் கொங்கு தமிழ் பேசிக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஊதாரியாக சுற்றி வந்தாலும், காதல் தோல்வியால் கலங்கும் இடத்திலும், முதியவரை தத்தெடுத்து அதன் மூலம் ஆதாயம் தேடுவதற்கான திட்டம் போடும் போதும் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி மிரள வைக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் பயணிப்பவர், திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதிர்ச்சியான வயதில், ஏக்கமான மனநிலையோடு பரிதாபமாக அறிமுகமாகும் பாரதிராஜா, தாத்தாவாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் செய்து பேரன்களை அசரடிப்பது கலகலப்பு. தான் யார்? என்று தெரிய வருவதற்கு முன்பாகவே புலியை பார்வையால் விரட்டுவது, மலையாளத்தில் பேசி யானையை அடிப்பணிய செய்வது என்று தன் கதாபாத்திரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவர், தனிமையின் தவிப்பு பற்றி பேசி வருந்தும் காட்சியில், நடிப்பால் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, படம் முழுவதும் பயணிக்கிறார். அவ்வபோது சில வார்த்தைகள் மற்றும் தனது வழக்கமான பாணியின் மூலமாக சிரிக்க வைப்பவர், குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
பசுமை நிறைந்த காட்டின் அழகையும், அதில் இருக்கும் ஆபத்தையும் ஒளிப்பதிவாளராக மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் பி.வி.சங்கர், இயக்குநராக அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்கிறார்.
புலி, யானை போன்ற விலங்குகளை திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி சிறுவர்களையும் கவர்ந்திழுக்கும் இயக்குநர் நாயகனை யானை விரட்டம் காட்சியை பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காதல், துரோகம், தவிப்பு, பாசம் என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய அழகான ஒரு கதையை, பசுமை நிறைந்த வனப்பகுதியின் பின்னணியில் மிக இயல்பாக சொல்லி ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறான் இந்த ‘கள்வன்’.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.