கபடம் – விமர்சனம்

204

வசதியான சச்சினுக்கு ஐ.டி.நிறுவனத்தில் வேலைபார்க்கும் அங்கனா ராயுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. திருமணத்திற்கு முன் அங்கனாவை காதலிக்க துவங்குகிறார் சச்சின். ஆனால் அதேசமயம் அவருடன் ஆழமாக பழக விரும்பும் அங்கனாவின் நடை உடை, செயல்பாடுகளை தனது குறுகிய கண்ணோட்டத்தில் வேறுவிதமாக பார்த்து அவர் மனம் புண்படும் வகையில் விமர்சிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வெறுப்படையும் அங்கனா, சச்சினுடனான திருமண நிச்சயத்தை முறித்துக்கொள்ள நினைக்கிறார். அந்த கோபத்தில், குழப்பத்தில் இருக்கும் அங்கனாவை சச்சினின் நண்பரான ஆதித்யா சாதுர்யமாக தனது காதல் வலையில் வீழ்த்துகிறார்.

சச்சினிடம் தான் ஊருக்கு செல்வதாக பொய்சொல்லி பஸ் ஏறிவிட்டு, சிறிது தூரம் சென்றதும் இறங்கி ஒரு ஹோட்டல் அறைக்கு செல்கிறார் அங்கனா. ஆனால் சந்தேகத்துடன் அவரை பின் தொடரும் சச்சினுக்கு அங்கனா தன்னை ஏமாற்றுகிறாரோ என கோபம் கிளம்புகிறது. அதனால் அவரை கொலை செய்யும் முடிவோடு அவருக்கு தெரியாமல் எதிர் அறையில் தங்குகிறார் சச்சின்.

இதற்கிடையே தனது நண்பன் ஆதித்யாவுக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்கிறார் சச்சின். ஆனால் அவரோ அப்படி எதுவும் செய்துவிடாதே, நான் வருகிறேன் என்று சொல்ல, அவருக்கு 20  நிமிடம் அவகாசம் கொடுத்துவிட்டு, அங்கனா தங்கி இருக்கும் அறையை தனது அறையில் இருந்து நோட்டமிடுகிறார்.

இங்கேதான் ட்விஸ்ட்.. இந்த போனை அட்டென்ட் செய்யும் ஆதித்யா இப்போது இருப்பதும் அங்கனா தங்கியுள்ள அதே அறையில்தான். இது சச்சினுக்கு தெரியாது. எதிர் அறையில்,  தனது காதலியுடன் இருப்பது தனது நண்பன் தான் என்பதை சச்சின் அறிந்துக்கொண்டாரா, அவரிடமிருந்து இருவரும் தப்பினார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

பெட்ரூமில் பெண்களின் நிர்வாண ஓவியங்களை ஒட்டி வைப்பது, ஆனால்  தான் திருமணம் செய்ய இருக்கும் அங்கனா தன்னுடன் பைக்கில் நெருக்கமாக பின்னால் உரசியபடி அமர்ந்ததும் நெளிவது, அவரது ஒவ்வொரு செயலையும் தான் ஏதோ புத்தன் என்கிற கண்ணோட்டத்தில் விமர்சிப்பது என கதாநாயகன் சச்சின் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இது போன்ற குழப்பவாதி கதாபாத்திரங்கள் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

கதாநாயகி அங்கனா ராய். ஹோம்லி, மாடர்ன் என இரண்டு விதமாக பல இடங்களில் அழகாக பளிச்சிடுகிறார். ஒரு பெண் தனக்கு கணவனாக வரப்போகிறவன் மீது திருமணத்துக்கு முன் நெருங்கி(!) பழக விரும்புவதை யதார்த்தமான உணர்வுகளால் பிரதிபலிக்கிறார்.

காதலித்து திருமணம் செய்ய முடியாத இளைஞர்கள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தனது திருமணம் வரையில் காதலை அனுபவிக்க முற்படுவது இயற்கை. ஆனால் அங்கே இருவருக்குள்ளும் ஒரு புரிதலின்மை ஏற்பட்டால்..? சந்தேகம் தோன்ற ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதை ‘கபடம்’ மூலம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜோதிமுருகன்..

ஆனால் “நான் என்ன தப்பு பண்ணினேன்.. நான் ஏன் வீணாக சாகவேண்டும்” என நியாயமாக குரல் எழுப்பும் குற்றமற்ற கதாநாயகி கொல்லப்படுவதும் சந்தேக புத்தியுள்ள கொலைகார கதாநாயகன் எந்தவித தண்டனையும் இல்லாமல் புத்திசாலித்தனமாக தப்பிப்பதும் தான் நம் மனதை உறுத்துகிறது.

பின் குறிப்பு :  கதை விறுவிறுப்பாகவும்  சுவாரஸ்யமாகவும் இருந்தாலும் ஏற்கனவே வெளியான ‘உன்னோடு ஒரு நாள்’ மற்றும் ‘நேர் எதிர்’  ஆகிய இரண்டு படங்களின் கதை தான் இந்த படத்தின் கதையும். கதை மட்டும் அல்ல, திரைக்கதை, காட்சிகள் அனைத்தும் ஒன்றே.. எவ்வளவோ நல்ல கதைகலை வைத்திருக்கும் ஆட்கள் இருக்கிறார்களே.. பின்னே ஏன் ஜெயமுருகன் இப்படி நீங்கள்..?

Comments are closed.