கடந்த டிசம்பர்-23ம் தேதி இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார். அவரது பெயர் சினிமா உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும் என்றாலும் கூட இன்றைய தலைமுறையினருக்கு அவர் பெயரால் உதவிக்கரம் நீட்ட கே.பாலசந்தர் பவுண்டேஷன் என்ற ட்ரஸ்ட் அமைப்பை தொடங்கியுள்ளார் ‘கவிதாலாயா’வின் முக்கிய தூணாகவும் இருக்கும் அவரது மகள் புஷ்பா கந்தசாமி.
இந்த அமைப்பின் மூலம் பாலசந்தர் அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பயிலும் மாணவர்களில் சிறந்தவருக்கு கே.பாலசந்தர் பெயரில் ‘கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ்’ (Creative Excellence) விருதும் வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை-9ல் விழா நடத்தி நாடகம், திரைப்படம், சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.. பாலசந்தரின் மகன், மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருதும் அளிக்கப்படும்.
பாலசந்தரின் படைப்புகளை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தி பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்படுத்தப்படவும் இருக்கிறதாம்.. கூடவே பாலசந்தர் பற்றிய புத்தகங்களையும் வெளியிட இருக்கிறார்களாம். அதில் முதல் புத்தகமாக இயக்குனர் வசந்த் சாய் எழுதிய புத்தகம் பாலசந்தர் பிறந்தநாளான ஜூலை-9 அன்று வெளிவர இருக்கிறது.
Comments are closed.