
பேய்ப்படங்களின் அடிநாதமே பேய் யார் என்பதற்காக சொல்லப்படும் சுவாரஸ்யமான, வித்தியாசமான பிளாஸ்பேக் தான். அதை காமெடியாகவும் சொல்லலாம்.. சீரியசாகவும் சொல்லலாம்.. கொஞ்சம் சீரியசான பிளாஸ்பேக் ஒன்றை காமெடி உத்தியுடன் சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ஜாக்சன் துரை.
அயன்புரம் என்கிற ஊரில் ஜாக்சன் என்கிற பேயின் தொந்தரவு தாங்கமுடியவில்லை என மக்களிடம் இருந்து புகார் வர, அதை விசாரித்து சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார் போலீஸ் அதிகாரி சிபிராஜ். வந்த இடத்தில் ஊர் தலைவரின் மகள் பிந்துமாதவியை கண்டதும் காதல் கொள்கிறார்.. பெண் கேட்கப்போன இடத்தில் போட்டிக்கு வருகிறார் முறைமாமன் கருணாகரன்..
பேய் பங்களாவில் ஏழு நாட்கள் தங்கி, உயிருடன் யார் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் பெண் தருவேன் என செக் வைக்கிறார் பிந்துவின் தந்தை.. வீராவேசத்துடன் கிளம்பி அந்த பங்களாவுக்குள் நுழையும் இருவருக்கும் பேயினால்.. இல்லையில்லை பேய்களினால் தினசரி விதவிதமான அனுபவம் ஏற்பட்டு உயிர்போய் உயிர் வருகிறது..
வெளிநாட்டு ஜாக்சன் துரை பேயும் அதன் கூட்டணியும் ஒருபக்கம் தாக்க, இன்னொரு பக்கம் சத்யராஜ் மற்றும் அவரது கூட்டணி பேய்களின் அட்டகாசம் வேறு.. இந்த பேய்களின் நோக்கம் என்ன..? டார்கெட் யார் என ஆராய்ச்சியில் இறங்கும் சிபிராஜ், கருணாகரன் அன் கோ, பேய்களை விரட்டினரா.? இல்லை பேய்களால் விரட்டப்பட்டனரா..? என்பது க்ளைமாக்ஸ்.
சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக பில்டப் காடும் காட்சிகளை விட, பேய் பங்களாவில் பயந்து நடுங்கும் காட்சிகளே அதிகம் சிரிப்பை வரவழைக்கின்றன… அவருடன் கூடவே கருணாகரனும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். சத்யராஜின் புரட்சி வீரன் அவதாரமும் பேய் அவதாரமும் சூப்பர் என்றாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ரிப்பீட் காட்சிகளால் அவரை நன்றாக வீணடித்திருக்கிறார்கள்.
பிந்துமாதவி வரும் நேரம் குறைவு என்றாலும் அவரும் காட்சிகளில் எல்லாம் கிராமத்துச்சிட்டாக முந்தைய படங்களைவிட அழகாக ஜொலிக்கிறார்.. நடிப்பிலும் கூட. மொட்டை ராஜேந்திரன் (இவரும் பேய் தான்) ‘கேட்டை மூடுடா’ என்கிற வசனத்திற்கு அவ்வளவு கைதட்டல். யோகிபாபுவை இதில் மேக்ஸிமம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.. அவரது கவுன்ட்டர்களும் நிறையவே சிரிக்க வைக்கின்றன.
மொட்டைத்தலை ஜாக்சன் துரையாக வரும் சச்சேரியும் பிரமாதப்படுத்துகிறார். சித்தார்த் விபினின் பின்னணி இசை திகிலூட்டுவதா, சிரிக்கவைப்பதா என நன்றாக குழம்பி இரண்டையும் மாறிமாறி செய்திருக்கிறது.. பேய் பங்களா காட்சிகளில் யுவாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.
காதலனை கொன்றதற்காக பழிவாங்கும் பேய், பிறந்ததுமே தன்னை அனாதையாக்கிய பெற்றோரை பழிவாங்கும் பேய், இறந்தபோது கடைசி நிமிடத்தில் பார்த்த நபரை பாலோ பண்ணும் பேய் என ஒவ்வொருவரும் ஏதாவது பேய்க்காரணம் கண்டுபிடித்து படமெடுத்து பல்பு வாங்க, பேய்களுக்கான பிளாஸ்பேக்கை யாரும் எதிர்பாராத புதிய கோணத்தில் சொன்னதற்காக இயக்குனர் தரணிதரனுக்கு முதலில் ஒரு சபாஷ் போட்டு விடலாம்.
ஆனால் அந்த சுவாராஸ்யத்தை படம் நெடுக தக்க வைத்திருகிறாரா என்றால் இலையென்றே சொல்லவேண்டும்.. முன்பாதியை கலகலப்பாக கொண்டுபோன இயக்குனர், இடைவேளைக்குப்பின் வரும் ரிப்பீட் காட்சிகளை தவிர்த்து, ஆடியன்ஸுக்கு குழப்பம் வாரதவாறு விளக்கம் தரும் திரைக்கதை அமைத்திருந்தால் படம் ஏ கிளாசாக அமைந்திருக்கும்.
Comments are closed.