
தமிழ்சினிமாவில் 2௦ வருடங்களாக பிரபல இசையமைப்பாளராக இருக்கும் சத்யராஜின் ஆணவப்போக்கை சகிக்க முடியாத இயக்குனர் ஒருவர், சத்யராஜின் உதவியாளராக வேலைபார்க்கும் எஸ்.ஜே.சூர்யாவை தனது படத்திற்கு இசையமைக்க வைக்கிறார். பாடல்கள் ஹிட்டாக, மொத்த சினிமாவும் எஸ்.ஜே.சூர்யா பக்கம் திரும்புகிறது..
இதனால் வாய்ப்பின்றி ஊருக்கு ஒதுக்குபபுறமான பங்களாவில் முடங்கும் சத்யராஜின் மனதில் எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. அதற்காக அவர் கையாளும் முறைகளால் மனரீதியாக பாதிக்கப்படுகிறார் சூர்யா. பைத்தியக்காரத்தனமான அவரது நடவடிக்கைகளால் சினிமா உலகமும் அவரைவிட்டு ஒதுங்குகிறது.. சத்யராஜ் எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்க அப்படி என்னதான் செய்தார்..? அதிலிருந்து சூர்யா மீண்டாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்..
எல்லா தொழிலும் போட்டி, பொறாமை, ஈகோ என்பது இருக்கத்தான் செய்கிறது. ஒருவரின் வீழ்ச்சி இன்னொருவரின் வளர்ச்சியாகும்போது அங்கே வன்மம் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ‘இசை’ உலகத்தின் மூலம் உருவம் கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரு நடிகராக வழக்கமான, ஹைபிட்ச்சில் பேசி, சட்டென கீழே இறங்கும் ‘சவுண்ட் அன்ட் மியூட்’ சூர்யா தான் இந்தப்படத்திலும்.. ஆனால் பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.. சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.. இன்னும் சில காட்சிகளில், குறிப்பாக காதல் காட்சிகளில் ‘அய்யே’ என முகம் சுழிக்கவும் வைக்கிறார்.. தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக அவர் நினைக்க ஆரம்பித்தவுடன், அதற்குப்பின் வரும் காட்சிகளில் க்ளாப்ஸ் வாங்குகிறார்..
மெல்லிசையில் வில்லத்தனம் காட்டுகிற கேரக்டரில் அற்புதமாக பொருந்துகிறார் சத்யராஜ்.. அவரது வேலையாளான கஞ்சா கருப்புவுக்கும் அவருக்கும் அடிக்கடி நடக்கும் உரையாடல் செம காமெடி.. தனது போட்டியாளரை பழிவாங்க இந்த அளவுக்கு போவார்களா என நாம் சந்தேகப்பட்டால், ஆம் என தனது நடிப்பால் நம்பவைத்திருக்கிறார்.
ஹீரோயின் சாவித்திரி, இதுவரையிலான எஸ்.ஜே.சூர்யாக்களின் கண்டுபிடிப்புகளிலேயே ரொம்ப சாதராணமாக இருக்கிறார்… படம் முழுவதும் இவரையே பார்க்கவேண்டியிருப்பதுதான் நம்மை சோதிக்கிறது.. அதற்கு பரிகாரமாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பால் ஏதோ கொஞ்சம் ஈடுகாட்டுகிறார்.
கஞ்சா கருப்பு தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.. இயக்குனராக நடித்திருக்கும் அழகம் பெருமாள் சீரியஸ் முகமும் இயக்குனர்களாகவே வரும் ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், ராஜூ சுந்தரம் காமெடி முகமும் காட்டியிருக்கிறார்கள். தூய தமிழ் பேசும் பாதிரியாராக வரும் தம்பி ராமையாவுக்கு வேலை குறைவுதான். கிராமத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உதவியாக வரும் துறுதுறு சிறுவன் புன்னகைக்க வைக்கிறான்..
படத்தில் சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அருவி கொட்டும் மலை உச்சியையும் அதன் அருகே அற்புதமான பங்களாவையும் பார்க்கும்போது நாமும் இப்படி ஒரு இடத்திற்கு போய்வர மாட்டோமோ என ஏக்கம் எழத்தான் செய்கிறது. இசைப்பணியை சூர்யாவே கவனித்திருக்கிறார்.. பின்னணி இசையில் ஓரளவு ஸ்கோர் செய்பவர், பாடல்களில் தடுமாறியிருக்கிறார்.
நல்ல கதைக்கான பிளாட் பார்ம், கதையென்று சொன்னாலும் கூட யதார்த்த பிரபலங்கள் இருவரை பற்றியதாகவே தோன்றும் உண்மைத்தன்மை, இடைவேளைக்குப்பின்னால் டெம்போ ஏற்றும் சதிவலை என ஒரு த்ரில்லருக்கான அம்சங்கள் படத்தில் நிறைய இருக்கின்றன.
ஆனால் படத்தின் நீளம் 3மணி 1௦ நிமிடம் என்பது மிகப்பெரிய மைனஸ்.. கிளுகிளுப்பிற்காக வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ள அரைமணி காதல் காட்சிகளை பாவம் பார்க்காமல் வெட்டி எறிந்தால் படம் இன்னும் கிரிப்பாக இருக்கும். ஒருவனை மானசீகமாக வீழ்ச்சியடைவதற்கு கையாளப்படும் தந்திரங்கள் ஏற்கனவே இருபது வருடத்திற்கு முந்தைய படங்களிலேயே வந்துவிட்டாலும், ஒருவனை பழிவாங்குவதற்காக ஒரு கிராமத்தையே எதிரி உருவாக்குகிறான் என்பதெல்லாம் லாஜிக் மீறல் என்றாலும், க்ளைமாக்ஸில் சூர்யா வைக்கும் ட்விஸ்ட்டால், சரி, போனால் போகிறது என அவற்றை மறந்து நமக்கு நாமே சமாதனம் சொல்லிக்கொள்வதால் தப்பிக்கிறது படம்..
மொத்தத்தில் ‘இசை’ சில பாதகமான அம்சங்களுடன் உருவாகியிருக்கும் ஒரு நல்ல படம்..
Comments are closed.