நடிகர்கள் : விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா, மனோ பாலா, பசி சத்யா
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : கோகுல் பினாய்
இயக்கம் : யுவராஜ் தயாளன்
தயாரிப்பு : பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
சிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்ற ’மாநகரம்’, ‘டாணாக்காரன்’, ’மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘இறுகப்பற்று’. கணவன், மனைவி இடையில் ஏற்படும் சண்டைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை பற்றிக்கொண்டதா? விமர்சனத்தை பார்ப்போம்.
விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளும், அது சரியாகி அவர்கள் வாழ்க்கை தொடர்ந்ததா? அல்லது தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப விவாகரத்தில் முடிந்ததா? என்பதை சொல்வது தான் படத்தின் கதை.
படத்தில் மூன்று தம்பதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை வைத்து கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மனிதர்களின் மனதுக்கு நெருக்கமாக படம் நகர்கிறது.
ஷ்ரத்த ஸ்ரீநாத், தம்பதிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் மனோதத்துவ நிபுணர் வேடத்திற்கு நூறுசதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது கணவருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறும் இடங்களில் மனைவியாகவும் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். விக்ரம் பிரபு முதல் முறையாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். மிக மென்மையான வேடத்தில், சண்டையை கூட மென்மையாக வெளிப்படுத்து மனவியை கோபித்துக்கொள்ளும் அவரது கோபம் கூட காதலாக தெரிகிறது.
மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து முடிவுக்கு வரும் விதார்த், அதற்கான நிஜ காரணத்தை சொல்லி தன் உள்ளத்தில் இருக்கும் ஏமாற்றங்களை வெளிப்படுத்தும் காட்சியில் அசுரத்தனமான நடிப்பு மூலம் அனைத்து நடிகர்களையும் ஓரம் கட்டி விடுகிறார்.
விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் அபர்ணதி சராசரி மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பும், கணவனுக்கான தவிப்பும் கைதட்டல் பெறுகிறது.
இளம் தம்பதிகளான ஸ்ரீ – சானியா ஜோடியின் நடிப்பும் மற்ற ஜோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், மனைவியை மட்டம் தட்டும் ஸ்ரீயின் குணமும், அதனால் பாதிக்கப்படும் சானியாவின் குமுறலும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படம் முழுவதும் கணவன் – மனைவிக்கு ஆலோசனை வழங்கும் காட்சிகள் தான் அதிகம் என்றாலும் அதை மிக அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருப்பவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தும் மாயாஜாலத்தை தனது கேமரா கண்கள் மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, வார்த்தைகள் புரியும் வகையிலும், நம் மனதில் பதியும் வகையிலும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்குவது படம் முழுவதும் இருந்தாலும் அதை ரசிக்க கூடிய காட்சிகளாக கொடுத்து பல இடங்களில் சிந்திக்க வைப்பதோடு, சிரிக்கவும் வைத்திருக்கும் இயக்குநர் யுவராஜ் தயாளன், வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.
கணவன், மனைவி இடையே பிரச்சனை வர பெரிய காரணம் எல்லாம் தேவையில்லை, என்று சொல்லும் படம், எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருக்க முடியாது, என்ற எதார்த்த உண்மையையும் புரிய வைத்திருக்கிறது.
காதலர்களாக இருக்கும் போது இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு மறைந்து போவது ஏன்? என்ற கேள்விக்கு மிக சரியான விடையளித்திருக்கும் இயக்குநர் யுவராஜ் தயாளன், அன்பு இருந்தும் அதை சரியான முறையில் பகிர்ந்துகொள்ள முடியாமல் தடுமாறும் தம்பதிகளுக்கு சிறப்பான வாழ்வியல் படமாக மட்டும் இன்றி பாடம் சொல்லும் விதமாகவும் படத்தை இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், அனைத்து மக்களும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக மட்டும் இன்றி, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாகவும் இந்த ‘இறுகப்பற்று’ இருக்கும் என்பது உறுதி.
ரேட்டிங் 4.3/5
Comments are closed.